Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஊழியர்கள், தொழிலாளர் பிரச்சினைகளை தீர்க்கின்றேன் ஜனாதிபதி தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் வேண்டுகோள்…


மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு உதவுங்கள்…

ஜனாதிபதி தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் வேண்டுகோள்…

”அரச சேவை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட சபைகளில் நீண்ட காலமாக தீர்க்கப்படாது பாரிய சிக்கலாக மாறியுள்ள பல பிரச்சினைகள் உள்ளன. சம்பளம் மற்றும் பதவி உயர்வு முரண்பாடுகள் ஆட்சேர்ப்பு நடைமுறையில் உள்ள சிக்கல்கள் அவற்றில் சிலவாகும். ஊழியர்களுக்காக இந்த பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. 

எமது மக்கள் தற்போதைய அரசாங்கத்தை அதிக நம்பிக்கையுடன் ஆட்சிக்கு கொண்டு வந்தனர். நாங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு உதவுங்கள்” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷஅவர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொழிலாளர்களுக்காக போராடி அவர்களின் கோரிக்கைகளை வென்ற ஒரு தலைவர் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், தனது அரசாங்கம் பின்பற்றுவதும் அதே கொள்கையாகும் என்றும், தொழிற் சங்கங்களுடன் கலந்துரையாடி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தான் எப்போதும் தயாராக உள்ளதாகவும் கூறினார்.

நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்த தொழிற்சங்க பேரவையின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.

இத்தொழிற் சங்க சம்மேளனத்தின் கீழ் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன கல்விச் சேவை சங்கம், முற்போக்கு அரச ஊழியர்கள் கூட்டமைப்பு, வர்த்தக கைத்தொழில்கள் மற்றும் சேவைகள் முற்போக்கு ஊழியர் சங்கம், உள்ளூராட்சி முற்போக்கு ஊழியர் சங்கம், ஸ்ரீலங்கா பொதுஜன போக்குவரத்து ஊழியர் சங்கம், ஸ்ரீலங்கா பொதுஜன தோட்ட ஊழியர் சங்கம் மற்றும் அகில இலங்கை சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் ஆகிய தொழிற்சங்க பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் அளித்த பங்களிப்பைப் பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு அரச சேவை வலுவானதாகவும், வினைத்திறனானதாகவும், மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

தொழிற்சங்கங்களுக்கு செவிசாய்க்கவும் அவர்களுடன் இணைந்து பணியாற்றவும் அரசாங்கம் எப்போதும் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், கோவிட் பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டு வரும் நிலையில் எதிர்காலத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தொழிற்சங்கங்களை சந்தித்த்து கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார். 

அனைத்து வகையான அரச நிறுவன நிதிகளுக்கும் திறைசேரியில் தங்கியிருக்கும் நிலையை நீக்கி, அவற்றை செயற்திறன் வாய்ந்த மற்றும் இலாபகரமான நிறுவனங்களாக மாற்ற அரசாங்கத்திற்கு உதவுமாறு ஜனாதிபதி அவர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார்.

"நாங்கள் நாட்டின் முன்னால் உள்ள சவால்களின் பாரதூரம் பற்றி அறியாமல் நாட்டை பொறுப்பேற்கவில்லை. நாட்டின் மீது பெரும் கடன் சுமை சுமத்தப்பட்டிருந்தது. பொருளாதாரம் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தது. சவாலை எவ்வாறு வெற்றிகொள்வது என்பது பற்றிய ஒரு தொலைநோக்கு எங்களுக்கு இருந்தது. கோவிட் 19 தொற்றுநோய் பரவல் காரணமாக முன்னேற்றத்திற்கு தடைகள் இருந்தபோதிலும், நாங்கள் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றோம். நாட்டின் ஏற்றுமதி வருவாய் கோவிட் காலத்திற்கு முந்தைய நிலைக்கு திரும்பியுள்ளது.

தொற்றுநோயை எதிர்கொண்டு அரசாங்கம் பின்பற்றிய கொள்கை காரணமாக, விவசாயத் துறை வளர்ச்சியடைந்ததே அன்றி சரிவடையவில்லை.
நாட்டில் பயிரிடக்கூடிய அனைத்து பயிர்களையும் பயிரிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற செயல்களின் நேர்மறையான பெறுபேறுகளை இப்போது நாம் காணலாம், ”என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இருப்பினும், இலங்கையின் முக்கிய வருமான வழியாக இருந்த சுற்றுலாத் துறை பெரும்பாலும் முற்றிலும் வீழ்ச்சியடைந்துள்ளது. எமது நாட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை தரும் பெரும்பாலான நாடுகள் இன்னும் மூடப்பட்டிருப்பதால் சுற்றுலாத் துறையை பழைய நிலைக்கு கொண்டுவர சிறிது காலம் ஆகலாம். இன்னும் பல வருவாய் வழிகள் தடைப்பட்டுள்ளன. இருப்பினும், வேலைவாய்ப்புகளை பெறுவதற்காக காத்திருந்த 60,000 பட்டதாரிகளுக்கு அரசாங்கத்தினால் வேலைகளை வழங்க முடியுமாக இருந்தது. ஏழ்மையான குடும்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100,000 பேருக்கு தொழில்களை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 

தற்போது இதன் கீழ் 35,000 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர். அடுத்த கட்டத்தில் மேலும் 35,000 பேர் நியமிக்கப்படுவார்கள்.

ஒரு வலுவான கைத்தொழிற்துறை முறைமையுடன் மக்களை மையமாகக் கொண்ட தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நீண்டகால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று கூறிய ஜனாதிபதி அவர்கள், சிலர் இந்த யதார்த்தத்தை சிதைத்து சமூக ஊடகங்களில் தவறான கருத்துக்களை பரப்புகிறார்கள் என்றும் கூறினார்.

தொழிற்சங்க பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், தொழிற்சங்கங்களுடன் இணக்கமாக செயற்படுமாறு அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அவை எதிர்காலத்தில் சரிசெய்யப்படும் என்றும் கூறினார்.

அரச நிறுவனங்கள் மற்றும் சேவைகளில் தொழில் அமைதியை உருவாக்குவதில் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது என்று குறிப்பிட்ட முற்போக்கு தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவர் அமைச்சர் காமினி லொகுகே, ஒவ்வொரு கூட்டுத்தாபனத்திற்கும் ஒரு தொழிலாளர் இயக்குநரை நியமிக்க வேண்டும் என்று ஜனாதிபதி அவர்களிடம் முன்மொழிந்தார்.

180 நாட்கள் சேவையை நிறைவு செய்த போதிலும் இதுவரை நிரந்தர நியமனங்கள் பெறாதவர்கள்கள் உள்ளூராட்சி நிறுவனங்களில் இருப்பதாக ஒரு தொழிற்சங்க பிரதிநிதி கூறியபோது, உள்ளூராட்சி அமைப்புகளுக்கு சுமையில்லாத வகையில் இதுபோன்ற ஊழியர்களின் தொழில்கள் பாதுகாக்கப்படும் என்று பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ அவர்கள் கூறினார்
இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம, கஞ்சன விஜசேகர, ஜானக வக்கும்புர, பாராளுமன்ற உறுப்பினர்களான சாகர காரியவசம், ஜகத் குமார, ஜயந்த கெடகொட ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
Pmu
2021.02.24
ஊழியர்கள், தொழிலாளர் பிரச்சினைகளை தீர்க்கின்றேன் ஜனாதிபதி தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் வேண்டுகோள்… Reviewed by www.lankanvoice.lk on பிப்ரவரி 24, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.