நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் அத்துமீறிய கட்டுமானங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவிப்பு.
நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் அத்துமீறிய கட்டுமானங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவிப்பு.
மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், ஆரையம்பதி செல்வாநகர் மயானக்காணி தொடர்பான பிரச்சினை குறித்து முக்கியமாகக் கலந்துரையாடிதாக பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்....
குறித்த மயானக்காணி தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அப்பகுதியில் காணிகளை அத்துமீறி அடைப்பதும், அவ்வாறு அடைக்கப்பட்ட காணிகளில் கட்டுமானப் பணிகளை முன்னெடுப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.
குறிப்பாக, நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருக்கும் சூழ்நிலையில் குறித்த மயானக்காணிக்கு மின்சார இணைப்புகள் வழங்கப்படுவதும், அத்துமீறி அடைக்கப்பட்ட காணிகளில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதும் நீதிமன்ற செயற்பாடுகளை பாதிக்கும் வகையிலான நடவடிக்கைகளாக அமைகின்றன.
இவ்வாறான செயற்பாடுகள் நீதிமன்றத்தை அவமதிக்கும் நிலைமையை ஏற்படுத்தக்கூடியவை என்பதையும் கூட்டத்தில் நான் சுட்டிக்காட்டினேன்.
எனவே, நீதிமன்ற வழக்கு நிறைவடையும் வரையில் குறித்த காணியில் இடம்பெறும் அத்துமீறிய காணி அடைப்புகள் மற்றும் கட்டுமானப் பணிகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.
அதேபோன்று, அப்பகுதிக்கு மின்சார இணைப்புகள் வழங்கப்படுவதையும் தடுத்து நிறுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினேன்.
ஆரையம்பதியை நகரமாக்குவதற்கான நடவடிக்கைகள்
அதேவேளை, ஆரையம்பதியை நகரமாக்கும் செயற்பாட்டின் ஒரு பகுதியாக, சிறுகைத்தொழில் திணைக்களத்திற்குச் சொந்தமான காணியின் ஒரு பகுதியை மண்முனைப்பற்று பிரதேச சபைக்கு வழங்கி, அக்காணியில் கடைத்தொகுதி ஒன்றை அமைப்பது தொடர்பாக கடந்த கூட்டத்தில் முன்மொழியப்பட்டிருந்தது.
எனினும், குறித்த காணியை பிரதேச சபைக்கு வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆரையம்பதி நகர அபிவிருத்திக்குத் தேவையான அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வது தொடர்பான பிரச்சினையை மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு முன்வைத்து, உரிய தீர்வைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.
ஆரையம்பதியை நகரமாக்கும் செயற்பாடுகள் மக்கள் நலனையும், பிரதேசத்தின் எதிர்கால தேவைகளையும் கருத்திற்கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டும்.
அதற்குத் தேவையான அரச காணிகளை உரிய முறையில் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தமிழர்களின் வரலாறு பாதுகாக்கப்பட வேண்டும்
அதேபோன்று, தமிழர்களின் வரலாறுகள் மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.
உலகநாச்சியார் கோவில் தொடர்பான அகழ்வாராய்ச்சிப் பணிகளை முன்னெடுப்பதற்கு முன்னர், அப்பகுதியுடன் தொடர்புடைய வரலாற்றுத் தகவல்கள் மற்றும் வரலாற்று ஆதாரங்கள் முழுமையாக மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்தேன்.
குறிப்பாக, ஹேமமாலா தொடர்பான வரலாற்றுத் தகவல்கள் மகாவம்சத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அவை உலகநாச்சியாரின் வரலாற்றுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகின்றன.
எனவே, குறித்த வரலாற்றுத் தகவல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய வரலாற்று ஆதாரங்களை விரிவாக ஆய்வு செய்த பின்னரே அகழ்வாராய்ச்சிப் பணிகளை முன்னெடுப்பது பொருத்தமானது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஆய்வுகள் மற்றும் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் போது, அப்பகுதியின் வரலாற்றுப் பின்னணி, தொல்லியல் ஆதாரங்கள் மற்றும் எமது மக்களின் வரலாற்று முக்கியத்துவம் ஆகிய அனைத்தும் உரிய முறையில் கருத்திற்கொள்ளப்பட வேண்டும்.
மக்களின் பிரச்சினைகளுக்கு நடைமுறைத் தீர்வுகள் அவசியம்
மேலும், ஆயுர்வேத வைத்தியசாலையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை, மட்டக்களப்பு கல்வியற் கல்லூரியின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (Wastewater Treatment Plant) தொடர்பான பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கூட்டத்தில் கலந்துரையாடினோம்.
ஆயுர்வேத வைத்தியசாலையின் சேவைகள் தடையின்றி இடம்பெறுவதற்கு தேவையான ஆளணியைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினேன்.
அதேபோன்று, மட்டக்களப்பு கல்வியற் கல்லூரியில் நிலவும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பான பிரச்சினைக்கும் உரிய தொழில்நுட்ப மற்றும் நிர்வாக ரீதியான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.
இப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய முன்மொழிவுகளைத் தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தோம்.
இதற்கு மேலதிகமாக, கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி, பொதுப் போக்குவரத்து, பேருந்து சேவைகள், காணி விவகாரங்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடினோம்.
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கூட்டங்களில் பதிவு செய்வதுடன் நின்றுவிடாமல், அவற்றுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும்.
மக்கள் முன்வைக்கும் பிரச்சினைகளை உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அவற்றுக்கான தீர்வுகள் கிடைக்கும் வரை தொடர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பது எமது பொறுப்பாகும்.
மண்முனைப்பற்று பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மக்களின் அடிப்படைத் தேவைகளை கருத்திற்கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டும்.
அதேவேளை, பிரதேசத்தின் நீண்டகால அபிவிருத்திக்குத் தேவையான திட்டங்களும் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், வைத்தியர் இ. சிறிநாத், மண்முனைப்பற்று பிரதேச சபையின் உதவித் தவிசாளர் மு. முத்துக்குமார், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் அத்துமீறிய கட்டுமானங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவிப்பு.
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 11, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 11, 2026
Rating:






கருத்துகள் இல்லை: