Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

සිංහල පරිවර්තනය සමග) வடக்கின் பொருளாதார மீளெழுச்சியும் புதிய அரசியல் கலாச்சாரமும்! அநுர அரசின் புதிய சாதனைப் பயணம்.



வரலாற்று முக்கியத்துவம் மாறாமல் யாழ்ப்பாணக் கோட்டைச் சூழல் மற்றும் அணுகல் வீதிகள் நவீனமாக்கப்படுகின்றன.

விடுக்கப்படும் காணிகளுக்குறிய சட்டபூர்வப் பத்திரிகைகள், வரைபடங்கள் மற்றும் வரி ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு,எல்லைப் பிணக்குகள் தீர்க்கப்படுகின்றன.

இரண்டு வருட ஆட்சியில் தேசிய மக்கள் அரசாங்கம் வடக்கில் இனப் பிரிவினைகளை கடந்து புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளதுடன், பல்வேறு அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுத்து வருகிறது.

தொழிற்பேட்டைகள், இரண்டாவது தென்னை முக்கோண வலயம், மீன்பிடித்துறை நவீனமயமாக்கல் மற்றும் விவசாயத் திட்டங்கள் மூலம் பிராந்தியத்தின் பொருளாதாரம் பலப்படுத்தப்படுகிறது.


இலங்கையின் தேர்தல் வரலாற்றில் பாரம்பரியத் தமிழ் அரசியல் கட்சிகளின் நீண்டகாலக் கோட்டையாகக் கருதப்பட்ட யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில், 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையின் கீழ், வட மாகாணத்தில் பிராந்தியத் தமிழ் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி தென்னிலங்கைக் கட்சி ஒன்று பெற்ற வெற்றி, இனப் பிரிவினைகளைக் கடந்த ஒரு புதிய அரசியல் கலாசாரத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. 

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வட மாகாணத்தில் 48,498 வாக்குகளையும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) 1,20,724 வாக்குகளுடன் 5 உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டமை இதற்குச் சான்றாகும்.

பொறுப்பு வாய்ந்த அரசின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ், வட மாகாணத்தில் மக்கள் மையப்படுத்தப்பட்ட பல்வேறு அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையின் வட மாகாணத்தில் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச் சபையின் (BOI) கீழ் மூன்று புதிய முதலீட்டு தொழிற்பேட்டை வலயங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இப்பூர்வாங்கப் பணிகள் மற்றும் நிலப் பரிமாற்ற நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவற்றுள் இடம்பெறும் முக்கிய மையங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

காங்கேசன்துறை தொழில் பேட்டை:-
காங்கேசன்துறை (KKS) தொழிற்பேட்டை
சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள முன்னாள் காங்கேசன்துறை சிமெந்து கூட்டுத்தாபன வளாகத்தில் இது உருவாக்கப்படுகிறது. இப்பேட்டையானது முக்கியமாக ஆடை உற்பத்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளை மையமாகக் கொண்டு செயற்படவுள்ளது.

பரந்தன் தொழிற்பேட்டை:-
சுமார் 230 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பரந்தன் இரசாயன நிறுவன வளாகத்தில் இது அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு இரசாயன உற்பத்தி மற்றும் பல்வேறு பிற தொழில்துறை உற்பத்திப் பொருட்கள் சார்ந்த தொழில்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.


மாங்குளம் தொழிற்பேட்டை:-
சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்பேட்டையானது, விவசாயம் மற்றும் மீன்பிடி சார்ந்த ஏற்றுமதித் தொழில்களை அடிப்படையாகக் கொண்டு வட மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், உலக வங்கியின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் (யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா உள்ளிட்டவை) செயற்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த கிராமிய-நகர அபிவிருத்தி மற்றும் காலநிலை மீள் தன்மை திட்டம் (IRDCRP) மற்றும் காலநிலை விவேக நீர்ப்பாசன விவசாயத் திட்டம் (CSIAP) ஆகியன விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றன.

அதில், காலநிலை மாற்றங்களைத் தாங்கக்கூடிய நவீன முறைகள் ஊக்குவிக்கப்படுவதுடன், விவசாயிகள் சந்தைகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களுடன் இணைக்கப்படுவதோடூ, 
​சிறிய குளங்கள் மற்றும் வடிகால் அமைப்புகள் புனரமைக்கப்பட்டு, நீர்ச் சேமிப்புத் திறனும் விநியோகமும் பலப்படுத்தப்படுகின்றன. அதனோடு சேர்த்து வறட்சி, வெள்ளப் பெருக்கு போன்ற சவால்களுக்கு முகங்கொடுத்து, வடக்கு மாகாண விவசாயிகளின் பொருளாதார மீளெழுச்சியும் பிராந்திய உணவுப் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகின்றன.

சுற்றுலாத்துறை:-
யாழ்ப்பாணத்தின் பிராந்திய சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், உலக வங்கியின் நிதி உதவியுடன் குருநகர் மீன் இறங்குதுறை மற்றும் யாழ்ப்பாணக் கோட்டை ஆகியவற்றை மையமாகக் கொண்டு பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


தொல்பொருள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் மாறாமல் யாழ்ப்பாணக் கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகள், அணுகல் வீதிகள் மற்றும் கலாசார வெளிகள் நவீனமயமாக்கப்படுவதோடு,
​குருநகர் பகுதியில் கடல்சார் சுற்றுலா மற்றும் உள்ளூர் கடல் உணவு கலாசாரத்தை ஊக்குவிக்க இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாகாண சபைகள் இணைந்து புதிய திட்டங்களை மேம்படுத்துகின்றன.

Clean Ocean Force (COF) அமைப்பின் பங்களிப்புடன் பண்ணை மற்றும் குருநகர் கடற்கரைப் பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவகற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு,
​வட பகுதியின் தனித்துவமான கலாசார பாரம்பரியம் மற்றும் இயற்கை எழிலைப் பயன்படுத்தி நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்துவதே இத்திட்டங்களின் பிரதான நோக்கமாகும்.

கிராமிய வீதி அபிவிருத்தி:-
காரைநகர் கல்லந்தாழ்வு உள்ளிட்ட கிராமியப் பிரதேசங்களில் வீதிச் சீரமைப்பு, எரிபொருள் நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட மக்கள் நலப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பழுதடைந்த வீதிகள் புனரமைக்கப்படுவதால் கிராமங்களுக்கான போக்குவரத்து எளிதாகியுள்ளதுடன், விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை நகரங்களுக்கு விரைவாகக் கொண்டு செல்ல முடிகிறது. 

கிராம மக்கள் நீண்ட தூரம் பயணிக்காமல் தங்களது வாகனங்கள் மற்றும் விவசாய உபகரணங்களுக்கான எரிபொருளை உள்ளூரிலேயே பெற்றுக்கொள்ள இலகுவாக்கப்படுவதோடு, அத்தியாவசியத் தேவைகளுக்கான எரிபொருளைப் பெறுவதில் ஏற்படும் கால விரயம் மற்றும் கூடுதல் செலவுகள் இதனால்

தூய்மையான குடிநீர் விநியோகம் மற்றும் முறையான மின்சாரக் கட்டமைப்பு போன்ற வசதிகள் படிப்படியாக விரிவுபடுத்தப்படுகின்றன. கல்வி, சுகாதாரம் மற்றும் பொதுச் சேவைகள் கிராம மட்டத்திலேயே கிடைப்பதன் மூலம் மக்களின் ஒட்டுமொத்த வாழ்தாரம் மேம்படும் அதே இடத்தில், பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று, உள்ளூர் நிருவாகங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் ஒருங்கிணைப்புடன் இவ்வாறான தொடர்ச்சியான மக்கள் நலப் பணிகள் முன்னெடுக்கப்படுவது கிராமியப் பொருளாதாரத்தை வலுப்படுத்த பெரிதும் உதவுகிறது.

காணி விடுவிப்பு மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள்:-
வடக்கில் நிலவி வரும் காணித் பிணக்குகள் மீளாய்வு செய்யப்படுவதுடன், பொதுமக்களுக்குரிய காணிகளை விரைவாக விடுவித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் முன்னுரிமை அடிப்படையில் கவனிக்கப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில், விடுவிக்கப்படும் காணிக்குரிய சட்டப்பூர்வமான பத்திரம், வரைபடம் மற்றும் வரி ஆவணங்களைச் சரிபார்த்துத் தயார் நிலையில் வைத்திருத்தல், நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாமல் இருந்திருந்தால், எல்லைப் பிணக்குகள் அல்லது அத்துமீறல்கள் ஏதும் உள்ளனவா என்பதை உறுதி செய்தல் அடிப்படை தரவுகள் துரிதமாக மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றது.

மீள்குடியேற்றத்தின் போது அரசாங்கம் அல்லது தன்னார்வ நிறுவனங்கள் வழங்கும் விவசாய, மீன்பிடி மற்றும் சுயதொழில் உதவிகளைப் பெற்றுக்கொள்ளப் பதிவு செயும்பூர்வாங்க வேலைகள்துரிதப்படுத்தப்பட்டுள்ளதுடன், குடிநீர், மின்சாரம் மற்றும் வீதி வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு உள்ளூர் பிரதேச செயலகத்துடன் தகவல்கள் திரட்டப்பட்டு அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

வட மாகாண இரண்டாவது "தென்னை முக்கோண வலயம்": -
பாரம்பரிய தென்னை முக்கோண வலயத்திற்கு (குருநாகல், புத்தளம், கம்பஹா) வெளியே, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கியது. பருத்தித்துறை (யாழ்ப்பாணம்), சிலாவத்துறை (மன்னார்), மற்றும் கொக்கிளாய் (முல்லைத்தீவு) ஆகியவை முக்கிய முனைகளாக உள்ளன.

