Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இலங்கை கல்விச் சமுகமயமாக்கலில் விசேட தேவை மாணவர்களின் கல்விப் பயணம்..!


கல்வி என்பது ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தைக் காட்டும் அளவுகோல். அந்த கல்வி, சிலருக்கே அல்லாமல், ஒவ்வொரு குழந்தைக்கும் சமமாகக் கிடைக்கும் போது மட்டுமே அது உண்மையான சமூக முன்னேற்றமாகும். 

விசேட கல்வித் தேவைகள் (Special Educational Needs-SEN) கொண்ட குழந்தைகளும், மற்ற குழந்தைகளைப் போலவே, பொதுக் கல்வி அமைப்பில் கற்றுக் கொள்ளும் உரிமை உடையவர்கள். 

இந்த அடிப்படை கருத்தையே முன்வைக்கும் கல்வி அணுகுமுறையே Inclusive Education (உள்ளடங்கல் கல்வி) ஆகும். 

இலங்கை கடந்த சில தசாப்தங்களில் உள்ளடங்கல் கல்வியில் முன்னேற்றம் கண்டிருந்தாலும், நடைமுறையில் இன்னும் பல சவால்கள் நிலவுகின்றன.

இலங்கையில் விசேட கல்வியின் தொடக்கம் காலனித்துவ காலத்திலேயே காணப்படுகிறது. 

1912ஆம் ஆண்டு கொழும்பில் பார்வை மற்றும் செவித் திறன் குறைபாடுகள் கொண்ட மாணவர்களுக்கான முதல் பாடசாலை நிறுவப்பட்டது. 

1925-இல் யாழ்ப்பாணத்தில் தமிழ்மொழி ஊடகத்தில் இரண்டாவது பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. 1939 ஆம் ஆண்டு கல்விச் சட்டம். 

1966 ஒருங்கிணைந்த கல்வி முயற்சிகள், 1990 "Education for All" கொள்கை மற்றும் 2006 மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐ.நா. ஒப்பந்தம் (CRPD) ஆகியவை இலங்கையின் சேர்க்கை கல்வி பயணத்திற்கு அடித்தளமாக அமைந்தன.

கல்வி அமைச்சின் தரவுப்படி, நாடு முழுவதும் 1,200க்கும் மேற்பட்ட சிறப்புக் கல்வி அலகுகளுடன் கூடிய பள்ளிகள் செயல்படுகின்றன. 

610க்கும் மேலான அலகுகள் கற்றல் குறைபாடுகள் உள்ள மாணவர்களுக்காக உள்ளன. 25க்கும் மேற்பட்ட விடுதி பள்ளிகள் கடுமையான குறைபாடுகள் உள்ளவர்களுக்கு சேவை செய்கின்றன.

இருப்பினும், நடைமுறையில் உள்ளடங்கல் கல்வி பல தடைகளை எதிர்கொள்கிறது.

ஒரு சாதாரண அரசுப் பாடசாலையில், wheelchair பயன்படுத்தும் ஒரு மாணவி வகுப்பறை அடைய தினமும் பிறரின் உதவியை நம்பியிருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. 

பல பாடசாலைகளில் ramps, மாற்றுத்திறனாளிகளுக்கேற்ற கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகள் இன்னும் இல்லை.அதேபோல், விசேட கல்வி பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் பற்றாக்குறை. உதவி தொழில்நுட்ப சாதனங்களின் (Assistive Technology) குறைபாடு மற்றும் சமூக மனப்பாங்கு ஆகியவை முக்கிய சவால்களாக உள்ளன.

இருப்பிலும் கொழும்பு பாடசாலை ஒன்றில் டவுன் சிண்ட்ரோம் உள்ள மாணவர்கள் இசை மற்றும் கலை வழியாக தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள். 

கண்டியில் ஒரு பாடசாலையில் ஆட்டிசம் உள்ள மாணவர்களுக்காக Sensory Room (உணர் அறை) அமைக்கப்பட்டுள்ளது. 

அது அவர்களுக்கு அமைதியான இடத்தைத் தருகிறது. இத்தகைய திட்டங்கள் உள்ளூர் மட்டத்தில் தோன்றிய முயற்சிகளின் வெற்றியைக் காட்டுகின்றன.

கனடா, பின்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ளடங்கல் கல்வி ஒரு கொள்கையாக மட்டுமல்ல, நடைமுறை செயல்பாடாகவும் அமல்படுத்தப்படுகிறது. 

தனிப்பட்ட கல்வித் திட்டங்கள், தொடர்ச்சியான ஆசிரியர் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு மூலம், ஒவ்வொரு மாணவரின் தேவையும் கருத்தில் கொள்ளப்படுகிறது.

இந்த அணுகுமுறைகளில் இருந்து இலங்கையும் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

இலங்கையில் விசேட தேவை கொண்ட மாணவர்களின் கல்வி மேம்படுத்த முன்வைக்கும் சில செயற்பாடுகள்:-

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் அனைவருக்கும் கல்வியை கட்டாய பாடமாக்குதல் பாடசாலை கட்டிடங்களை மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்றவாறு மேம்படுத்துதல் உதவி தொழில்நுட்ப சாதனங்களுக்கு அரசு நிதி ஒதுக்குதல்
பெற்றோர் மற்றும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அதிகரித்தல்.

எனவே உள்ளடங்கல் கல்வி என்பது கல்வி அமைச்சின் பொறுப்பு மட்டும் அல்ல. அது ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரின் கூட்டு பொறுப்பாகும். 

ஒவ்வொரு குழந்தையும் அதன் திறன் அல்லது குறைபாடு எதுவாக இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் கற்றுக் கொள்ளும் சூழலை உருவாக்குவது தான் ஒரு நியாயமான சமூகத்தின் உண்மையான அடையாளம். இலங்கையின் கல்வி சமூகமயமாக்கல் பயணம் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. 

குறிப்பாக சட்டங்கள் மற்றும் கொள்கை அறிக்கைகளின் மட்டத்தில், 1000க்கும் மேற்பட்ட விசேட அலகுகள் மற்றும் பல்கலைக்கழக நுழைவுத் திறனின் விரிவாக்கம் போன்ற சாதனைகள் பாராட்டுக்குரியவை, எனினும், பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் பற்றாக்குறை, போதிய உபகரணங்கள் இன்மை, ஆழமான சமூகப் பாரபட்சம் மற்றும் பெற்றோர் ஈடுபாட்டின்மை போன்ற நடைமுறைச் சவால்கள், கொள்கைகளை நடைமுறையில் கைக்கொள்ளுவதைத் தடுக்கின்றன.

உலகளாவிய சிறந்த நடைமுறைகளில் இருந்து கற்றுக்கொண்டு, தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து, ஆசிரியர் திறன்களை மேம்படுத்தி, வலுவான சட்ட மற்றும் கண்காணிப்பு வழிமுறைகளை உருவாக்குவதன் மூலம், இலங்கை ஒரு உண்மையான உள்ளடக்கல் கல்வி முறைமையை உருவாக்க முடியும். 

ஒவ்வொரு குழந்தையும், அதன் திறன்கள் அல்லது குறைபாடுகள் எதுவாக இருப்பினும், தன்னை முழுமையாக வெளிப்படுத்தவும், சமூகத்தின் உற்பத்தி உறுப்பினராகவும் வளரவும் உரிமை உண்டு. 

இந்த இலக்கை அடைவதே ஒரு நியாயமான மற்றும் முன்னேறிய சமூகத்தின் உண்மையான அளவுகோலாகும்.

(விஜயகுமாரன்_ஹரிணி)

கல்வியியல் சிறப்பு கற்கை இரண்டாம் வருட முதலாம் அரையாண்டு மாணவி.

கல்வி, பிள்ளை நலத்துறை,கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை.
இலங்கை கல்விச் சமுகமயமாக்கலில் விசேட தேவை மாணவர்களின் கல்விப் பயணம்..! Reviewed by www.lankanvoice.lk on ஜனவரி 06, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.