Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கான மூன்றாவது கட்ட சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு பயிற்சிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்


போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கான மூன்றாவது கட்ட சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு பயிற்சிகளின் ஆரம்ப நிகழ்வு நேற்று (20) கல்லடி பொலிஸ் பயிற்சி கல்லூரியில் இயங்கி வரும் குறுகிய கால புனர்வாழ்வு நிலையத்தில் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் நிலையப் பொறுப்பதிகாரியுமான திரு.ப.தினேஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் திரு. துசார முத்துகல அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.


அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக, போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு சேவைகளை வழங்கும் இந்நிலையம் மட்டக்களப்பு மாவட்டத்தில்  இயங்கி வருகிறது.


"நீங்கள் தனியாக இல்லை – நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், இங்கே மாற்றம் உருவாகிறது" என்ற கருப்பொருளின் கீழ் இதற்கு முன்னர் இரண்டு குழுக்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு பயிற்சிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டு, அவர்கள் சமூகத்தில் மீள இணைக்கப்பட்டுள்ளனர்.


அதன் தொடர்ச்சியாக மூன்றாவது குழுவினருக்கான பயிற்சிகள் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.


இலங்கையில் தமிழ் மொழி மூலம் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு சேவைகளை வழங்கும் முதல் நிலையமாக கல்லடி புனர்வாழ்வு நிலையம் விளங்குவதுடன், தொடர்ச்சியாக மூன்றாவது கட்ட பயிற்சிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


மேலும், "ரட்டம எக்கட" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பல்வேறு போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களுக்காக சுமார் 290,000 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வில் மனநல வைத்திய நிபுணர் ஆர். கமல்ராஜ், பிராந்திய மனநல வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். டான் சௌந்தரராஜா, சுகாதார அதிகாரியும் மனநல சிகிச்சையாளருமான வைத்தியர் திருமதி அனுசியா ஸ்ரீசங்கர், காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


புனர்வாழ்வு பெறும் சேவைநாடிகளை மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்குத் தேவையான உளவியல் ஆலோசனை, வாழ்க்கைத்திறன் மேம்பாடு, ஒழுக்கப் பயிற்சி மற்றும் தொழிற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் இந்நிலையத்தில் வழங்கப்படுகின்றன. மேலும், போதைப்பொருள் தொடர்பான தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை 1927 என்ற தேசிய உதவி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.


இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த மனநல வைத்திய நிபுணர் ஆர். கமல்ராஜ் அவர்கள், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் குற்றவாளியாக அல்லாது சிகிச்சை பெற வேண்டிய நோயாளியாக பார்க்கப்பட வேண்டும் என்றும், இந்த நோய் சரியான சிகிச்சை மற்றும் குடும்ப, சமூக ஒத்துழைப்பின் மூலம் குணப்படுத்தக்கூடியது என்றும் தெரிவித்தார். மேலும், போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபடும் ஒவ்வொருவரும் தம்மைச் சுற்றியுள்ள நண்பர்களையும் அதிலிருந்து மீட்க முன்வர வேண்டும். இதன் மூலம் ஆரோக்கியமானதும் சுபீட்சமானதுமான சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கான மூன்றாவது கட்ட சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு பயிற்சிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம் Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 21, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.