Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இலங்கையில் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்ட (MMDA) சீர்திருத்தங்களுக்கான தேவைப்பாடும், அவசியமும் !


1)முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் (MMDA) தொடர்பான சிறு அறிமுகம்


இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கான தனிப்பட்ட குடும்பவியல் சட்டமாக 1951 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் (MMDA) உருவாக்கப்பட்டது. இச்சட்டம் முஸ்லிம்களின் திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம் (Maintenance), மற்றும் கைக்கூலி/(மஹர்) போன்ற விடயங்களை நிர்வகிக்கின்றது.

இலங்கையின் அரசியலமைப்பின் 16(1) பிரிவின் படி, அரசியலமைப்புக்கு முந்தைய பழைய தனிப்பட்ட சட்டங்கள் சட்ட ரீதியாக செல்லுபடியாகும் எனக் கூறப்பட்டுள்ளதால், இச்சட்டம் தனித்துவமான (தனியார் சட்டம்) என்கின்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது.  

2) MMDA சட்டத்தின் வரலாற்றுப் பின்னணி என்ன ?
-----------------------------------------------------

 1806 ஆம் ஆண்டின் (Code of 1806) டச்சு ஆட்சிக் காலத்தில் இலங்கை முஸ்லிம்களின் பயன்பாட்டிலிருந்த குடும்ப வழமைகள் (Customary) முதன்முதலில் தொகுக்கப்பட்டு ஆங்கிலேயர் ஆட்சியில் சட்ட வடிவம் பெற்றது.

பின்னர் 1929 ஆம் ஆண்டு  காதி (Quazi) நீதிமன்றக் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பல்வேறு திருத்தங்களுக்குப் பிறகு 1951 ம் ஆண்டின் தற்போதைய MMDA சட்டம் உருவாக்கப்பட்டு 1954 இல் நடைமுறைக்கு வந்தது.  

குறித்த சட்டம் நடைமுறைக்கு வந்து 72 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை குறித்த சட்டம் நடைமுறைக்குப் பொருத்தமானதாக திருத்தப்படாமை இந்த சட்டத்தின் பிரதான குறைபாடாகவே பார்க்கப்படுகிறது. 


இருந்தாலும் இந்த சட்டம் காலத்திற்கு பொருத்தமில்லாத பல சரத்துக்களைக் கொண்டுள்ளதாகக் கூறி, 1970ம் ஆண்டு முதலே பல குழுக்கள் அமைக்கப்பட்டன. 

குறிப்பாக 2009ம் ஆண்டு நீதியரசர் சலீம் மர்சூப் (Justice Saleem Marsoof) தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு, 9 ஆண்டுகள் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு 2018 இல் தனது இறுதி அறிக்கையைச் சமர்ப்பித்தது.  

குறித்த ஆய்வறிக்கையில் 12 விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் முதன்மையான சில விடயங்களை மாத்திரம் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.

3) குறித்த ஆய்வின் பிரகாரம் தற்போதைய MMDA சட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள பிரதான பிரச்சினைகள் / குறைபாடுகள்
-----------------------------------------------------

a) திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது எல்லை இல்லாமை:

தற்போதைய சட்டத்தில் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது நிர்ணயிக்கப்படவில்லை (12 வயதுக்கு குறைந்த பெண்களுக்கும் காதியின் அனுமதியோடு திருமணம் செய்ய முடியும்).  

b) மணப்பெண்ணின் சம்மதமும் கையொப்பமும் கட்டாயமின்மை: 

திருமணப் பதிவேட்டில் மணப்பெண்ணின் கையொப்பம் பெறுவது சட்டப்பூர்வமாகக் கட்டாயமில்லை (வாலி/பாதுகாவலரே கையொப்பமிடுகிறார்).  

c) பெண் காதிகள் நியமிக்கப்படாமை: 

தற்போதைய சட்டத்தில் காதி நீதிபதிகளாக ஆண்கள் மட்டுமே செயற்பட முடியும் எனும் நிலைப்பாடு காணப்படல்.  

d) காதி நீதிமன்றங்களின் கட்டமைப்பு மற்றும் தரம் குறைவு: 

