நியூசிலாந்தை வீழ்த்தியது எகிப்து
வான்கூவரில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, உலகக் கோப்பையில் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் வெற்றியை எகிப்து பதிவு செய்தது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் சாலா மற்றும் முஸ்தபா ஜிகோ ஆகிய இருவரும் தலா ஒரு கோல் அடித்ததுடன், மற்றொரு கோல் அடிக்கவும் உதவினர் (assist).
இதன் மூலம், முதல் பாதியில் 1-0 என பின்தங்கியிருந்த எகிப்து அணி, ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் அபாரமாக மீண்டெழுந்து ‘ஜி’ பிரிவில் (Group G) முதலிடத்தைப் பிடித்தது.
ஆட்டத்தின் இறுதிப் பகுதியில் ட்ரெசெகுவெட் (Trezeguet) அடித்த கோல் எகிப்தின் வெற்றியை உறுதி செய்தது.
வான்கூவரின் பிசி பிளேஸ் (BC Place) மைதானத்தில் திரண்டிருந்த சிவப்பு நிற உடை அணிந்த எகிப்து ரசிகர்களின் பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில், ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் சாலா தனது 68-வது சர்வதேச கோலை அடித்துக் கொண்டாடினார்.
அப்போது சக வீரர்கள் அவரை ஓடிவந்து கட்டிப்பிடித்துத் தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். ஆட்டத்தின் 85-வது நிமிடத்தில் சாலா மைதானத்திலிருந்து வெளியேறியபோது, ஒட்டுமொத்த ரசிகர்களும் எழுந்து நின்று அவருக்குக் கைதட்டி மாரியாதை செலுத்தினர்.
‘ஜி’ பிரிவின் முதல் மூன்று போட்டிகளும் டிராவில் முடிந்திருந்தன.
ஞாயிற்றுக்கிழமை முன்னதாக நடைபெற்ற பெல்ஜியம் – ஈரான் இடையிலான போட்டியும் கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்ததால், இந்த பிரிவில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு அனைவருக்கும் சமமாக இருந்தது.
இதனால், ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் ஃபின் சர்மன் (Finn Surman) தலையால் முட்டி (header) அடித்த கோல் மூலம் முன்னிலை பெற்ற நியூசிலாந்து அணி (0-1-1, 1 புள்ளி), தங்களுக்கு சாதகமான பாதையில் செல்வதாகவே கருதியது. ஆட்டத்தின் பாதியளவு வரை இந்த முன்னிலையை அவர்கள் தக்கவைத்திருந்தனர்.
எகிப்து அணி தனது அடுத்த லீக் போட்டியில் வெள்ளிக்கிழமை ஈரான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இப்போட்டியின் முடிவு எப்படி இருந்தாலும், எகிப்து அடுத்த சுற்றுக்கு (knockouts) முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
உலகக் கோப்பையில் தனது முதல் வெற்றியைத் தேடி வரும் நியூசிலாந்து அணி, அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் அதே நாளில் பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது.
எகிப்து கோல்கீப்பர் முஸ்தபா ஷூபீர் மற்றும் நியூசிலாந்து கோல்கீப்பர் மேக்ஸ் குரோகம்பே ஆகிய இருவரும் தலா நான்கு கோல் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தினர்.
நியூசிலாந்து வீரர் எலிஜா ஜஸ்ட் அடித்த பந்தை ஷூபீர் தடுத்து வெளியேற்றியதால் நியூசிலாந்திற்கு கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது. டிம் பெய்ன் அடித்த அந்த கார்னர் கிக்கை, சரியான இடத்தில் நின்றுகொண்டிருந்த சர்மன் துள்ளிக் குதித்து தலையால் முட்டி கோலாக மாற்றினார். இதனால் நியூசிலாந்து (All Whites) அணி முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில், நியூசிலாந்து வீரர் காலம்கே மெக்கோவாட் தவறான முறையில் டிஃபன்ஸ் செய்ததால் அவருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
இதனால் எகிப்திற்கு பாக்ஸ் எல்லைக்கு வெளியே ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. சக வீரர் தட்டிவிட்ட பந்தை சாலா கோல் அடிக்க முயன்றார், ஆனால் அது இடதுபுறமாகத் தவறிச் சென்றது.
இரண்டாம் பாதியில் எகிப்து அணியின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. ஆட்டம் தொடங்கிய 40 விநாடிகளுக்குள்ளேயே சாலா அடித்த பந்தை குரோகம்பே தடுத்து நிறுத்த வேண்டியதாயிற்று.
தொடர் முயற்சிகளுக்குப் பிறகு, 58-வது நிமிடத்தில் எகிப்து தனது முதல் கோலை அடித்தது. முகமது ஹானி துல்லியமாக பாஸ் செய்த பந்தை, ஜிகோ தலையால் முட்டி கோல் கம்பத்திற்குள் செலுத்தினார். குரோகம்பே அதைத் தடுக்க முயன்றும் பந்து அவரது கையுறையில் பட்டு கோலானது.
அடுத்த ஒன்பதாவது நிமிடத்தில் சாலா தனது கோலை அடித்தார். ஜிகோ கடத்தி வந்த பந்தை சாலாவிடம் கொடுத்தார். சாலா எதிரணி வீரரை ஏமாற்றி பந்தை பாக்ஸிற்குள் கொண்டு சென்று மீண்டும் ஜிகோவிடம் பாஸ் செய்தார். ஜிகோ அதை சாதுரியமாக தனது கணுக்காலால் (back-heel) சாலாவுக்குத் தட்டிவிட, சாலா தனது இடது காலால் பந்தை கோல் கம்பத்தின் கீழ் இடது மூலைக்கு மிக நேர்த்தியாக அனுப்பினார்.
ஆட்டத்தின் 82-வது நிமிடத்தில் கார்னர் கிக் மூலம் கிடைத்த வாய்ப்பை ட்ரெசெகுவெட் கோலாக மாற்றி எகிப்தின் வெற்றியை முழுமையாக்கினார். சாலா அடித்த லோ கார்னர் கிக் பந்தை, எதிரணி வீரர்கள் யாரும் தடுக்காத நிலையில், ட்ரெசெகுவெட் பாய்ந்து சென்று தலையால் முட்டி கோல் அடித்தார். இது அவரது சர்வதேச வாழ்க்கையின் 24-வது கோலாகவும், உலகக் கோப்பையில் அவரது முதல் கோலாகவும் பதிவானது.
“வரவிருக்கும் ஆண்டுகளில், இது வரலாற்றின் மிகச்சிறந்த சாதனைகளில் ஒன்றாக நினைவுகூரப்படும்” என்று சாலா கூறினார். மைதானத்தில் திரண்டிருந்த பெருமளவிலான எகிப்து ரசிகர்களைப் பாராட்டிய அவர், “நாங்கள் எகிப்திலேயே விளையாடுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இது ஒரு சிறந்த வெற்றியும், அற்புதமான தருணமும் ஆகும்” என்றார்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 22, 2026
Rating:

கருத்துகள் இல்லை: