Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

“விழிப்புணர்வு மட்டும் போதாது; உயிரைக் காக்கும் சமூக வலையமைப்பு தேவை!” இளம் பெண்ணின் உயிரிழப்பு குறித்து தேவரஞ்சினி பிரான்சிஸ் வலியுறுத்தல்


“விழிப்புணர்வு மட்டும் போதாது; உயிரைக் காக்கும் சமூக வலையமைப்பு தேவை!”

இளம் பெண்ணின் உயிரிழப்பு குறித்து தேவரஞ்சினி பிரான்சிஸ் வலியுறுத்தல்

சர்வதேச தற்கொலைத் தடுப்பு தினமான செப்டம்பர் 10ஆம் திகதியன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை முன்னிட்டு, தற்கொலைத் தடுப்பு தொடர்பில் சமூக மட்டத்தில் தொடர்ச்சியான விழிப்புணர்வும் நடைமுறைச் செயற்பாடுகளும் அவசியம் என சர்வதேச உளவியல் சார் கற்கைகள் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் உள சமூக ஆதரவு மையத்தின்  தலைவியும் சமூக தன்னார்வலருமான திருமதி தேவரஞ்சினி பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச தற்கொலைத் தடுப்பு தினத்தை முன்னிட்டு, இந்த துயரச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்த அவர், இந்த இழப்பு ஒரு துயரச் சம்பவமாக மட்டும் கடந்து செல்லாமல், எதிர்காலத்தில் மற்றொரு உயிரை இழக்காத வகையில் சமூகப் பொறுப்பை உருவாக்குவதற்கான எச்சரிக்கையாக அமைய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

“தற்கொலைத் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது மட்டும் போதாது. ஆபத்தில் இருக்கும் ஒருவரை முன்கூட்டியே அடையாளம் காணவும், அவருடன் பாதுகாப்பாக உரையாடவும், ஆரம்பகட்ட ஆதரவை வழங்கவும், தேவையான நேரத்தில் உரிய தொழில்முறை சேவைகளுடன் இணைக்கவும் சமூகத்தில் பயிற்சி பெற்றவர்கள் இருக்க வேண்டும்” என தேவரஞ்சினி பிரான்சிஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்கொலை உயிரிழப்புகள் மட்டுமன்றி, தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டு பின்னர் காப்பாற்றப்பட்டவர்களும் உள்ளனர். எனவே, இவ்வாறான சம்பவங்களை தனித்தனி நிகழ்வுகளாகப் பார்ப்பதைவிட, மனநலம் மற்றும் உள சமூக ஆதரவை அடிப்படையாகக் கொண்ட நீண்டகால சமூகத் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

குறிப்பாக, பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மன அழுத்தத்தை கையாளுதல், தோல்வி மற்றும் ஏமாற்றங்களை எதிர்கொள்ளுதல், உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுதல், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறன், உதவி நாடுதல் மற்றும் வாழ்க்கைச் சவால்களை ஆரோக்கியமான முறையில் எதிர்கொள்ளுதல் போன்ற உளவியல் மற்றும் வாழ்க்கைத் திறன்கள் தொடர்ச்சியாக கற்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஒவ்வொரு கிராம மட்டத்திலும் பயிற்சி பெற்ற தற்கொலைத் தடுப்பு மற்றும் சமூக உள சமூக ஆதரவுக் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

“இக்குழுக்களுக்கு சிறந்த உளவியல் மற்றும் உள சமூகத் துறை நிபுணர்களைக் கொண்டு முறையான மற்றும் தொடர்ச்சியான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். உளவியல் முதலுதவி, ஆபத்து அறிகுறிகளை அடையாளம் காணுதல், பாதுகாப்பான முறையில் செவிசாய்த்தல், ஆரம்பகட்ட ஆதரவு வழங்குதல், அவசரநிலைகளில் உரிய சேவைகளுடன் இணைத்தல் மற்றும் தொடர்ச்சியான வழிகாட்டல் போன்ற நடைமுறைத் திறன்கள் அவர்களுக்கு வழங்கப்படுவது மிகவும் அவசியம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், இத்தகைய சமூகத் தடுப்பு குழுக்களுக்கு ஒருமுறை பயிற்சி வழங்குவதுடன் நடவடிக்கை நிறுத்தப்படாமல், தொடர்ச்சியான நிபுணர் மேற்பார்வை, மீள்பயிற்சி மற்றும் வழிகாட்டல் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“விழிப்புணர்வு இல்லாமல் தற்கொலைத் தடுப்பை முன்னெடுக்க முடியாது. அதேவேளை, விழிப்புணர்வு மட்டும் இருந்தும் நடைமுறை ஆதரவு அமைப்பு இல்லையெனில் எதிர்பார்க்கப்படும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அறிவு, விழிப்புணர்வு, மனிதநேயம் மற்றும் சரியான நேரத்தில் கிடைக்கும் உதவி ஆகியவை ஒன்றிணைந்தால்தான் உயிர்களைக் காப்பாற்ற முடியும்” என தேவரஞ்சினி பிரான்சிஸ் தெரிவித்தார்.

இந்த செய்தி, செப்டம்பர் 10ஆம் திகதியன்று உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்தின் துயரத்தை மதிக்கும் வகையிலும், சம்பவத்தின் தனிப்பட்ட விபரங்களை வெளிப்படுத்தாமல், சர்வதேச தற்கொலைத் தடுப்பு தினத்தின் நோக்கத்துக்கு அமைவாக சமூகத்தில் தற்கொலைத் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் வெளியிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஒரு உயிரிழப்புக்குப் பின்னர் வருந்துவதைவிட, ஆபத்தில் இருக்கும் ஒருவரை முன்கூட்டியே அடையாளம் கண்டு, அவரை பாதுகாப்பான ஆதரவு மற்றும் தொழில்முறை உதவியுடன் இணைப்பதே உண்மையான தற்கொலைத் தடுப்பு. சில நேரங்களில் ஒரு வார்த்தை, ஒரு செவிசாய்ப்பு அல்லது சரியான நேரத்தில் வழங்கப்படும் ஒரு உதவி ஒரு உயிருக்கு நம்பிக்கையாக அமையலாம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

தற்கொலைத் தடுப்பு என்பது செப்டம்பர் 10ஆம் திகதியன்று மட்டும் பேசப்படும் விடயமாக இல்லாமல், ஒவ்வொரு நாளும் குடும்பம், பாடசாலை மற்றும் சமூக மட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய மனிதநேயப் பொறுப்பாக மாற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
“விழிப்புணர்வு மட்டும் போதாது; உயிரைக் காக்கும் சமூக வலையமைப்பு தேவை!” இளம் பெண்ணின் உயிரிழப்பு குறித்து தேவரஞ்சினி பிரான்சிஸ் வலியுறுத்தல் Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 12, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.