Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

2026.06.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

2026.06.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்.

01. அம்பாந்தோட்டை மாநகர சபை எல்லைக்குள் கேலியபுர கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள காணித்துண்டை கைத்தொழில்கள், கொள்கலன்கள் மற்றும் அதுசார்ந்த அபிவிருத்திக் கருத்திட்டமொன்றை அமுல்படுத்துவதற்காக குத்தகை அடிப்படையில் வழங்கல்.


அரச காணிக் கட்டளைச் சட்டத்தின் 6(1) பிரிவின் ஏற்பாடுகளின் கீழ் அளிப்புப் பத்திரத்தின் மூலம் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு பாரப்படுத்தப்பட்டுள்ள அம்பாந்தோட்டை மாவட்டத்தின் மாநகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள கேலியபுர கிராம உத்தியோகத்தர் பிரிவில் அம்பாந்தோட்டை – கொன்னொருவ பிரதான வீதியின் எல்லையில் அமைந்துள்ள 108 ஏக்கர் 03 றூட் 37.85 பேர்ச்சர்ஸ் காணித்துண்டு குறைப் பயன்பாட்டுக் காணியாகக் காணப்படுகின்றது. குறித்த காணித்துண்டு நகர அபிவிருத்தி அதிகாரசபையால் வெளியிடப்பட்டுள்ள பாரிய அம்பாந்தோட்டை அபிவிருத்தித் திட்டத்தின் மத்திய வர்த்தக வலயத்தில் அமைந்துள்ளது. 


நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான தற்போது குறைப்பயன்பாடாகவுள்ள காணிகளைப் பொருத்தமான அபிவிருத்திப் பணிகளுக்குப் பயன்படுத்துவதற்காக விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவால் குறித்த காணித்துண்டு கைத்தொழில்கள், கொள்கலன்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அபிவிருத்திக் கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்குப் பொருத்தமானதென சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. 

அதற்கமைய, பொருத்தமான கருத்திட்டமொன்றை அமுல்படுத்துவதற்குப் பொருத்தமான முதலீட்டாளர்களுக்கு 50 வருடகால குத்தகை அடிப்படையில் காணித்துண்டை விடுவிப்பதற்கு சர்வதேச போட்டி விலைமுறிக் கோரல் முறைமையைப் பயன்படுத்தி முதலீட்டு முன்மொழிவுகளைக் கோருவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


02. ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிக்குரிய அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைந்த பணிச்சட்டகத்தின் கீழ் அமுல்படுத்தக்கூடிய ஆற்றல் வளங்களைப் ஆராய்வதற்காக சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்றை நியமித்தல்.


1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள ஊழியர் சேமலாப நிதியத்தின் மூலம் 2.5 மில்லியன் அங்கத்தவர்களுக்கும் அதிகமான ஊழயர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், அதன் சொத்து 4.9 ட்ரில்லியன் ரூபாய்களுக்கும் அதிகம் உள்ளது. 

ஊழியர் சேமலாப நிதியத்தின் பொறுப்பு, முதலீட்டு முகாமைத்துவம், நிதி நிர்வாகம் மற்றும் அங்கத்தவர்களின் அனுகூலங்களைச் செலுத்தும் பொறுப்பு இலங்கை மத்திய வங்கிக்கு இருப்பதுடன், தொழில் வழங்குநர்கள் மற்றும் ஊழியர்களைப் பதிவு செய்தல், இணக்கங்களை வலுவாக்கம் செய்தல், மீதித்தொகையை அறவிடுதல் மற்றும் சட்டத்தின் கீழுள்ள ஊழியர் உரிமைகளை சட்டபூர்வமாகப் பாதுகாக்கும் பொறுப்பு தொழில் திணைக்களத்திடம் காணப்படுகின்றது. 

1980 ஆம் ஆண்டின் 46 ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்டுள்ள ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம், தொழில் வழங்குநர்கள் மற்றும் ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முத்தரப்புப் பேரவை ஒன்றின் மூலம் நிர்வகிக்கப்படுகின்றது. குறித்த நிதியத்தின் மூலம் தற்போது 03 மில்லியன்களுக்கும் அதிகமான அங்கத்தவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், அதன் சொத்துப் பெறுமதி 637.5 மில்லியன்களுக்கும் அதிகமாகக் காணப்படுகின்றது. 

சமூகப் பாதுகாப்புக்கு முத்தரப்பு நிர்வாகமொன்று காணப்படுதல் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள சிறந்த நடைமுறையாகக் காணப்படுவதுடன், அது சர்வதேச தொழிலாளர் அமைப்பால் ஊக்குவிக்கப்படுகின்ற அடிப்படைக் கோட்பாடாகும். அதனால், அங்கத்தவர்களின் சொத்துக்கள் தொடர்பான முழுமையான சட்ட ரீதியானதும் மற்றும் நிதி ரீதியானதுமான பாதுகாப்பை உறுதி செய்து சர்வதேச ரீதியாக சிறந்த நடைமுறைகளுக்கு இணங்க ஊழியர் சேமலாப நிதியத்தின் மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் அனைத்துப் பணிகளும் அரசு, தொழில் வழங்குநர்கள் மற்றும் ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முத்தரப்புப் பேரவையின் கீழ் ஓருங்கிணைந்த நிர்வாகப் பணிச்சட்டகத்தின் கீழ்க் கொண்டு வருவதற்கான சாத்திய வளங்களைப் பரிசீலித்து விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்காக தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


03. இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் கையொப்பமிடப்பட்டுள்ள விமான சேவைகள் ஒப்பந்தத்தைத் திருத்தம் செய்தல்

இலங்கை அரசுக்கும் துருக்கி அரசுக்கும் இடையிலான விமான சேவைகள் ஒப்பந்தம் 2008.12.02 கையொப்பமிடப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் விமான சேவைகளுக்கான ஒழுங்குமுறைப்படுத்தல் பணிச்சட்டகத்தை மேலும் விருத்தி செய்வதற்கும், விமான சேவைகள் இணைப்;புக்களை மீளாய்வு செய்வதற்கும், இரு தரப்பினர்களும் பின்னர் கலந்துரையாடல்கள் மேற்கொண்டுள்ளதுடன், தற்போது காணப்படுகின்ற விமான சேவைகள் ஒப்பந்தத்தின் 11 ஆம் பிரிவின் (கட்டண) திருத்தங்களை மேற்கொள்வதற்கு உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. 

அதற்கான கலந்துரையாடல் குறிப்புக்கு இருதரப்பும் 2016.12.07 அன்று கையொப்பமிட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்தின் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கமைய, தற்போதுள்ள விமான சேவைகள் ஒப்பந்தத்தின் கட்டணச் சட்டகத்தை சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தரநியமங்களுக்கு இணங்கியொழுகும் வகையில் தயாரிப்பதற்காக இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் தற்போது காணப்படுகின்ற விமான சேவைகள் ஒப்பந்தத்தின் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களில் கையொப்பமிடுவதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


04. ஆசிய பசுபிக் ஒத்துழைப்பு விமான சேவைகள் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் 21 ஆவது செயற்குழுக் கூட்டம் மற்றும் 14 ஆவது ஆசியா மற்றும் பசுபிக் பிராந்திய விமான சேவைகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு ஒன்றியத்தை இலங்கையில் நடாத்துவதற்காக உபசரிப்புக்களை வழங்குதல்

பிராந்திய ரீதியாக இரண்டு பிரதான விமான சேவைகள் பாதுகாப்பு மாநாடுகள் இடம்பெறுவதுடன், ஆசிய பசுபிக் ஒத்துழைப்பு விமான சேவைகள் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் (CASP – AP) 21 ஆவது செயற்குழுக் கூட்டம் மற்றும் 14 ஆவது ஆசியா மற்றும் பசுபிக் பிராந்திய விமான சேவைகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு ஒன்றியத்திற்கான (RASCF) உபசரிப்புக்களை வழங்குவதற்கு இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

ஆசிய பசுபிக் ஒத்துழைப்பு விமான சேவைகள் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் செயற்பாட்டுக் குழு, சர்வதேச விமான சேவைகள் அமைப்பின் ஒத்துழைப்பு வான் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களில் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்கின்ற மாநாடாகும். குறித்த செயற்குழுவின் 2026 – 2027 காலப்பகுதிக்கான தலைமைப்பதவியை இலங்கை இம்மாநாட்டில் பொறுப்பேற்கவுள்ளது.


மேலெழுந்துவரும் அச்சுறுத்தல்கள், சர்வதேச சிவில் விமான சேவைகள் அமைப்பின் தரநியமங்கள் மற்றும் விதந்துரைக்கப்பட்டுள்ள நடைமுறைகளை அமுல்படுத்தல், இயலளவு விருத்திச் செயற்பாடுகள் மற்றும் அரசுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்புப் பற்றிக் கலந்துரையாடப்படும் பிராந்திய தளமாக ஆசியா மற்றும் பசுபிக் பிராந்திய விமான சேவைகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு ஒன்றியம் இயங்கி வருகின்றது. 

குறித்த இரண்டு மாநாடுகளுக்கும் 41 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புக்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 80 பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். அதற்கமைய, ஆசிய பசுபிக் ஒத்துழைப்பு விமான சேவைகள் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் 21 ஆவது செயற்பாட்டுக்குழுக் கூட்டம் 2026.06.23 மற்றும் 24 ஆம் திகதிகளிலும், மற்றும் 14 ஆவது ஆசியா மற்றும் பசுபிக் பிராந்திய விமான சேவைகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு ஒன்றியம் 2026.06.25 மற்றும் 26 ஆம் திகதிகளில் எமது நாட்டில் நடாத்துவதற்கான உபசரிப்புக்களை வழங்குவதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


05. யானை – மனித மோதல் முகாமைத்துவத்திற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தைத் தயாரித்தல்

கடந்த காலங்களில் இலங்கையின் சனத்தொகையில் ஏற்பட்ட அதிகரிப்பு, அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஏற்பட்ட விருத்தி, காடழிப்பு போன்ற காரணங்களால் காட்டு யானைகளின் வழக்கமான புலம்பெயர் இடைமாறு வழிகள் அழிந்து போனமை மற்றும் அவர்களுடைய புகலிடங்கள் அழிக்கப்பட்டமையால் இலங்கையின் 25 மாவட்டங்களில் 19 மாவட்டங்கள் மற்றும் 341 பிரதேச செயலகப் பிரிவுகளில் 134 பிரிவுகளில் நீண்டகாலமாக யானை – மனித மோதல் தொடர்ந்து வேகமாக அதிகரித்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. 

2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட காட்டு யானைகள் கணிப்பீட்டுக்கமைய 7,450 காட்டு யானைகள் இருக்கின்றமை கணிப்பிடப்பட்டுள்ளது. யானை – மனித மோதல்களால் ஆண்டுதோறும் மனித உயிர்களும் காட்டு யானைகளும் குறிப்பிடத்தக்களவு தொகை உயிரிழப்பதாகப் பதிவாகியுள்ளது. அத்துடன், காட்டு யானைகளால் வருடாந்தம் ஆயிரக்கணக்கான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்படுகின்றமையும் பதிவாகியுள்ளது. 

2020 ஆம் ஆண்டில் 'இலங்கையின் யானை – மனித மோதலைக் குறைப்பதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டம்' தயாரிக்கப்பட்டிருப்பினும், தற்போது யானை – மனித மோதல் நிலைமைகள் அக்காலத்துடன் ஒப்பிடுகையில் மாற்றமடைந்துள்ளமையால், அதற்குப் புதிய தேசிய செயற்பாட்டுத் திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியம் அடையாளங் காணப்பட்டுள்ளது. 

அதற்கமைய, யானை – மனித மோதல் முகாமைத்துவத்திற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை வரைவாக்கம் செய்வதற்கான படிமுறைகளை மேற்கொள்வதற்காக சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


06. பாடசாலை விடுதி வசதிகளை அபிவிருத்தி செய்தல்
எமது நாட்டின் பாடசாலைகளில் காணப்படுகின்ற விடுதிகளில் 126 விடுதிக் கட்டிடங்கள் பழுதடைந்த நிலைமையில் காணப்படுவதுடன், அவற்றின் பராமரிப்பு மற்றும் திருத்தங்கள் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது. 

அதனால் பாடசாலை விடுதிகளின் பௌதீக, சுகாதாரநல வசதிகள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகளின்மையால் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் கல்விச் செயலாற்றுகைகளுக்கு எதிர்மய விளைவுகளை ஏற்படுத்துகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. 

அதனால், விடுதிகளுக்குத் தேவையான வசதிகளை நவீனமயப்படுத்தி கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான தரப்பண்பான சூழலை உருவாக்க வேண்டிய தேவை அடையாளங் காணப்பட்டுள்ளது. 

அதற்கமைய, 1,008 மில்லியன் ரூபாய்கள் மதிப்பீட்டுச் செலவின் கீழ் பாடசாலை விடுதி வசதிகளை நவீனமயப்படுத்தும் கருத்திட்டத்தை 2026 – 2028 காலப்பகுதியில் அமுல்படுத்துவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. பதுளை - ஹாலிஎல வீதியின் ஒருபகுதியை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்தல்.


பதுளை – செங்கலடி வீதியை மேம்படுத்தும் கருத்திட்டத்திற்காக சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியம் (ழுகுஐனு) மற்றும் சவூதி அபிவிருத்தி நிதியம் (ளுகுனு) ஒருங்கிணைந்து நிதியனுசரணை வழங்கியுள்ளது. அதன்கீழ் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் கடன் தொகை மூலம் அமுல்படுத்தப்படும் அம்பாறை – உஹன – மஹஓயா வீதியை புனரமைப்பதற்கான கருத்திட்டத்தின் கீழ் ஏறத்தாழ 2.4 மில்லயின் அமெரிக்க டொலர்கள் எஞ்சுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

குறித்த மீதிக் கடன்தொகையைப் பயன்படுத்தி, 15 ஆண்டுகளுக்கும் அதிகமாகப் பயன்படுத்தியுள்ள மற்றும் தித்வா புயல் அனர்த்தத்தால் மோசமாக சேதமடைந்துள்ள 1.5 கிலோமீற்றர் வீதியை (கிலோமீற்றர் 11910620 தொடக்கம் கிலோமீற்றர் 12110200 வரை) புனரமைப்பு உள்ளிட்ட, பேராதனை – பதுளை – செங்கலடி வீதியின் (யு05) பதுளை - ஹாலிஎல வீதியின் 06 கிலோமீற்றர் பகுதியை (கிலோமீற்றர் 115 தொடக்கம் 121 வரை) 600 மில்லியன் ரூபாய்கள் மதிப்பீட்டுச் செலவின் கீழ் புனரமைப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


08. பேஸ்லைன் வீதியை நீடிக்கும் கருத்திட்டத்தின் iii ஆம் கட்டத்தை அமுல்படுத்துவதற்காக காணிச் சுவீகரித்தல் செயன்முறையால் பாதிப்புக்குள்ளாகின்ற சட்டவிரோதக் குடியிருப்பாளர்களை மீளக் குடியமர்த்தல்


பேஸ்லைன் வீதியை நீடிக்கும் கருத்திட்டத்தின் iii ஆம் கட்டத்தை அமுல்படுத்துவதற்காக காணிச் சுவீகரித்தல் செயன்முறையால் இடம்பெயர்கின்ற சட்டவிரோதக் குடியிருப்பாளர்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளரின் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

இக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளின் அடிப்படையில், இடம்பெயர்ந்துள்ள 29 குடும்பங்களுக்கு நகர அபிவிருத்தி அதிகாரபை மூலம் அமுல்படுத்தப்படும் 'சரசவி உயன' வீட்டுத்திட்டத்தில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இழக்கப்படுகின்ற வீட்டின் பரப்பளவானது வழங்கப்படவுள்ள வீட்டின் பரப்பளவு அதிகமாக இருத்தல், காணிச் சுவீகரிப்பின் போது ஒரே வீட்டில் உப குடும்பங்கள் சில வாழ்ந்து வந்தமை, விசேட தேவையுடைய திருமணமாகாதவர்கள் இருக்கின்றமை, பரிசீலனைகளின் போது முன்வைக்கப்பட்டுள்ள விசேட நிலைமைகள் மற்றும் விடயங்களைக் கருத்தில் கொண்டு, குறித்த 29 குடும்பங்களை விடவும் மேலும் 08 குடியிருப்பாளர்களுக்கு வீடுகளை வழங்குவதற்கு இக்குழு விதந்துரைத்துள்ளது. இவ்விதந்துரைகளை அமுல்படுத்துவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்திற்குள்ளாகும் குடும்பங்களை மீளக் குடியமர்த்தல் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிலத்தடி எண்ணெய்க் குழாய் வழியில் சட்டவிரோதமாகக் குடியமர்ந்துள்ள குடும்பங்களை மீள்குடியமர்த்துவதற்காக வீடுகளை ஒதுக்கி வழங்கல்

கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்திற்குள்ளாகும் 336 குடும்பங்கள் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிலத்தடி எண்ணெய்க் குழாய் வழியில் சட்டவிரோதமாகக் குடியமர்ந்துள்ள 72 குடும்பங்களுக்கான வீடுகளை வழங்கி, தற்போது குடியமர்ந்துள்ள இடங்களிலிருந்து அகற்ற வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. 

புதிய களனிப் பாலம் தொடக்கம் அத்துருகிரிய வரைக்குமான வெளிவட்டச் சுற்று வீதியையும் இணைத்து தூண்கள் மீது செல்கின்ற அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிக்கும் கருத்திட்டத்தை அமுல்படுத்தும் போது அகற்ற வேண்டிய குடியிருப்பாளர்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபை மூலம் அமுல்படுத்தப்படும் கொலன்னாவ 'சங்ஹிந்த செவன' ஹேனமுல்ல 'ஹெலமுத்து செவன' மற்றும் மாளிகாவத்த 'லக்ஹிரு செவன' போன்ற வீட்டுத் திட்டங்களில் 1,100 வீட்டு அலகுகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபை கொள்வனவு செய்துள்ளது. ஆயினும், தூண்கள் மீது செல்கின்ற நெடுஞ்சாலை வீதிக் கருத்திட்டத்தின் ஐஐ ஆம் கட்டத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தடை உத்தரவால் கருத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

அதனால், குறித்த கருத்திட்டத்திற்காக கொள்வனவு செய்யப்பட்டுள்ள கொலன்னாவ 'சங்ஹிந்த செவன' வீட்டுத்திட்ட அலகுகளில் 336 இனை கொலன்னாவ பிரதேசத்தில் தொடர்ச்சியாக வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்படுகின்ற குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதற்காகவும் மற்றும் ஹேனமுல்ல 'ஹெலமுத்து செவன' வீட்டுத்திட்டத்தில் 72 வீட்டு அலகுகளை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிலத்தடி எண்ணெய்க் குழாய் வழியில் குடியமர்ந்துள்ள குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதற்கும் பயன்படுத்துவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


10. நீர்கொழும்பு பிரதேச செயலகத்திற்கு புதிய கட்டிடமொன்றை நிர்மாணித்தல்

கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு பிரதேச செயலகம் நீர்கொழும்பு மாநகர சபை அதிகார எல்லைக்குள் அரசுக்குச் சொந்தமான காணியில் 50 ஆண்டுகள் பழைமையான 02 கட்டிடங்களில் தற்போது இயங்கி வருகின்றது. இவ்வலுவலகத்தில் 127 உத்தியோகத்தர்கள் கடமையாற்றுவதுடன், 1,500 இற்கும் மேற்பட்ட சேவை வழங்குநர்கள் நாளாந்தம் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு வருகை தருகின்றனர். ஆனாலும், உத்தியோகத்தர்களுக்கு கடமைகளை மேற்கொள்வதற்கும் மற்றும் அலுவலக உபகரணங்கள் மற்றும் பொருட்களைப் பேணுவதற்கு பிரதேச செயலகக் கட்டிடத்தில் போதியளவு இடவசதி இல்லை. ஆயினும், அக்கட்டிடத்தில் வெடிப்புக்கள் ஏற்பட்டும், தாழ்ந்து போயும், நீர்க்கசிவு மற்றும் ஏனைய வெடிப்புக்களாலும் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளமையால் சிரமங்களுடனும் பாதுகாப்பற்ற நிலைமையிலும் கடமைகளை மேற்கொள்ள நேரிட்டுள்ளது. அதனால், நீர்கொழும்பு பிரதேச செயலகம் தற்போது நீர்கொழும்பு பிரதேச செயலாளர் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள உடயார்தோப்பு கிராம உத்தியோகத்தர் பிரிவில் கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் காணியில் அமைப்பது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. 

அதற்கமைய, குறித்த காணியில் 398.60 மில்லியன் மதிப்பீட்டுச் செலவின் கீழ் நீர்கொழும்பு பிரதேச செயலகத்திற்கு நான்கு மாடிகளுடன் கூடிய புதிய கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கு பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


11. 'தித்வா' அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள வணக்கத்தலங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம்

'தித்வா' அனர்த்த நிலைமையால் 758 பௌத்த விகாரைகளும், 272 இந்துக் கோயில்களும், 199 முஸ்லிம் பள்ளிவாசல்களும் மற்றும் 99 கிறிஸ்தவ ஆலயங்களும் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளமை பதிவாகியுள்ளது. 

2026.04.27 அன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய ஒதுக்கப்பட்டுள்ள 200 மில்லியன்கள் உள்ளடங்கலாக, புத்தசாசன நிதியம், மத்திய கலாச்சார நிதியம் மற்றும் அநகாரிக தர்மபால மன்றத்தின் 800 மில்லியன் நிதியைப் பயன்படுத்தி தற்போது அவ்வணக்கத்தலங்களில் 178 இனை புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீதமாகவுள்ள வணக்கத்தலங்களில் மேலும் 90 இனை புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள 01/2026 ஆம் இலக்க சுற்றறிக்கையின் ஏற்பாடுகளுக்கமைய, 129.69 மில்லியன் நிதியொதுக்கீடு செய்து புனரமைப்புக்களை மேற்கொள்வதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


12. தம்புத்தேகம - இராஜாங்கன வீதியில் அமைந்துள்ள அங்கமுவ பிட்டவான (தீப்பெட்டிப் பாலம்) ஊடாக புதிய கால்வாய்ப் பாலத்தை நிர்மாணித்தல்.


தம்புத்தேகம - இராஜாங்கன வீதியில் அமைந்துள்ள அங்கமுவ பிட்டவான (தீப்பெட்டிப் பாலம்) ஊடாக அநுராதபுரம் - பாதெனிய வீதி மற்றும் அநுராதபுரம் - புத்தளம் வீதியையும் இணைக்கின்ற, தம்புத்தேகம - இராஜாங்கன வீதியில் அமைந்துள்ள கால்வாய்ப் பாலமாகும். 

தற்போதுள்ள பாலத்தின் தளம் ஒப்பீட்டளவில் தாழ்நிலப் பிரதேசத்தில் அமைந்துள்ளதுடன், மழைகாலங்களில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்படுவதால் இவ்வீதியைப் பயன்படுத்துவதற்கு இடையூறுகள் ஏற்படும். அத்துடன், குறித்த கால்வாயின் கொள்ளளவானது எதிர்வரும் காலங்களில் பாசன நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமானதாக இல்லாமை அடையாளங் காணப்பட்டுள்ளது. 

அதனால், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் கீழ் அமுல்படுத்தப்படும் எப்பாவெல, கிரிபாவ, இராஜாங்கன மற்றும் நொச்சியாகம ஒருங்கிணைந்த நீர் வழங்கல் கருத்திட்டத்தின் நிதியொதுக்கீட்டைப் பயன்படுத்தி அங்கமுவ பிட்டவான ஊடாக தற்போதுள்ள பாலத்திற்குப் பதிலாக அதிக கொள்ளளவுடைய புதிய கால்வாய் வழிப் பாலத்தை அவ்விடத்திலேயே நிர்மாணிப்பதற்கான கருத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. 

அதற்கமைய, 241.45 மில்லியன் மதிப்பீட்டுச் செலவின் கீழ் உத்தேச கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர், மற்றும் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் அவர்களும் ஒருங்கிணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


13. 1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க அரசிறைப் பாதுகாப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் ஆக்கப்பட்டுள்ள இறைவரிப் பாதுகாப்பு கட்டளைகளின் பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பித்தல்.


எமது நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை இலக்காகக் கொண்டு அதிகரித்துக் கொள்வதற்காக 03 வகுதிகளாக செயற்பட்டு வந்த சுங்கத் தீர்வை வீதம் 0மூஇ 10%, 20% மற்றும் 30% எனும் 04 வகுதிகளின் கீழ் அமுல்படுத்துவதற்கும், தேசிய இறக்குமதி தீர்வை வரிக்கொள்கைக் குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்துவதற்கும், உள்நாட்டு விவசாய மற்றும் கைத்தொழிற்துறை ஊக்குவிப்புக்களுக்குப் புதிய தேசிய உபபிரிப்பு சுங்க இயைபுமுறையை அமுல்படுத்துவதற்கும் 2026.02.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

அதற்கான ஏற்பாடுகளை விதித்து 1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க அரசிறைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான அரசிறைப் பாதுகாப்புக் கட்டளைகள் - இலக்கம் 01/2026, 2026.03.03 ஆம் திகதிய 2478/03 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. 

குறித்த அரசிறை பாதுகாப்புக் கட்டளைகளைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. கொள்கை அடிப்படையிலான கடன் வசதி – 2026 இன் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியால் வழங்கப்படும் கடன் தொகையை அதிகரித்தல்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கொள்கை அடிப்படையிலான கடன் மூலம் 2026 ஆம் ஆண்டில் 380 அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொள்வதற்காக 2026.03.16 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வர்த்தக, முதலீட்டு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் - உப வேலைத்திட்டம் 1 இற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 

ஆயினும், சமகால மத்தியகிழக்கு நெருக்கடி மற்றும் காலநிலை அதிர்ச்சியால் மேலெழுந்துள்ள பொருளாதார உறுதிப்பாடற்ற நிலைமையில் குறித்த உப வேலைத்திட்டத்தின் கீழான கடன் தொகை, 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியிடல் பக்கேஜ் மூலம் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்து ஒத்துழைப்பு வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. 

அதற்கமைய, குறித்த தொகையைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒத்துழைப்புக்களின் அடிப்படையில் 'தித்வா புயல் அனர்த்தத்திற்குப் பின்னரான மீள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதார ஒத்துழைப்புக்கள் கருத்திட்டத்தை' அமுல்படுத்தல்.


2025 நவம்பர் மாதத்தில் இலங்கைக்கு தாக்கத்தை ஏற்படுத்தி 'தித்வா' புயல் அனர்த்தத்தால் நெடுஞ்சாலைகள், புகையிரதப் பாதைகள் மற்றும் நீர்;ப்பாசனக் கட்டமைப்புக்கள் போன்ற தேசிய உட்கட்டமைப்பு வசதிகளைப் போலவே வாழ்வாதாரம், விவசாயம் மற்றும் வீடுகளுக்கு பலத்த சேதங்கள்-ஏற்பட்டுள்ளன. 

இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள அனர்த்தத்திற்குப் பின்னரான தேவைப் பகுப்பாய்வுக்கமைய, இதன் பாதிப்புக்களால் ஏறத்தாழ 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சேதங்களும், 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பொருளாதார நட்டங்களும் ஏற்பட்டுள்ளதுடன், மீள்கட்டமைப்புக்கு 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, அவசர மீள்கட்டமைப்புத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, மற்றும் இலங்கை அரசால் முன்வைக்கப்பட்டுள்ள வேண்டுகோளின் பிரகாரம் ஆசிய அபிவிருத்தி வங்கியால் 'தித்வா புயல் அனர்த்தத்திற்குப் பின்னரான மீள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதார ஒத்துழைப்புக்கள் கருத்திட்டம்' எனும் பெயரிலான கருத்திட்டமொன்றை அமுல்படுத்துவதற்கு நிதி வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புயலால் சேதமடைந்துள்ள வீதிகளின் உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைத்தல், புயலால் சேதமடைந்த நீர்ப்பாசனக் கட்டமைப்புக்களை மீள்கட்டமைத்தல் மற்றும் வாழ்வாதாரங்களை மீள்கட்டமைத்தல் மற்றும் வீடமைப்பு வசதிகள் போன்ற பிரதான மூன்று கூறுகளுடன் கூஎய குறித்த கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, நிரந்தர பொது மூலதன வளங்கள் மூலம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் சலுகை பொது மூலதன வளங்கள் மூலம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுமாக 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை உத்தேச கருத்திட்டத்திற்குப் பெற்றுக் கொள்வதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. இறுதிப் பாதீட்டு நிலைமை தொடர்பான அறிக்கை (வருடாந்த அறிக்கை) – 2025


2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க நிதி முகாமைத்துவச் சட்டத்தின் 51 ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய, ஒவ்வொரு நிதியாண்டு இறுதியில் பாதீட்டு நிலைமை தொடர்பான அறிக்கையொன்றை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டியதுடன், குறித்த அறிக்கை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்படல் வேண்டும். 

அத்துடன், இவ்வறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் வேண்டும். இறுதிப் பாதீட்டு நிலைமை தொடர்பான அறிக்கை (வருடாந்த அறிக்கை) – 2025 நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அரச நிதிக் கொள்கை, மூலோபாயங்கள் மற்றும் சவால்கள், 2025 ஆம் ஆண்டின் பொருளாதாரப் போக்குகள், பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கி பேரண்டப் பொருளாதாரம் மற்றும் சமூக – பொருளாதார அளவுகோல் மற்றும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி தொடர்பான பகுப்பாய்வு இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் அரசிறை வருமானம் மற்றும் செலவு, நிதிப் பாய்ச்சல் முகாமைத்துவம், பாதீட்டுப் பற்றாக்குறை நிதியிடல் மற்றும் கடன் கட்டமைப்பு உள்ளடங்கலான விபரமான பகுப்பாய்வும் உட்சேர்;க்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, இறுதிப் பாதீட்டு நிலைமை தொடர்பான அறிக்கையை (வருடாந்த அறிக்கை) – 2025 பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

2026.06.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 16, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.