Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள் தொடர்பாக முஸ்லிம் இயக்கங்கள் அரசுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்



(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

முஸ்லிம் தனியார் சட்டத்தில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள் தொடர்பாக முஸ்லிம் சமூகத்துடைய கருத்துக்களைப்  பிரதிபலிக்கும் வகையில், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, முஸ்லிம் கவுன்சில் ஒப் சிறிலங்கா, தேசிய சூரா சபை, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை, என்பன கூட்டாக இணைந்து அண்மையில் நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.

அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு, 

1951ஆம் ஆண்டின் இலக்கம் 13ஐக் கொண்ட இலங்கை முஸ்லிம் விவாக - விவாகரத்துச் சட்டமானது முஸ்லிம் தனியார் சட்டங்களின் ஒரு பகுதியையும் கொண்டுள்ளது. எந்தவோர் முஸ்லிம் நபரும் மீறிச் செயற்பட முடியாத, புனித குர்ஆனின் கட்டளைகள் தொடர்பான அம்சங்கள் அதனுள் உள்ளடக்கம் பெற்றுள்ளன.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஆயிரம் வருடங்களுக்கும் மேலான பூர்வீகத்தை இங்கு கொண்டுள்ளார்கள். இவர்கள் பின்பற்றிவரும் இவர்களது உரிமைகள் தொடர்பான விடயங்கள் தொடர்பான விடயங்களான விவாக - விவாகரத்து, தாபரிப்பு, நன்கொடை, வாரிசுரிமை, முஸ்லிம் தர்ம நிதியம் உள்ளிட்ட பள்ளிவாசல்கள், பெரியார் அடக்கஸ்தலங்கள் மற்றும் இஸ்லாமிய விடுதி நிலையங்கள் யாவும் எமது நினைவுக்கப்பால் செல்லும் காலம் முதல் இந்நாட்டில் ஆட்சிபீடமேறிய ஆட்சியாளர்களின் ஒப்புதலையும் அங்கீகாரத்தையும் பெற்றே வந்துள்ளன.

இலங்கை அரசியல் யாப்பின் அடிப்படை உரிமைகள் மீதான அத்தியாயம் III இல் கூட சமய, நம்பிக்கை வழிபாடு, வணக்க வழிபாடு மற்றும் சமய போதனைகளைப் பின்பற்றல் போன்றவற்றுக்கான உரிமைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன் இவ்வாறான உரிமைகள் யாவும் சர்வதேச ரீதியிலான பல உடன்படிக்கைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனங்கள் ஊடாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன. 

மேலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் இனரீதியான சிறுபான்மையின மற்றும் சமய ரீதியான மக்களால் பின்பற்றப்படும் சமய ரீதியான, கலாசார ரீதியான உரிமைகளையும் அவர்களது சமய வழிபாட்டுரிமைகளையும் மறுக்கப்படலாகாது ஒன்றும் இவ்வாறான சர்வதேச உடன்படிக்கைகள் ஏகோபித்த அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 

வெளிநாட்டு உறவுகள் அமைச்சர்  தினேஷ் குணவர்தனவால் 2020 பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதியில் நடந்தேறிய மனித உரிமைகள் தொடர்பான 43ஆவது உயர்மட்ட கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்டவாறு, இலங்கை நாடானது, பல்லின, பல மொழி, பல மத மக்களைக் கொண்டுள்ள நாடென்றும் அங்கு வாழும் சிறுபான்மையின மக்கள் அவர்களது சமய வழிபாட்டுரிமைகளையும், சமய போதனைகளையும் வெளிப்படுத்தப் பின்பற்றும் உரிமையினை உறுதி செய்து, ஏற்றுக் கொள்ள வேண்டியது மிக முக்கியமானதென்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ஓர் இன ரீதியான அல்லது சமய ரீதியான சிறுபான்மை மக்களின் உரிமைகளை ஆதரித்துப் பாதுகாப்பதானது குறித்த நாட்டின் அரசியல் மற்றும் சமூக ஸ்திரப்பாட்டுக்கு வழிவகுக்கும் என்பது தேசத்துவ அந்தஸ்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையொன்றாகும்.

இதன் பின்னணியில் உற்று நோக்கும் போது, இந்நாட்டில் அமுலிலுள்ள முஸ்லிம் சட்டத்தின் சில அம்சங்களையும் அல்லது நிறுவனங்களையும் தடை செய்வதற்கான அமைச்சரவை முடிவானது முஸ்லிம்களின் சமய வழிபாட்டுரிமையை நேரடியாக மீறும் செயலொன்றாகவே கருதப்படுகிறது. உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் ஏற்படக் கூடிய சமய, சட்ட சார்பு மற்றும் சட்டமுறைச் சிக்கல்களை.

குறிப்பாக, தடையால் ஏற்படக்கூடிய தேவையற்ற நிலைமைகளின் பின்னணியில், அமைச்சரவையின் இத் தீர்மானமானது  மீளாய்வுக்கு உட்படுத்தப்படல் வேண்டும்.

தனியார் சட்டத்தை வேறுபடுத்திக் காட்டும் விதத்தில், தனியார் சட்டங்களின் பல்வேறுபட்ட கூறுகளை ஒன்றாகச் சேர்த்தவாறு அமையப்பெற்றுள்ள சட்ட முறையொன்றைக் கொண்டுள்ள ஒரு நாட்டில், அத்துடன் ஒரு சிறுபான்மையினம் தொடர்பான இவ்விடயத்தில், குறித்த தனியார் சட்டத்தின் கீழ் வரும் சில அம்சங்கள் மற்றும் அல்லது நிறுவனங்கள் மீதான தடையானது குறித்த இனக்குழுவினரை உள்ளூரில் மாத்திரமல்லாமல் சர்வதேச ரீதியாகவும், அடக்கியொதுக்கும் மற்றும் அல்லது தனிமைப்படுத்தும் செயலொன்றாகவே தோன்றுகின்றது.

முஸ்லிம் விவாக - விவாகரத்துச் சட்டத்தில் உள்ள (MMDA) பல விடயங்களில் மாற்றங்கள் / திருத்தங்கள் தேவைப்படுகின்றதென்பதையும் அவற்றுக்கு முஸ்லிம் சமூகம் முழுமனதுடன் ஆதரவைத் தெரிவிப்பதையும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம். 

அதேவேளை, மாற்றங்கள் /திருத்தங்கள் என்ற போர்வையில் குறித்த சில விடயங்களை /நிறுவனங்களை இல்லாதொழிப்பதை அல்லது தடை செய்வதை முஸ்லிம் சமூகம் எதிர்த்து நிற்கின்றது. ஏனெனில், அவ்வாறான செயற்பாடு புனித குர்ஆன் எடுத்தியம்பும் அம்சங்களை மீறுவதாகும். முன்மொழியப்பட்டுள்ள வழிமுறையானது, மாறாக, முஸ்லிம் சட்டத்தில் உள்ள குறித்த அம்சங்கள் மற்றும் அல்லது நிறுவனங்கள் என்பவற்றில் ஏற்படக்கூடிய துஷ்பிரயோகங்களைத் தவிர்த்து, ஒரு சமநிலையை ஏற்படுத்த கூடிய மிகவும் பொருத்தமான ஏற்பாடுகளைக் கொண்டு வருவதாகும்.

அதேவேளை, ஒரு சட்டம் என்ற வகையில், முஸ்லிம் விவாக - விவாகரத்து சட்டத்தில் (MMDA) மாத்திரம் அல்லது ஊழல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் நடந்தேறியுள்ளதென்பதையும் நாம் இங்கு மனதில் கொள்ள வேண்டும். 

எனவே, தனியாக ஒரு குறித்த சட்டத்தை மாத்திரம் இலக்கு வைத்து செயற்படுவதானது பல உள்நோக்கங்களை அடிப்படையாக வைத்தவாறு செயற்படுகின்றது என்பதையும் பொருள்படுத்துகின்றது. அத்துடன் அவ்வாறான செயற்பாடானது, முஸ்லிம்களின் அடிப்படை சமய உரிமைகளையும் மிகமோசமாக மீறக்கூடியதாகவும் அமைகின்றது எனவும் தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள் தொடர்பாக முஸ்லிம் இயக்கங்கள் அரசுக்கு விடுத்துள்ள வேண்டுகோள் Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 13, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.