Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டவுடனே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்;பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன


“மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசு உறுதியாக உள்ளது. தேர்தலைப் பிற்போட வேண்டிய எவ்வித நோக்கமும் அரசுக்குக் கிடையாது. தேர்தல் முறைமையில் காணப்படும் சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டவுடன் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்.” – என்று பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எதிர்க்கட்சிகளினால் எழுப்பப்பட்டு வரும் சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு ஊடகங்கள் வாயிலாகப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தப்போது கூக்குரலிடும் தரப்பினர்தான், கடந்த 2017ஆம் ஆண்டு புதிய தேர்தல் சட்டத்தைக் கொண்டு வந்து மாகாண சபைத் தேர்தல் முறையை முழுமையாக நெருக்கடிக்குள்ளாக்கினார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், இன்று தாங்கள் செய்த தவற்றை மறைத்து, நாங்கள்தான் இந்த நெருக்கடியை உருவாக்கியதைப் போன்று எதிர்க்கட்சியினர் அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்கள்.

மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறையில் நடத்த வேண்டுமா அல்லது புதிய தேர்தல் முறைமையின் கீழ் நடத்த வேண்டுமா என்ற சட்டச் சிக்கலுக்கு நாடாளுமன்றத்தின் ஊடாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மிகத் தெளிவான வியாக்கியானத்தை அளித்துள்ளது.

தேர்தல் முறைமையில் காணப்படும் இந்தச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காகவே தற்போது நாடாளுமன்ற விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் இந்தத் பிரச்சினைக்கான தீர்வு அறிக்கையை இக்குழு சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட உடனே மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம்.

அதேவேளை, ஜனாதிபதித் தேர்தல், பொதுத்தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறைமைகளை விரிவாக ஆராய்ந்து, நாட்டுக்குப் பொருத்தமான ஒற்றைத் தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்துவதற்கும் விசேட நாடாளுமன்றக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஒருவருட காலத்துக்குள் இக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தேர்தல் முறைமைகளில் சட்டக் குறைபாடுகள் காணப்படுகின்றன என்பதை நன்கு அறிந்தே, வெறும் அரசியல் வெற்றிக்காகத் தேர்தலை அவசரமாக நடத்த முடியாது. முறையான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் இன்றித் தேர்தலை நடத்தினால், அது நாட்டின் ஒட்டுமொத்த நிர்வாகக் கட்டமைப்பையும் கடுமையாகப் பாதிக்கும். கடந்த கால ஆட்சியாளர்கள் அந்தத் தவற்றைத்தான் செய்தார்கள். ஆனால், தற்போதைய அரசு ஒருபோதும் அந்தத் தவற்றைச் செய்யப் போவதில்லை.” – என்றார்.

சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டவுடனே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்;பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன Reviewed by www.lankanvoice.lk on மே 29, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.