இன்றைய சூழலில் காதி நீதிபதி நியமனத்தில் முறையான சட்டக் கல்வித் தகுதி (Legal background) அவசியமில்லை என்று காணப்படுவதோடு அநீதியான/ பக்கச்சார்பான விசாரணை நடைமுறைகள் காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.  

 e) பலதார மணம் (Polygamy): 

ஆண்களுக்கான நிபந்தனையற்ற பலதார மண உரிமை மற்றும் முதலாம் மனைவியின் சம்மதமோ அல்லது பொருளாதாரப் பாதுகாப்போ உறுதி செய்யப்படாமை.  

f) விவாகரத்து நடைமுறைகளில் சமத்துவமின்மை: 

கணவர் விவாகரத்துப் பெறுவதற்கும் (தலாக்), மனைவி விவாகரத்து பெறுவதற்கும் (பசஹ்) இடையில் காணப்படும் சமத்துவமற்ற மற்றும் கடினமான நடைமுறைகள்.  

இதற்கு மேலதிகமாக பலதரப்பட்ட நடைமுறை சார் சட்ட இடைவெளிகளும் சவால்களும் இச்சட்டத்தில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

4) நீதியரசர் சலீம் மர்சூப் குழுவின் அறிக்கை மற்றும் அமைச்சரவை முன்மொழிவுகளின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள முதன்மை திருத்தங்கள்:  
-----------------------------------------------------

a) திருமண வயதை 18 ஆக உயர்த்துதல்: 
அனைத்து இலங்கை முஸ்லிம்களுக்கும் விதிவிலக்கின்றி குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக நிர்ணயிக்கப்படல். 

b) மணப்பெண்ணின் கையொப்பம் கட்டாயமாக்கல்: மணப்பெண்ணின் பூரண சம்மதத்துடன் திருமணப் பத்திரத்தில் அவளது கையொப்பம் பெறுவது கட்டாயமாக்கப்படல்.  

c) பெண் காதிகளின் நியமனம்: தகுதியுள்ள முஸ்லிம் பெண்களையும் காதி நீதிபதிகளாகவும், Jurie சபை  உறுப்பினர்களாகவும் நியமிக்க வழிவகை செய்தல்.  

d) காதி நீதிபதிகளின் தகைமை: காதிகளாக நியமிக்கப்படுபவர்கள் சட்டத்தரணிகளாக (Attorneys-at-Law) / பொருத்தமான தகுதியுள்ளவர்களாக (Qualified Personnel) இருக்க வேண்டும் எனத் தகுதியை உயர்த்துதல்.

e) பலதார மணத்திற்கான கட்டுப்பாடுகள்: பலதார மணத்திற்கு கண்டிப்பான நிதித் தகுதி, காரணங்கள் மற்றும் நீதிமன்ற கண்காணிப்பு நிபந்தனைகளை உருவாக்குதல்.  

f) விவாகரத்துச் சீர்திருத்தம்: இரு தரப்பினருக்கும் சமமான விவாகரத்து நடைமுறைகள், 'மதா' (Mata'a - நஷ்டஈடு) மற்றும் ஜீவனாம்சத்தை தெளிவுபடுத்துதல்.  

முன்வைக்கப்பட்டுள்ள சீர் திருத்தத்தில் மேலுள்ள 6 விடயங்களும் மிகப் பிரதானமானவை. 

எனவே இவை எந்த சந்தர்ப்பத்திலும் இஸ்லாத்தை மலினப்படுத்துவதாகவோ, முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை கேள்விக்குட்படுத்துவதாகவோ இல்லை என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது.

5) குறித்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளும், அவசியமும்
----------------------------------------------------

a) சிறுவர் திருமணங்கள் தடுக்கப்பட்டு, பெண் பிள்ளைகளின் கல்வியும் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது.  
 
b) இலங்கை அரசியலமைப்பிலும் சர்வதேச மனித உரிமைகள் சாசனங்களிலும் (CEDAW, CRC) உறுதி செய்யப்பட்டுள்ள 

c) தகுதியான காதி நீதிபதிகளின் வருகை மற்றும் பெண் காதி/ ஜூரிகளின் நியமனம் மூலம் பெண் வழக்காளர்களுக்கு நியாயமான விசாரணை சூழல் கிடைத்தல்.  
 
d) தன்னிச்சையான விவாகரத்துகள் மற்றும் நிபந்தனையற்ற பலதார மணங்களால் கைவிடப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்தல்.  

6) குறித்த திட்ட வரைவின் தற்போதைய நிலை (Current Status of the bill)
-----------------------------------------------------

கடந்த காலங்களில் காணப்பட்ட அமைச்சரவைகள் இச்சட்ட திருத்தங்களுக்கு கொள்கை ரீதியான ஒப்புதல்களை வழங்கியிருந்தது.  
 
2025ம் ஆண்டின் பிற்பகுதியில், இலங்கை நீதி அமைச்சு MMDA சட்ட திருத்தங்களுக்கான பரிந்துரைகளை இறுதி செய்வதற்காக அமைக்கப்பட்ட Advisory குழுவை மீண்டும் கூட்டியது.  
 
2026 ஆம் ஆண்டில், மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) மற்றும் முஸ்லிம் தனிப்பட்ட சட்ட மறுசீரமைப்பு அமைப்பு (MPLRAG) உள்ளிட்ட அமைப்புகள் இச்சட்டமூலத்தை விரைவுபடுத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தங்களையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றன.
 
தற்போது இச்சட்ட வரைவு இறுதிக்கட்ட தொழில்நுட்ப மற்றும் சட்ட வரைஞர்களின் (Legal Draftsman) பரிசீலனையில் உள்ளதுடன், பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுவதற்கான இறுதி நகர்வுகள் இடம்பெற்று வருகின்றன.

7) முடிவுரை
-----------------------------------------------------

குறித்த சட்ட மூலத்தை நடைமுறைக்கு கொண்டுவருவதில் உள்ள நன்மைகளையும், அவசியத்தன்மையையும் இன்று அநேகமான முஸ்லிம் சமூகத்தின் முற்போக்கான சிந்தனையாளர்கள், புத்திஜீவிகள், சிவில் சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள் உணர்ந்துள்ளனர். 

ஏனெனில் இன்று நடைமுறையில் இருக்கும் MMDA சட்டம் என்பது இறைவனிடமிருந்து அருளப்பட்ட கட்டளை (வஹி) அல்ல. மாறாக 1951ம் ஆண்டு காலப்பகுதியில் அன்று இருந்த காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்றால் போல் உருவாக்கப்பட்ட சட்டம். 

எனவே குறித்த சட்டத்தை இன்று காணப்படும் நடைமுறை சூழலுக்கு ஏற்ப மாற்றம் செய்ய வேண்டிய தேவை உள்ளது.

அத்தோடு முன்மொழியப்பட்டுள்ள புதிய MMDA சட்டத்திருத்தத்தில் இஸ்லாத்தின் புனிதத்தன்மை எங்கும் கேள்விக்குட்படுத்தவில்லை என்பதோடு இலங்கை முஸ்லிம்களின் உரிமை சார்ந்த எந்த மீறல்களும் இங்கு இடம்பெறவில்லை என்பதை அறிந்துகொள்ள முடிந்தது.

எனவே இன்று முன்மொழியப்பட்டுள்ள புதிய MMDA சீர்திருத்தம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதற்கான தூண்டுதல்களை சமூகத்தின் ஒவ்வொரு தரப்பினரும் வழங்க வேண்டும் !

அத்தோடு மிக நீண்ட காலமாக பேசுபொருளாக இருந்து வரும் இந்த விடயம் இன்று திட்ட வரைபு வரை வந்திருக்கின்றது. இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று சட்ட மூலமாக நிறைவேற்றுவதற்கு உழைத்து வரும் அனைத்து தரப்பினருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِمْ
எந்த ஒரு சமுதாயத்தவரும், தம்மைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மாற்றுவதில்லை."
(அல்குர்ஆன் 13:11)

முஹம்மட் ஷாமில்
இலங்கையில் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்ட (MMDA) சீர்திருத்தங்களுக்கான தேவைப்பாடும், அவசியமும் ! Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 18, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.