Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இலங்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காத்தான்குடி றஊப் மௌலவீ பகிரங்க கடிதம்



முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், 
இலங்கைப் பாராளுமன்றம், 
ஸ்ரீ ஜயவர்தனபுற கோட்டை.

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்.

நான் இலங்கைத் திருநாட்டின் கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம், காத்தான்குடியில் 1944ம் ஆண்டு பிறந்து இன்று வரை அங்கேயே வாழ்ந்து வருகிறேன். 

எனதூரைப் பற்றியோ, என்னைப் பற்றியோ உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டிய தேவைப்பாடு இருக்காது என்று நம்புகிறேன். 

ஏனெனில் காத்தான்குடி என்ற பெயர் இலங்கை வாழ் முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமன்றி அனைத்து இன, மத, மொழி மக்களிடையேயும் பிரபல்யமான பெயராகும். அதேபோல் “காத்தான்குடி றஊப் மௌலவீ” என்றால் இலங்கை வாழ் முஸ்லிம்களில் இப் பெயரை அறியாதவர் எவரும் இருக்க முடியாது. 

தற்போதைய பாராளுமன்றில் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் உங்களில் எவரும் என்னை விட வயது கூடியவர்களாக இல்லை. 

அதேபோல் நான் இப்பகிரங்க கடிதம் மூலம் உங்கள் கவனத்திற்குத் தருகின்ற விடயம் தொடர்பிலும் உங்களிற் பலர் முழுமையான விபரம் தெரியாதவர்களாகவே இருப்பீர்கள். 

அதேநேரம் உங்களில் எவரும் அல்லது 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் எவரும் அவர் எந்த மதத்தைப் பின்பற்றினாலும், அல்லது அவர் பின்பற்றும் மதத்தில் அல்லது மார்க்கத்தில் எந்த வர்க்கத்தை - எந்தக் கொள்கை சார்ந்தவராக இருந்தாலும் நாட்டின் சட்டத்துக்கோ அல்லது ஜனநாயகத்திற்கோ மாற்றமாக செயல்படமாட்டார் என்றே நான் நம்புகிறேன். 

மக்களால் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றில் பதவியேற்புச் செய்யும் போது “இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பை நிலைநிறுத்திப் பாதுகாப்பேன் என்றும், இலங்கைக் குடியரசுக்கு விசுவாசமாக இருப்பேன் என்றும், அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்கு இணங்க ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் கடமைகளை உண்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் உறுதியாகவும் உண்மையாகவும் வாக்குறுதியளித்து அறிவிக்கிறேன்” என்று கூறியே பதவியேற்புச் செய்கிறார். 

இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தின் 03ம் அத்தியாயம், 14ம் சரத்தின் (உ) பிரிவில் வழங்கப்பட்டுள்ள மத உரிமையின் அடிப்படையில் நான் கற்ற கல்வியை - எனது கருத்தை - கொள்கையை மக்கள் மன்றில் 1979ம் ஆண்டு முன்வைத்த போது அதனைச் சிலர் ஏற்றுக் கொண்டனர். வேறு சிலர் அதனை மறுதலித்தனர். 

இது அவரவரின் அறிவுப் புலமையையும், சிந்தனையையும் பொறுத்த விடயமாகும். 

நான் இங்கு குறிப்பிட விரும்புவது என்னவெனில் 2000ம் ஆண்டு 51ம் இலக்கப் பாராளுமன்றச் சட்டத்தினால் கூட்டிணைக்கப்பட்ட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா (ACJU) இலங்கைத் தாய்த்திரு நாட்டின் சட்டத்துக்கு முரணாக, அடிப்படைவாதத்தை வெளிப்படுத்தக் கூடிய ஒரு மா பெரும் தவறைச் செய்து இன்று வரை அதை நடைமுறைப்படுத்தி வருவது தொடர்பிலாகும்.

கடந்த 1979ம் ஆண்டு காத்தான்குடியில் இடம் பெற்ற ஒரு மீலாத் விழாவில் என்னால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா குறித்த கருத்தைப் பேசிய நானும், அதை ஏற்றுக் கொண்டவர்களும் “முர்தத்” இஸ்லாத்தை விட்டு மதம் மாறியவர்கள் என்றும், நானும் எனது கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர்களும் கொலை செய்யப்பட வேண்டியவர்கள் என்றும், நாங்கள் அனைவரும் “முஸ்லிம் ஜமாஅத்”தைச் சார்ந்தவர்கள் அல்ல என்றும், என்னாலோ, எனது கருத்துக்களை ஏற்றுக் கொண்ட மார்க்க அறிஞர்களாலோ ஏதாவது மார்க்க கடமைகள் மேற்கொள்ளப்பட்டால் அது சட்டப்படி நிறைவேறாதென்றும், எங்கள் அனைவரின் திருமணங்களும் ரத்தாகிவிட்டன என்றும், இவர்கள் “பத்வா” வழங்கிய நாளிலிருந்து நாங்கள் எங்கள் மனைவியருடன் மேற்கொண்ட உறவுகள் அனைத்தும் விபச்சாரம் என்றும், அவர்களின் “பத்வா”வின் பின் எங்களுக்குப் பிறந்த குழந்தைகள் விபச்சாரத்தில் பிறந்த குழந்தைகள் என்றும், எங்களில் எவரேனும் மரணித்தால் இஸ்லாமிய அடிப்படையில் ஒரு பிரேதத்திற்குச் செய்ய வேண்டிய இஸ்லாமிய கடமைகளில் எதுவும் செய்யக் கூடாதென்றும், முஸ்லிம் மையவாடிகளில் நல்லடக்கம் செய்யக் கூடாதென்றும் “பத்வா” தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். 

பாராளுமன்றில் இவர்களின் சபையை (ACJU) வை சட்டமூலமாக்கும் போது இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படியும், இலங்கைத் தாய்த்திரு நாட்டின் சட்டத்தின் படியும் இவர்களின் இச் செயல் - தீர்ப்பு வழங்கியமை முற்று முழுதான சட்டவிரோத செயல்பாடாகும். 

மாத்திரமின்றி இன்று வரை அதனை அமுல் செய்து கொண்டிருப்பது அதை விட சட்ட விரோதமாகும். 

இவர்கள் “பத்வா” தீர்ப்பு வழங்கிய காலத்திலிருந்து இன்று வரை நமது நாட்டை ஆண்ட, தற்போது ஆண்டுகொண்டிருக்கின்ற ஜனாதிபதி வரை 08 பேர் நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளாக இருந்துள்ளார்கள். 

இவ்வாறொரு பாரிய அநீதி இடம் பெற்றது தொடர்பில் இவர்கள் அறிந்திருந்தும் ஆக்க பூர்வமான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் கூறும் இவ்விடயம் உங்களுக்கோ அல்லது மற்றோருக்கோ ஒரு கதை போல் இருக்கலாம். “புண் உள்ளவனுக்கே அதன் வேதனையும், வலியும் புரியும்”

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்கிய ஜனநாயகத்துக்கு முரணான, சட்ட விரோத தீர்ப்பின் மூலம் இஸ்லாமிய சமூகத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் அதனை அமுல் செய்வதால் இலங்கை வாழ் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துக் காட்டக் கூடிய விடயங்கள் தொடர்பில் சில தகவல்களை உங்கள் கவனத்திற்குத் தருகிறேன். 

இவர்களின் இந்த “பத்வா” தீர்ப்பு நாட்டுச் சட்டத்துக்கு மாத்திரமின்றி மார்க்கத்திற்கும் முரணானதாகும். காரணம் குறித்த கருத்துக்களைப் பேசிய என்னை, நான் இலங்கைத் திருநாட்டில் எனதூரில் பகிரங்கமாக நடமாடக் கூடிய ஒருவனாக இருந்தும் கூட ஒரு தரமேனும் நேரில் விசாரிக்காமல் நான் பேசிய பேச்சு அடங்கிய ஒலிநாடாவை மாத்திரம் செவியேற்று தீர்ப்பு வழங்கியமையாகும். 

01. எனது கருத்துக்களை ஏற்றுக் கொண்ட எனது நண்பனும், கொள்கைப் பிரச்சாரகருமான மௌலவீ அல்ஹாஜ். MSM. பாறூக் காதிரீ அவர்கள் 29.05.1998 அன்று காத்தான்குடியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்கள். 

02. எனது வீட்டுக்கு வெடிகுண்டு வீசப்பட்டதுடன் எனக்கு ஆதரவளித்த மௌலவீமார்களுடைய வீடுகள் 04.08.1983ம் திகதி, 29.08.1983ம் திகதி மற்றும் 31.08.1983 திகதிகளில் கற்களால் எறிந்து சேதப்படுத்தப்பட்டது. 

03. 27.07.1983ம் திகதி ஸூபி முஸ்லிம்களின் பள்ளிவாயலாகிய காத்தான்குடி- 05 பத்ரிய்யஹ் ஜுமுஅஹ் பள்ளிவாயலுக்கு தீவைக்கப்பட்டது. 

04. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினால் 1979ம் ஆண்டு எனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பைக் குறிப்பிட்டு காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபை 2004-10-11ம் திகதி தினகரன் பத்திரிகையில் முஸ்லிம் மக்களுக்கு எச்சரிக்கை வெளியிட்டது. 

05. 31.10.2004ம் திகதி தொடக்கம் ஒரு வார காலம் வரையும், அதன் பின் 30.09.2006ம் திகதி தொடக்கம் 06.10.2006ம் திகதி வரையும் காத்தான்குடி நகரை முற்றாக முடக்கிய வஹ்ஹாபிஸ அடிப்படைவாதிகள் காத்தான்குடியில் காணப்பட்ட புராதன சின்னங்களான இஸ்லாமியப் பெரியார்களின் அடக்கஸ்தலங்களை தரைமட்டமாக்கி ஸூபி பள்ளிவாயல்கள், குர்ஆன் மத்ரஸாக்கள், ஸூபி முஸ்லிம்களின் வீடுகள், ஸூபி முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் என்பனவற்றை அடித்து நொறுக்கி தீக்கிரையாக்கினர். 

அத்துடன் துப்பாக்கி பிரயோகங்களையும் ஸூபி முஸ்லிம்கள் மீது மேற்கொண்டனர். அதுமட்டுமல்லாமல் வஹ்ஹாபிகளால் ஸூபி முஸ்லிம்கள் காத்தான்குடியிலுள்ள பள்ளிவாயல்களுக்கு அடித்து இழுத்துச் செல்லப்பட்டு பள்ளிவாயல் ஒலிபெருக்கிகளில் தாங்கள் ஸூபிஸத்தை கைவிட்டதாக பகிரங்கமாக அறிவிப்புச் செய்யுமாறு வற்புறுத்தப்பட்டனர். 

இதனால் ஸூபி முஸ்லிம்கள் அயல் பிரதேசங்களிலுள்ள தமிழ் கிராமங்களில் அகதிகளாக தஞ்சமடைந்தனர். 

06. 07.11.2006ம் திகதி எனது காரியாலயத்திற்கு வந்த ஆயுத தாரிகளைக் கொண்ட குழுவொன்று என்னைப் படுகொலை செய்ய 38 துப்பாக்கி வேட்டுக்கள் பிரயோகித்தனர். இதிலிருந்து இறையருளால் நான் உயிர் தப்பினேன். அல்ஹம்து லில்லாஹ்!

07. கொலை அச்சுறுத்தல் காரணமாக நமது நாட்டில் வாழ முடியாமல் நாட்டைத் துறந்து இந்தியாவின் தமிழ்நாட்டில் நாகூர் நகரில் நான் வாழ்ந்து கொண்டிருந்த போது 29.08.2007ம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைமைக் காரியாலயத்தில் ஸூபிஸ கொள்கைகளிலிருந்து நீங்கிக் கொள்வதாக தொலைநகல் மூலம் என்னிடமிருந்து உறுதிமொழி பெறப்பட்டது. இவர்கள் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளின் தீங்கிலிருந்து எனது கருத்துக்களை ஏற்றவர்களின் நன்மை கருதி இதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டேன். 

08.07.09.2007ம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை நிறைவேற்றுக் குழு முன்னிலையில் இவர்களின் “பத்வா”வை அமுல் செய்கின்ற காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஆகியன ஸூபீ முஸ்லிம்களுக்கு எதிரான 09 அம்ச ஜனநாயக விரோதக் கோரிக்கைகளை முன்வைத்து அவற்றை செயற்படுத்துமாறு பணித்தார்கள்.  

09. 2011ம் ஆண்டு முதல் 2017-மார்ச் மாதம் வரையான காலங்களில் தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் (NTJ) தலைவர் ஸஹ்றான் ஹாஷிம் ஒவ்வொரு வாரமும் வீதியில் மேடைகளை அமைத்து வஹ்ஹாபிஸ அடிப்படைவாதத்தை தீவிர பிரச்சாரம் செய்து என்னையும், ஸூபீ முஸ்லிம்களையும் “முர்தத்கள்” என்று கீழ்த்தரமாக தொடர்ச்சியாக விமர்சித்து வந்தார். இவரின் இச் செயற்பாட்டுக்கும் உலமா சபையின் “பத்வா”வே காரணம். 

10.காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா 19.01.2016ம் திகதி வஹ்ததுல் வுஜூத் (உள்ளமை ஒன்று) என்ற கொள்கையை ஏற்றோரும் அதை சரிகண்டோரும் இஸ்லாத்திலிருந்து மதம் மாறிவிடுகின்றனர் எனக் குறிப்பிட்டு பிரசுரம் வெளியிட்டு ஸூபி முஸ்லிம்களுக்கு எதிராக காத்தான்குடி மக்களை தூண்டினர். 

11.09.12.2016ம் திகதி பயங்கரவாதி ஸஹ்றான் ஹாஷிம் “கொல்லப்பட வேண்டிய முர்தத்களுடன் உறவு வைக்காதீர்கள்” என காத்தான்குடி தேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ) தலைமையகத்தில் உரையாற்றினான். 

12.அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தீர்ப்பை ஆதாரமாகக் கொண்டு ஸஹ்றான் ஹாஷிம் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் அலியார் சந்தியில் 10.03.2017ம் திகதி ஸூபீ முஸ்லிம்களுக்கு எதிரான கொலை முயற்சியில் இறங்கினர். 

13.11.03.2017ம் திகதி மற்றும் 13.03.2017ம் திகதிகளில் தேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ) உறுப்பினரும் சாய்ந்தமருது தாக்குதலில் ஈடுபபட்டவனுமான ALM. நியாஸ் தனது FACEBOOK பதிவில் அலியார் சந்திக்கலவரம் சம்பந்தமாக எழுதும் போது ஸூபி முஸ்லிம்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் தீர்ப்பு வழங்கப்பட்டவர்கள். எனவே இவர்களின் இரத்தம் மண்ணை நனைக்க வேண்டும் என தேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ) உறுப்பினர்களை மீண்டும் வன்முறைக்கு தூண்டினார். 

14.அலியார் சந்தி கலவரத்தின் பின் பயங்கரவாதி ஸஹ்றான் ஹாஷிம் தலைமறைவாகி இருந்த போது கிழக்கிலிருந்து புறப்படும் தீப்பிழம்பு முர்தத்  (மதம் மாறியவர்களையும்) முஷ்ரிக்குகளையும் (இணைவைக்கும் மாற்று மதத்தவர்ளையும்) எரிக்காமல் ஓயப்போவதில்லை என 05.09.2017ம் திகதி இணையத்தளத்தினூடாக எச்சரிக்கை விடுத்தான். 

15.24.01.2019ல் காத்தான்குடி தௌஹீத் கூட்டமைப்பு ஸூபி முஸ்லிம்கள் முர்தத் - மதம் மாறியவர்கள் எனும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தீர்ப்பை முஸ்லிம் மக்களுக்கு நினைவூட்டி எச்சரிக்கும் வகையில் ஊடக மாநாடு நடாத்தியது. 

16.ஸூபீ முஸ்லிம்கள் மரணித்தால் அவர்களது ஜனாஸா அறிவித்தல்களை காத்தான்குடியிலுள்ள ஜம்இய்யதுல் உலமாவின் கட்டுப்பாட்டிலுள்ள பள்ளிவாயல்களின் ஒலிபெருக்கிகளில் அறிவிப்பதற்கும், அவர்களின் ஜனாஸாக் கடமைகளை அப்பள்ளிவாயல்களில் மேற்கொள்வதற்கும், அதேபோல் அவர்களின் திருமணங்களை அப்பள்ளிவாயல்களில் சுதந்திரமான முறையில் மேற்கொள்வதற்கும் தற்பொழுதும் தடைகள் நடைமுறையில் உள்ளன. 

 மேற்குறித்த விபரங்களை உங்கள் கவனத்திற்குத் தந்தமைக்கான காரணம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் இந்த தீர்க்கப்படாத, வாபஸ் பெறப்படாத “பத்வா” தீர்ப்பின் மூலம் எதிர்காலத்தில் இலங்கைத் தாய்த்திரு நாட்டில் முஸ்லிகளின் இருப்பு கேள்விக்குறியாகலாம் என்பதனாலாகும். நீங்கள் இவ்விடயத்தில் கரிசனை காட்டவில்லையானால் அதற்காக நாளை மறுமையில் நீங்களும் இறை சந்நிதானத்தில் வைத்து விசாரிக்கப்படுவீர்கள் என்பதையும் இத்தருணத்தில் நான் ஞாகப்படுத்துகிறேன். 

இது தொடர்பில் பாராளுமன்றில் பேசப்பட்டு “ஹன்ஸாட்”டில் இது பதியப்பட வேண்டிய விடயம் என்று நான் எண்ணுகிறேன். முஸ்லிம்களுக்கு எதிராக இடம் பெற்ற ஜனாஸா எரிப்பு, திகனை கலவரம், தம்புள்ளை பள்ளி விவகாரம், ஈஸ்டர் தாக்குதலின் பின்னரான கெடுபிடிகள் மற்றும் விடயங்களுக்காக குரல் கொடுத்து அது “ஹன்ஸாட்”டில் பதிவு செய்யப்பட்டு வரலாற்றில் இடம் பிடிக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் நமது சமூகத்தினுள்ளே இடம்பெற்றிருக்கின்ற மிக மோசமான செயற்பாடு தொடர்பில் வாய் திறக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். 

இது ஜனாஸா எரிப்பை விடக் கடுமையானது. ஏனெனில் ஒரு முஸ்லிமை காபிராக்கி வைத்தல் - காபிர் என்று சொல்லுதல் அவனைக் கொலை செய்வது போன்றாகும் என்று கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளியுள்ளார்கள். 

இதற்காக நீங்கள் வாய் திறக்காவிட்டால் ஜனாஸா எரிப்புக்காக நீங்கள் பேசியது - ஆழுதது எல்லாம் முதலைக் கண்ணீர் வடித்தது போன்றாகிவிடும். 

இது தொடர்பில் வாய் திறந்தால் பேசுகின்ற பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக “மின்பர்” மேடைகளை அவர்கள் பயன்படுத்துவார்கள் என்று நீங்கள் அல்லாஹ்வை மறந்து உலமா சபைக்குப் பயப்படாதீர்கள். அதிகாரம் வழங்குபவனும், அதனைப் பிடுங்கி எடுப்பவனும் அவனே என்று நம்புங்கள். 

எமக்கு இழைக்கப்பட்ட அநீதி மனித உரிமை மீறல், மத உரிமை மீறல் என்று பகிரங்கமாக எனது தலைமையில் இயங்கும் பள்ளிவாயலுக்கு அருகில் ஸூபீ முஸ்லிம்கள் சார்பில் காத்தான்குடி நகர சபைத் தேர்தலில் போட்டியிட்ட தற்போதைய காத்தான்குடி நகர சபை பிரதித் தவிசாளர் அல்ஹாஜ் MIM ஜெஸீம் JP அவர்களின் தேர்தல் பிரச்சாரக் காரியாலயத்தை திறந்து வைக்க வந்த போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி MLAM ஹிஸ்புல்லாஹ் அவர்கள் காத்திரமான ஓர் உரையை என் முன்னேயே ஆற்றினார். 

அவருக்கு எனது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். இதேபோல் அவரோ, எவரோ பாராளுமன்றில் இது தொடர்பில் உரையாற்றி அரச கவனத்தை ஈர்க்கச் செய்தால் அவருக்கு என்றும் நன்றியுடையவனாக நானும் இருப்பேன், நான் மாத்திரமின்றி எனது தலைமையிலான ஸூபிஸ சமூகமும் இறுதி மூச்சு வரை இருக்கும். 

225  உறுப்பினர்களில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்கள் மூலம் இது தொடர்பில் பேச வைக்க நாம் இன்னும் முயற்சி செய்யவில்லை. முயற்சி செய்தால் கைக்கூடும் என்று நம்புகிறேன். அது முஸ்லிம் சமூகத்திற்கு உகந்ததல்ல என்று எண்ணுகிறேன். 

எனவே, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய உங்களிற் பலரிடம் நாம் நேரில் வந்து எமது பிரச்சினையை எடுத்துக் கூறியுள்ளோம். 

அனைவருமே எமது கருத்தைச் சரி கண்டாலும் அல்லாஹ்வுக்குப் பயப்படுவதை விட உலமா சபைக்கே அதிகம் பயப்படுபவர்களாக இருப்பது கண்டு நாம் வியந்து போனோம். நாம் அனைவரும் என்றோ ஒரு நாள் மரணித்து விடுவோம் என்பதை மனதில் இருத்தி பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் விடிவுக்காக உழைப்பீர்கள் என்று நம்பியவனாக....

நன்றி, வஸ்ஸலாம். 

மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
காத்தான்குடி. 05.
26.05.2026
இலங்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காத்தான்குடி றஊப் மௌலவீ பகிரங்க கடிதம் Reviewed by www.lankanvoice.lk on மே 28, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.