Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

சவூதி அரேபியா இராச்சியத்திற்கு ஹஜ் பயணத்தின் போது எனது தொடர்பில் எழுந்த விசாரணைகள் குறித்து நன்றியறிவிப்பும் விளக்கமும்


அனைத்துப் புகழும் உலகங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே உரியது. நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள், அவர்களின் குடும்பத்தினர், தோழர்கள் மற்றும் அவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவோர் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் அருளும் உண்டாவதாக.

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியா இராச்சியத்தில் தங்கியிருந்த காலத்தில் எனது தொடர்பில் இடம்பெற்ற சமீபத்திய நிகழ்வுகள் குறித்து சுருக்கமாக விளக்க விரும்புகிறேன்.

புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நூல் பரிசீலனைக் குழு உறுப்பினராக நான் வகிக்கும் பொறுப்புடன் தொடர்புடைய ஒரு விடயத்தில், ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், மினா பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு என்னிடம் கோரப்பட்டது. 

அங்கு குறித்த முறைப்பாட்டுடன் தொடர்புடைய சில விடயங்கள் குறித்து என்னிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கைகளின் போது, சவூதி அரேபியா இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் மேதகு அமீர் அஜ்வாத் அவர்கள், மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கௌரவ முனீர் முலஃபர் அவர்களின் ஆலோசனையின் பேரில், ஜித்தாவில் உள்ள இலங்கைத் துணைத்தூதுவர் ஓய்வுபெற்ற நீதிபதி எம். எம். லஃபார் தாஹிர் அவர்களுடன் இணைந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய பிரதிநிதித்துவங்களை மேற்கொண்டார்.

மேலும், சவூதி அரேபியா இராச்சியத்தின் இஸ்லாமிய அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளிடமும் சில தகவல்களை வழங்குமாறு என்னிடம் கோரப்பட்டது. எனினும், இந்த வழமையான நடைமுறைகள் பல்வேறு வதந்திகளுக்கும் ஊகங்களுக்கும் வழிவகுத்தன. அவற்றில் பல உண்மைக்கு புறம்பானவையாக இருந்தன.

எனது சவூதி அரேபியா தங்கியிருந்த காலப்பகுதியில், நான் எக்காலத்திலும் கைது செய்யப்படவோ, தடுப்புக் காவலில் வைக்கப்படவோ இல்லை என்பதையும், எனது கடவுச்சீட்டு சவூதி அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படவில்லை என்பதையும் நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.

அல்லாஹ்வின் அருளால், சவூதி அரேபியா இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்தாலோசனையின் அடிப்படையில், இலங்கைத் தூதுவர் மேதகு அமீர் அஜ்வாத் அவர்களின் ஒத்துழைப்புடன், 2026 மே 31 ஆம் திகதி நான் பாதுகாப்பாக இலங்கைக்கு திரும்பினேன்.

இந்தக் காலப்பகுதியில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU) மிகவும் விரைவாகவும் பொறுப்புடனும் செயல்பட்டது. அதன் உறுப்பினர்கள் நேரடியாக இலங்கைப் பிரதமர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, எனது பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பான கவலைகளை முன்வைத்தனர்.

மேலும், வெளிவிவகார அமைச்சுடன் தொடர்புகொண்டு, பதில் வெளிவிவகார அமைச்சர் கௌரவ அருண் ஹேமச்சந்திர அவர்களைச் சந்தித்து, தேவையான இராஜதந்திர உதவிகள் அனைத்தும் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தினர்.

எனது நலனையும் பாதுகாப்பான மீள்வருகையையும் உறுதிப்படுத்துவதற்காக தனிப்பட்ட அக்கறையுடனும் ஆதரவுடனும் செயல்பட்ட இலங்கைப் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும், பதில் வெளிவிவகார அமைச்சர் கௌரவ அருண் ஹேமச்சந்திர அவர்களுக்கும் நான் விசேட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், இலங்கை ஹஜ் குழுவிற்கு தலைமை தாங்கிய மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கௌரவ ஷெய்க் முனீர் முலஃபர் அவர்கள், முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர், ஹஜ் குழுத் தலைவர் ரியாஸ் மிஹுலார் மற்றும் அதன் உறுப்பினர்கள், அத்துடன் இந்த விடயத்தை சுமுகமாகத் தீர்ப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், இலங்கை அரசாங்கம், சவூதி அரேபியா அரசாங்கம், சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் துணைத்தூதரகம், இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் மேதகு ஷெய்க் காலித் அல்-கஹ்தானி அவர்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் ஷெய்க் எம். ஐ. எம். ரிஸ்வி முஃப்தி அவர்கள், அதன் உறுப்பினர்கள், Traveller Global நிறுவனத்தின் திரு. ரிஸ்மி ரியால், எமது ஹஜ் குழு உறுப்பினர்கள், பொறுப்புணர்வுடன் செயல்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் மற்றும் உலகெங்கிலும் இருந்து எனது நலனைப் பற்றி அக்கறை கொண்டு ஆதரவு தெரிவித்த அறிஞர்கள், நண்பர்கள், நலன்விரும்பிகள் மற்றும் இலங்கை முஸ்லிம் சமூக உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

குறிப்பாக, எனக்காக துஆ செய்த அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்தக் காலப்பகுதியில் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்ட பிரார்த்தனைகள், செய்திகள் மற்றும் ஆதரவுகள் எமக்கு மிகுந்த ஆறுதலாக அமைந்தன.

நான் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ள நிலையில், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவதையும் மேலதிக ஊகங்களை முன்வைப்பதையும் அனைவரும் தவிர்க்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மீதமுள்ள ஏதேனும் விடயங்கள் இருந்தால், அவை உரிய சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகளின் ஊடாக கையாளப்படும்.

புரிந்துணர்வு, ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையுடன் நாம் முன்னோக்கிச் செல்வோமாக. இந்த நிகழ்வுகளால் சிரமம் அல்லது கவலை அடைந்திருக்கக்கூடிய அனைவரிடமும் நான் பணிவுடன் மன்னிப்புக் கோருகிறேன். 

இந்தக் காலத்தில் உதவிய அனைவருக்கும் அல்லாஹ் சிறந்த நற்கூலியை வழங்குவானாக எனப் பிரார்த்திக்கிறேன்.

அல்லாஹ் எங்களை அனைவரையும் நேர்வழிப்படுத்துவானாக. எமது ஒற்றுமையை வலுப்படுத்துவானாக. தவறான புரிதல்கள் மற்றும் பிளவுகளிலிருந்து எங்களைப் பாதுகாப்பானாக. எமது மார்க்கத்திற்கும், நாட்டிற்கும், மனிதகுலத்திற்கும் உண்மையான நேர்மையுடன் சேவை செய்யும் பாக்கியத்தை வழங்குவானாக.

(ஷெய்க் அர்கம் நூராமித்)
சவூதி அரேபியா இராச்சியத்திற்கு ஹஜ் பயணத்தின் போது எனது தொடர்பில் எழுந்த விசாரணைகள் குறித்து நன்றியறிவிப்பும் விளக்கமும் Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 02, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.