Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

பரம விரோதிகளாக ஆகிவிடும் அன்பிற்குரியவர்கள்!


பரம விரோதிகளாக ஆகிவிடும் அன்பிற்குரியவர்கள்!


உலக வாழ்வில் மன அமைதியுடனும் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வாழ்வதனையே ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தனியாட்களாகவும் குடும்பங்களாகவும் சமூகங்களாகவும் தேசங்களாகவும் எதிர்பார்க்கின்றனர்.


இனம் மதம் மொழி நிற வர்க்க வேறுபாடுகளுக்கு அப்பாலும் வேற்றுமைகள் களைந்து மனிதாபிமானத்துடன் சமாதான சகவாழ்வு வாழ்வதனையே அனைத்து ஆகமங்களும் வேதங்களும் தத்துவ ஞானங்களும் போதிக்கின்றன.


தனிமனிதர்களாகவோ, குடும்பங்களாகவோ, சமூகங்களாகவோ குலம் கோத்திரங்களாகவோ மனிதர்கள் தமக்குள் வேற்றுமைகள், பகைமைகள் பாராட்டி ஒருவருக்கொருவர் அல்லது ஒருதரப்பினர் மற்றொரு தரப்பினருடன் போட்டியும் பொறாமையும் கொண்டு சதிகள் பல செய்து, வம்பு வழக்குகள், சண்டை சச்சரவுகள், அடிதடிகள் என பிணக்குகள் வன்முறைகள், மோதல்கள் யுத்தங்கள் என உடல் பொருள் இழப்புக்கள் வரை செல்வது எவருமே விரும்பாத விடயங்கள் ஆகும்.


பரஸ்பரம், அன்பும், விசுவாசமும், புரிந்துணர்வும், ஒத்துழைப்பும், மன்னிப்பும், விட்டுக் கொடுப்பும் இருக்கின்ற குடும்பங்களில் தான் அமைதியும், நிம்மதியும், சந்தோஷமும் குடி கொண்டிருக்கும், அங்கு அச்சம், பயம், சந்தேகம் அறவே இருப்பதில்லை.


இவ்வாறுதான் நாம் உன்மையான உறவுமுறை எவ்வாறு இருக்கும், உண்மையான பகைமை எவ்வாறு இருக்கும் என்பதனை புரிந்து வைத்துள்ளோம், நிச்சயமாக அந்தப் புரிதலில் தவறேதும் கிடையாது.


ஆனால், அதற்கும் ஒருபடி மேலாக அல்லாஹ் தனது கலாமாகிய அல்குர்ஆனில் மனிதர்களது புலன்களுக்கு உடனடியாக புரியாத ஆனால் காலப் போக்கில் இம்மையிலும் மறுமையிலும் புரிகின்ற அன்பு பாராட்டல், பகைமை பாராட்டல் பற்றியும் சொல்லித் தருகிறான்.


பெற்றோர்களாக, கணவன், மனைவியாக, பிள்ளை குட்டிகளாக, உடன்பிறப்புகள், உற்றார் உறவினராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் தற்காலிக சோதனைக்களமாகிய இவ்வுலக வாழ்வின் மாயைகளில், சுகங்களில், ஆடம்பரங்களில், கேளிக்கைகளில் அகப்பட்டு நாளை மறுமை வாழ்வை தொலைத்து விடாது அவர்களை பரஸ்பரம் அறிவுறுத்தி, நல்லுபதேசங்கள் செய்து வாழ்வதிலேயே உண்மையான காருண்யமும் அன்பும் கரிசனையும் இருப்பதாக கற்றுத் தருகிறது.


புனிதமக்கமா நகரில் உயர் குடிமக்களாக செல்வச் செழிப்புடன் வாழ்ந்த மக்கள் படிப்படியாக இஸ்லாத்தில் நுழையும் பொழுது அவர்களைச் சார்ந்த கூட்டம் குடும்பத்தினர், மனைவி, மக்கள், உற்றார், பெறாறார் உடன்பிறப்புகள் அவர்களை தடுத்தார்கள், துன்புறுத்தினார்கள் அப்போது அல்லாஹ் அருள்மறையில் சில வசனங்களை அருளுகிறான்.


"ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர், எனவே அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்; அதையும் (அவர்களின் குற்றங் குறைகளை) மன்னித்தும், அவற்றைப் பொருட்படுத்தாமலும், சகித்துக் கொண்டும் இருப்பீர்களாயின் - நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன். மிக்க கிருபையுடையவன். (14) 


உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான், ஆனால் அல்லாஹ் - அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது. (15) ஆகவே, உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; (அவன் போதனைகளைச்) செவிதாழ்த்திக் கேளுங்கள்; அவனுக்கு வழிபடுங்கள்; (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்; (இது) உங்களுக்கே மேலான நன்மையாக இருக்கும்; அன்றியும்; எவர்கள் உலோபத்தனத்திலிருந்து காக்கப்படுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள். (16)


நீங்கள் அல்லாஹ்வுக்கு அழகிய கடனாகக் கடன் கொடுத்தால், அதை அவன் உங்களுக்காக இரட்டிப்பாக்குவான், அன்றியும் அவன் உங்களை மன்னிப்பான் - அல்லாஹ்வோ நன்றியை ஏற்பவன், சகிப்பவன். (17) மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிபவன்; (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்." (18) (ஸூரதுத் தகாபுன்)


உண்மையில் மேற்படி வசனங்கள் அன்றைய குறிப்பிட்ட ஒரு சூழலில் அருளப்பட்டிருந்தாலும் அவை எல்லாக் காலங்களுக்கும் சூழல்களுக்கும் பொருத்தமான வழிகாட்டல்களாகும்.


குழந்தைகளுடன் பிள்ளைகளுடன் அன்பு பாராட்டுகிறோம் என்பதற்காக அவர்கள் தொழுகை நோன்பு உட்பட சன்மார்க்க விடயங்களில், வரைமுறைகள், கட்டுக் கோப்புகளில் அசிரத்தையாக இருந்தால் நாங்கள் கண்டிக்காது விட்டு விடுவது அவர்களுக்கு செய்யும் தூரோகமாகும்.


அதே போன்றே கணவன் புரியும் அறப்பணிகளுக்கு மணைவிமக்களோ, மனைவி மக்கள் ஈடுபடும் நற்கருமங்களுக்கு கணவன் பிள்ளைகளோ தடையாகவோ இருந்து விட்டால் அது நிச்சயமாக உண்மையான உறவு பாராட்டலாக இருக்க மாட்டாது, மாறாக துரோகமாக, பகைமையாகவே இஸ்லாம் கற்றுத் தருகிறது.


"உங்களையும் உங்கள் கூட்டம் குடும்பத்தினரையும் நரக நெருப்பில் இருந்து காத்துக் கொள்ளுங்கள்" என்பதனையே அல்குர்ஆன் உண்மையான அன்பு பாசத்தின் அடையாளமாக எமக்கு கற்றுத் தருகிறது.


அது மாத்திரமன்றி ஆழமான ஆன்மீக பயிற்சியும் பக்குவமும் இல்லாத மனைவி/ கணவன் பிள்ளைகள் உலக வாழ்விலும் நன்றி விசுவாசம் உள்ள ஸாலிஹான நன்மக்களாக இருக்கவும் மாட்டார்கள், அவர்கள் பெற்றார்களை மதித்து நடக்கவோ அவர்களுக்கு கீழ்படிந்து நடக்கவோ மாட்டார்கள், கணவன் மனைவி உறவுகளிலும் ஒருவர் விடயத்தில் அடுத்தவர் அல்லாஹ்வை அஞ்சி கடமைப் பொறுப்புக்களை நிறைவேற்ற மாட்டார்கள், அமானிதம் பேணவும் மாட்டார்கள்.


உண்மையான அன்பும் பாசமும் உறவு முறைகளும் ஈருல ஈடேற்றங்களுக்கும் இட்டுச் செல்லா விட்டால் அவை பரஸ்பரம் நம்பிக்கைத் துரோகமாகவும், நயவஞ்சகமாகவும் கமையாகவுமே இஸ்லாத்தின் பார்வையில் பார்க்கப் படுகிறது.


ஆக, நாம் யாருக்காக அனைத்தையும் அர்ப்பணித்து இரவுபகலாக உழைக்கின்றோமோ எவருக்காக எமது ஆசா பாசங்களை துறந்து வாழுகின்றோமோ அவர்களுக்காக எமது வணக்கவழிபாடுகளில், ஸாலிஹான நல்லமல்களில், கடமைகள் பொறுப்புகளில் பொடுபோக்குகள், விட்டுக் கொடுப்புகள் செய்து விடாது, அவர்களை எமது எதிரிகளாக அல்லது நாளை மறுமையில் எமக்கு எதிராக சாட்சி சொல்லக் கூடியவர்களாக ஆக்கி விடாது அவர்கள் விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சி வாழ்வோமாக!


மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்

20.05.2026 || SHARE

பரம விரோதிகளாக ஆகிவிடும் அன்பிற்குரியவர்கள்! Reviewed by KR TV LANKAN VOICE on மே 22, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.