அநீதியிழைக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைகள் இறைவனிடம் தடைகளின்றி சென்றடையும்
(சிரேஷ்ட்ட ஊடகவியலாளர்
UL.மப்றூக்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் உறங்கிக் கொண்டிருந்த வேளை, அவரின் வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு சிஐடி-யினர் உள்ளே நுழைகிறார்கள்.
2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி நள்ளிரவு தாண்டிய வேளை.
எழுந்து வந்த றிசாட்; ”நீங்கள் யார்” எனக் கேட்கிறார். ”நாங்கள் சிஐடி” என்று வந்தவர்கள் கூறுகிறார்கள்.
வந்த காரணம்?
”நாங்கள் உங்களைக் கைது செய்ய வந்திருக்கிறோம்” என்கிறார்கள்.
கைதுக்கான காரணத்தைக் கேட்டால், விபரமாகச் சொல்லவில்லை.
றிசாட் பதியுதீன் அவர்களின் மனைவி, வந்தவர்களிடம்; ”கோட் வாரன்ட்” (நீதிமன்றப் பிடியாணை உத்தரவு) இருக்கிறதா என்று கேட்கிறார். இல்லை.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கைது செய்வதென்றால், ஆகக்குறைந்தது சபாநாயகருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
”அவ்வாறு செய்தீர்களா” என்று, றிசாட் பதியுதீனின் மனைவி கேட்கிறார். இல்லை.
நட்ட நள்ளிரவில், ஒரு பயங்கரவாதியைப் போல், றிசாட் பதியுதீன் - கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுகிறார்.
அன்றைய தினம், றிசாட் பதியுதீனின் சகோதரர் றியாஜ் பதியுதீனும் கைது செய்யப்பட்டார்.
ஈஸ்டர் தின தாக்குதல்களில் தற்கொலை குண்டுத்தாரிகளுக்கு ஆதரவு வழங்கியதாகவும், அவர்களுடன் தொடர்புகளை பேணியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு - அவர்கள் இருவரும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக, அன்றைய தினம் அப்போதைய பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அவ்வாறு கைது செய்யப்பட்ட றிசாட் பதியுதீன் ஆரம்பத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில், அதாவது - இப்போது சுரேஷ் சாலே தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் வைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் மெகசீன் சிலைச்சாலையில் வைக்கப்பட்டார்.
இப்படி மொத்தம் 111 நாட்கள் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் அடைக்கப்பட்ட இடம் மிகவும் சுகாதார அச்சுறுத்தலானது, நெருக்குவாரமானது, மூட்டை பூச்சிகள் நிறைந்தது. தொழுகைக்காக வுழு செய்வதற்குக் கூட அவருக்கு நீர் வழங்கப்படவில்லை.
இவ்வளவு கொடுமைகளும் - கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்த பிறகே நடந்தன.
ஆனாலும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் - றிசாட் மீது தொடரப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுதலை செய்வதாக, 2022 நொவம்பர் 02 அன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இப்போது, காலத்தின் அச்சு - மறுபக்கமாகச் சுழலத் தொடங்கியுள்ளது.
றிசாட் பதியுதீனை அன்று - அப்படி பழி தீர்த்து மகிழ்ந்த கோட்டாபய ராஜபக்ஷ, இப்போது;
- ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இருந்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
- பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
- குற்றப் புலனாய்வு பிரிவினர் - அரைக் கைது செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இதனால், "என்னை கைது செய்ய வேண்டாமென உத்தரவிடுங்கள்" என்று, நீதிமன்றத்திடம் மண்டியிட்டிருக்கிறார்.
அநீதியிழைக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைகள் இறைவனிடம் தடைகளின்றி சென்றடையும் என்று நாங்கள் நம்புகிறோம்.
ஈஸ்டர் தின தாக்குதலின் பேரால், கோட்டாவின் கொடுமைகளுக்கு அநியாயமாக ஆளானவர்களின் பட்டியல் மிக நீளமானது.
அநீதியிழைக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைகள் இறைவனிடம் தடைகளின்றி சென்றடையும்
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 18, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 18, 2026
Rating:

கருத்துகள் இல்லை: