கிராமத்தின் குரலுக்கு தீர்வு தேடும் பிரஜாசக்தி நிகழ்வு! – மட்டக்களப்பில் விசேட தேசிய வேலைத்திட்டம் காத்தான்குடியில் நடைபெற்றது
மட்டக்களப்பில் விசேட பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்ட நிகழ்வு, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களின் பங்கேற்புடன் இன்று (11) காத்தான்குடி கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கடமையாற்றும் பிரஜாசக்தி தலைவர்கள் மற்றும் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களுக்கு, பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சமூக அபிவிருத்திச் சபைகளின் செயற்பாடுகள் தொடர்பாகத் விளக்கமளிக்கப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்கள் பிரஜாசக்தி வேலைத்திட்டம் என்பது வறுமையை ஒழிப்பதை மாத்திரம் நோக்கமாகக் கொண்டதல்ல, இது கிராம மட்டத்தில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கிராம மட்டத்தில் செயற்படும் சமூக அபிவிருத்தி அமைப்புகள் வலுவாகவும் சிறப்பாகவும் செயற்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், பிரஜாசக்தி தலைவர்கள் தமது கிராமங்களில் காணப்படும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அத்துடன், அரசாங்கத்தினால் இவ் வருடம் மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு 10,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமது கிராமங்களில் காணப்படும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றைத் தீர்ப்பதில் சமூக மட்டத் தலைவர்கள் முனைப்புடன் செயற்பட வேண்டும் கோரிக்கை விடுத்தார்.
இதன் போது பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்டம் தொடர்பான விளக்கங்களை ஜனாதிபதி செயலகத்தின் மூத்த உதவிச் செயலாளர் குணவர்த்தன அவர்கள் வழங்கியதுடன், திட்ட கோரிக்கைகளை முன்வைக்கும் குழுவின் செயற்பாடுகள் மற்றும் சமூக அபிவிருத்திச் சபைகளின் பங்களிப்புக்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், பிரஜாசக்தி தலைவர்கள், பிரஜாசக்தி செயலாளர்கள் மற்றும் பல்வேறு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 11, 2026
Rating:

கருத்துகள் இல்லை: