Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

IND Vs AFG | குர்பாஸ் சதம் வீண்.. இந்தியா அபார வெற்றி.. சாதனை படைத்த ரோகித், கில்!

விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரஹ்மானுல்லா குர்பாஸ் சதமடித்து, அவ்வணியை வலுப்படுத்தினார். அவர், 51 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்  தொடங்கியது. இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்கிய இன்றைய முதல் ஒருநாள் போட்டி, மழையினால் தாமதமாகத் தொடங்கியது. 


மேலும் மழை காரணமாக 25 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இதையடுத்து, இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 24.5 ஓவர்களில் 194 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எனினும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரஹ்மானுல்லா குர்பாஸ் சதமடித்து, அவ்வணியை வலுப்படுத்தினார். அவர், 51 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர்களாக களம் இறங்கிய குர்னூர் பிரார் மற்றும் ஹர்ஷ் துபே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இவர்களுடன் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 


பின்னர், 195 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காராரும் கேப்டனுமான சுப்மன் கில் சிறப்பான அடித்தளம் அமைத்தார். ரோகித் சர்மா 12 ரன்களில் ரன் அவுட்டாக, 3ஆவது வீரராக இசான் கிசன் 22 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் 12 ரன்களில் கேட்ச் ஆனார். அதன்பின் கில்லுடன் ஜோடி சேர்ந்த கே.எல். ராகுல் 19 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 


இறுதியாக இந்திய அணி 22.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி அமோக வெற்றி பெற்றது. மறுபக்கம், பொறுப்புடன் விளையாடிய கில் 66 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்தத் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் ஜூன் 17 லக்னோவில் உள்ள வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.


முன்னதாக, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய மிக வயதான இந்திய வீரர் என்ற புதிய சாதனையை ரோகித் சர்மா நிகழ்த்தியுள்ளார். ரோகித் சர்மாவின் வயது 39 ஆண்டுகள் 44 நாட்கள் ஆகும். இதன்மூலம், 1983 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த மொஹிந்தர் அமர்நாத்தின் நீண்டகால சாதனையை ரோஹித் சர்மா முறியடித்துள்ளார். 


அடுத்து, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் ரோகித், தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸின் சாதனையை முறியடித்து எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.


ஜாக் காலிஸ் 1996 முதல் 2014 வரை தென்னாப்பிரிக்கா, 328 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11,579 ரன்கள் எடுத்துள்ளார். அதேநேரத்தில், 283-வது ஒருநாள் போட்டியில் விளையாடிய ரோகித் சர்மா, தற்போது 11,593 ரன்களுடன் காலிஸை முந்தி சாதனை படைத்தார். 


அதேபோல், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக முதலாவது ஒருநாள் போட்டியில், சுப்மன் கில் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 3,000 ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். 


தனது 62-வது இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டியுள்ள இந்திய அணியின் கேப்டன் கில், ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 3000 ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதன்மூலம், விராட் கோலியின் நீண்ட கால சாதனையை சுப்மன் கில் முறியடித்துள்ளார்.

IND Vs AFG | குர்பாஸ் சதம் வீண்.. இந்தியா அபார வெற்றி.. சாதனை படைத்த ரோகித், கில்! Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 14, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.