முதற்கட்டமாக 16,000 ஏக்கர் பரப்பளவில் தென்னை பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுவதுடன், இப்பரப்பளவு 2027 ஆம் ஆண்டளவில் 40,000 ஏக்கராக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
​கிளிநொச்சி/ யாழ்ப்பாண எல்லையிலுள்ள பாலை (Pallai) பகுதியில் முதலாவது மாதிரித் தோட்டமும், வடக்கிற்கான முதலாவது தென்னை விதை உற்பத்தி அலகும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு முள்ளியவளைப் பகுதியில் "கப்தூரு சவிய" (Kapturu Sawiya) திட்டத்தின் கீழ் நிதி மானியங்களும் தென்னங் கன்றுகளும் வழங்கப்பட்டுள்ளன.
​புதுக்குடியிருப்பில் தென்னை சார்ந்த உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் நடத்தப்பட்டுள்ளது.கைவிடப்பட்ட நிலங்கள் மீளப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படுவதோடு, பிராந்திய மக்களின் வாழ்வாதாரமும் நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரமும் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீன் பிடித்துறை:-
வடக்கு மாகாணத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக  காரைநகர் கல்லந்தாழ்வு உள்ளிட்ட வடக்கு மாகாணத்தின் கடற்தொழில் இறங்குதுறைகள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. காரைநகர் சீ-நோர் படகு கட்டும் தளம் மற்றும் அதனைச் சார்ந்த இறங்குதுறைகள் இந்திய அரசின் பல மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன.

​யாழ்ப்பாண மாவட்டத்தின் மீன்பிடி உள்கட்டமைப்பை வலுப்படுத்த கொழும்புத்துறை இறங்குதுறை அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், குறிகாட்டுவான் ஜெட்டி புனரமைப்புத் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்தக்கூடிய வசதிகள், கருவாடு உலர்த்தும் தளங்கள் மற்றும் ஏல விற்பனை கூடங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதுடன், ​நீண்ட காலமாக பின்தங்கியிருந்த கிராமப்புற மீனவக் குடும்பங்களுக்கு நிலையான மற்றும் முறையான வருமானம் ஈட்டும் வழிவகைகள் உருவாக்கப்படுகின்றன.

வட்டுவாகல் பாலம் புனரமைப்பு:-
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் வழிகாட்டல் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்களிப்புடன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதற்காக ஆரம்ப மதிப்பீடு 180 கோடி (1.8 பில்லியன்) ரூபாவாகும். எனினும், திறமையான திட்டமிடல் மூலம் 140 கோடி (1.4 பில்லியன்) ரூபா செலவில் பணிகள் முன்னெடுக்கப்பட்டு, மிச்சப்படுத்தப்பட்ட 40 கோடி ரூபா வன்னி மாவட்டத்தின் ஏனைய வீதி அபிவிருத்திகளுக்கு ஒதுக்கப்படவுள்ளது.

1950களில் நந்திக்கடல் களப்புக்குக் குறுக்காக அமைக்கப்பட்ட இப்பாலம் நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமல் ஆபத்தான நிலையில் இருந்தது. தினமும் 3,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. 

பரந்தன் - கரைச்சி - முல்லைத்தீவு (A035) வீதியில் அமைந்துள்ள இப்பாலம் நவீன முறையில் இரு வழிப் பாதையாகப் (2-Lane Bridge) புனரமைக்கப்படுகிறது. பாலத்தின் முழுமையான கட்டுமானப் பணிகளும் 2027 செப்டம்பர் மாதமளவில் நிறைவுபெறும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் கீழுள்ள வீதிகளுக்குக் கார்பெட் இடுதல் மற்றும் செப்பனிடுதல், ​மழைக்கால வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்கப் பாலங்கள் மற்றும் முறையான வடிகால் அமைப்புகளை உருவாக்குதல்,​விபத்துகளைக் குறைக்க வீதிச் சமிக்ஞைகள் மற்றும் பாதுகாப்புப் பலகைகளை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப் பட்டுள்ளன.

போதை ஒழிப்பு:-
இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட "முழு நாடுமே ஒன்றாக" (A Nation United) தேசிய செயற்திட்டத்தின் வட மாகாணப் பிரிவு யாழ்ப்பாணத்தில் அதிகாரவ பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் தீவிரமடைந்துள்ள போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை முற்றாக ஒழித்தல்,
​போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர்களை மீட்டு, முறையான புனர்வாழ்வு அளித்தல், ​புனர்வாழ்வு பெற்றவர்கள் சுயதொழில் புரிந்து சமூகத்தில் பொறுப்புள்ள பிரஜைகளாக வாழ தொழில்சார் பயிற்சிகளை வழங்குதல் முக்கிய நோக்கங்களாக உள்ளது.

அத்தோடு, முன்னாள் யுத்தப் பாதிப்புகளுக்குள்ளான வட பகுதிப் பெற்றோரின் அச்சத்தைப் போக்கி, போதைப்பொருள் அற்ற பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதற்காக யாழ்ப்பாணம் (மருதங்கேணி), முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பிரத்தியேக புனர்வாழ்வு மற்றும் தற்காலிக தங்குமிட மையங்கள் (Drop-in Centers) அமைக்க மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

வடமாகாண ஒருங்கிணைந்த விரைவு அபிவிருத்தித் திட்டம் (IRDP):-
​கிராமப்புறப் பாடசாலைக் கட்டிடங்கள் மற்றும் ஆய்வுகூடங்கள் தரம் உயர்த்தப்படுவதுடன், கணினி மற்றும் டிஜிட்டல் கற்றல் வசதிகள் விரிவாக்கப்படுகின்றன. கிராமிய மற்றும் ஆதார மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்பட்டு, அவற்றுக்குத் தேவையான அடிப்படை மருத்துவ உபகரணங்களும் மருந்து விநியோகமும் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன்,
​பிராந்திய ரீதியான தொடர்ச்சியான கண்காணிப்பு மூலமாக வட மாகாணத்தின் சமநிலையான வளர்ச்சியை அடைவதே இதன் பிரதான இலக்காகும்.

விளையாட்டு:-
யாழ்ப்பாணத்தில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நேரடி வழிகாட்டலின் கீழ், வடமாகாண இளைஞர்களின் விளையாட்டுத் திறனை சர்வதேச நிலைக்கு உயர்த்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், உள்ளூராட்சி மன்றங்கள் மூலம் கிராமிய மட்ட விளையாட்டு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்ற அதே இடத்தில், ​வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான கட்டுமானப் பணிகள் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கப்பட்டுள்ளன.

பாடசாலை மட்ட விளையாட்டு ஊக்குவிக்கு முகமாக ​வடக்கு-கிழக்கு மாகாண மனிதவள அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்படுவதோடு, 
​பாடசாலைகளுக்கான விளையாட்டு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆகவே, பாரம்பரிய அரசியல் தலைமைகளின் விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வகையில், ஜனாதிபதி அநுரகுமாரதிசா நாயக்கவின் இரண்டு வருட பூர்த்தியில்  தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது வடமாகாணத்தில் இனப் பிரிவினைகளைக் கடந்து புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கி அதில் வெற்றியும் கண்டுள்ளது.

வடமாகாணத்தின் அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் கிராமப்புற மற்றும் மாகாண மட்டத்திலான அபிவிருத்திப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. வடக்கின் இளைஞர்களின் ஆற்றல்களைப் கண்டறிந்து அவர்களை நாட்டின் தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்கான வழிகாட்டல்களும் சுயதொழில் வாய்ப்புகளுக்கான வேலைத்திட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 

மாகாண மட்டத்திலான விளையாட்டுப் போட்டிகள், மைதானங்களின் வசதிகளை மேம்படுத்தல் மற்றும் இளம் வீரர்களை தேசிய மற்றும் சர்வதேச அளவுக்கு உயர்த்தும் இலக்குடன் கூடிய உட்கட்டமைப்பு உதவிகள் வழங்கப்பட்டு வருவதோடு, குறுகிய அரசியல் லாபங்களைத் தாண்டி, அனைத்து மக்களையும் சமமாகப் பாவிக்கும் வெளிப்படையான மற்றும் செயல்திறன் மிக்க நிர்வாகக் கட்டமைப்பை NPP அரசாங்கம் உறுதிப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், மக்களால் நிராகரிக்கப்பட்ட பாரம்பரிய 
தலைவர்களின் அவதூறுகளுக்கு, வடமாகாண மக்களுக்கான இந்த ஆக்கபூர்வமான மற்றும் தொடர்ச்சியான நீண்டகாலத் திட்டங்களே அரசாங்கம் வழங்கும் மௌனமான ஆனால் உறுதியான பதில்களாகும்.

அஹமட் இர்ஷாட்.
22-09-2026
සිංහල පරිවර්තනය සමග) வடக்கின் பொருளாதார மீளெழுச்சியும் புதிய அரசியல் கலாச்சாரமும்! அநுர அரசின் புதிய சாதனைப் பயணம். Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 22, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.