உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகல்: விஞ்ஞானிகள், மருத்துவர்கள் கவலை!
உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா நேற்று அதிகாரப்பூர்வமாக விலகியது. இதனால் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமாக உலக சுகாதார அமைப்பு செயல்படுகிறது. இதன் தலைமை அலுவலகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ளது.
உலகளவில் சுகாதாரம் தொடர்பான பணிகளை இந்த அமைப்பு மேற்கொள்கிறது. உலக சுகாதார அமைப்பில் பெரும்பாலான நாடுகள் உறுப்பினராக உள்ளன.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா நேற்று அதிகாரப்பூர்வமாக விலகியது.
சுகாதாரம் தொடர்பான தகவல்கள், அவற்றை பகிர்ந்து கொள்ளுதல், அதன் மூலம் நோய் பரவல் தொடர்பான எச்சரிக்கை வெளியிடுதல் போன்ற நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்புடன் நிறுத்திக் கொண்டதாக அமெரிக்க அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
இதன் மூலம் இந்த அமைப்புடன் அமெரிக்காவுக்கு இருந்து வந்த 78 ஆண்டு தொடர்பு முடிவுக்கு வந்துள்ளது.
இதற்கிடையில், கடந்த 2024, 2025-ம் ஆண்டுகளுக்கான தொகை 130 மில்லியன் டாலரை அமெரிக்க வழங்க வேண்டியுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த முடிவால் உலகளவில் ஏற்படும் நோய் பரவல், விஞ்ஞானிகளின் பங்களிப்பு, மருந்து நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பது போன்ற பணிகள் கடுமையாக பாதிக்கும் என்று ஜார்ஜ் டவுண் பல்கலைக்கழக பொது சுகாதார சட்ட நிபுணர் லாரன்ஸ் கோஸ்டின் கவலை தெரிவித்துள்ளார்.
என்னுடைய வாழ்நாளிலேயே மிக பேரழிவான முடிவை அமெரிக்க ட்ரம்ப் எடுத்துள்ளார் என்று லாரன்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இத்தனைக்கும் உலக சுகாதார அமைப்பை தொடங்கும் முயற்சியை முன்னெடுத்தது அமெரிக்காதான். அதேபோல், இந்த அமைப்புக்கு அதிக நிதியுதவி வழங்குவதும் அமெரிக்காதான். ஆண்டுக்கு சராசரியாக 111 மில்லியன் டாலரை இந்த அமைப்புக்கு அமெரிக்கா வழங்குகிறது.
அத்துடன், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், சுகாதாரத் துறை பணியாளர்களையும் உலக சுகாதார அமைப்பின் பணிகளுக்கு அமெரிக்கா ஈடுபடுத்தியது. ஆனால், தற்போது அமெரிக்கா விலகியது, சர்வதேச அளவில் புதிதாக நோய் பரவல் ஏற்பட்டால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர்.
இதற்கிடையில், கோவிட்-19 கரோனா தொற்றின் போது, அமெரிக்காவுக்கு முன்கூட்டியே சரியான தகவல்களை அளிக்கவில்லை, சீனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது, தவறான தகவல்களை வெளியிடுகிறது போன்ற குற்றச்சாட்டுகளை அமெரிக்கா கூறியது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் விலகலால் உலகளவில் போலியோ ஒழிப்பு, குழந்தைகள் உடல்நலம், புதிய வைரஸ் பரவினால் உடனடியாக ஆராய்ச்சி மேற்கொண்டு தடுப்பூசி தயாரித்தல் போன்ற பணிகள் பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
எனவே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 24, 2026
Rating:

கருத்துகள் இல்லை: