Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கிராமத்துடன் உரையாடல்” மாத்தறையில்…


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கலந்துகொள்ளும் ‘கிராமத்துடன் உரையாடல்’ 16வது நிகழ்வுக்காக மாத்தறை மாவட்டத்தில் பிடபத்தற பிரதேச செயலகத்தின் கிரிவெல்கெலே வடக்கு 03 பியவர கிராம சேவகர் பிரிவு தெரிவு செய்யப்பட்டுள்ளது.தேரங்கல மகா வித்தியாலயத்தில் இன்று (27) காலை 10.00 மணிக்கு இடம்பெறும் கலந்துரையாடலில் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள், அதிகாரிகள் ஜனாதிபதி அவர்களுடன் கலந்துகொள்வார்கள்.

இது தென் மாகாணத்தின் இரண்டாவது “கிராமத்துடன் உரையாடல் ” நிகழ்ச்சித் திட்டமாகும்.

1958 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு குடியேற்றமான கிரிவெல்கெலே கிராம அதிகாரி பிரிவு, பிடபெத்தர பிரதேச செயலகப் பிரிவில் மிகவும் பின்தங்கிய கிராமமாகும். 622 குடும்பங்களைக் கொண்ட இந்த கிராம சேவகர் பிரிவின் மக்கள் தொகை 2990 ஆகும். மாத்தறை மாவட்டத்தில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் அதிகம் இங்கு வாழ்கின்றனர். தேயிலை, கறுவா, இறப்பர், மிளகு மற்றும் தென்னை ஆகியவை முக்கிய வருமான வழிகளாகும்.

கிரிவெல்கெலே மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் பல பொதுவான பிரச்சினைகளால் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீதி மற்றும் போக்குவரத்து சிக்கல்கள், சுகாதார வசதிகள் குறைபாடு, குடி நீர் மற்றும் பயிர்ச்செய்கைக்கான நீர் பற்றாக்குறை, விவசாய பிரச்சினைகள், வீட்டு வசதிகள் மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் இல்லாமை ஆகியவை இதில் அடங்கும். பாடசாலைகளில் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல கல்வி சிக்கல்களும் உள்ளன. வன விதிமுறைகள் தொடர்பான பல பிரச்சினைகளையும் மக்கள் எதிர்கொள்கின்றனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் “கிராமத்துடன் உரையாடல்” நிகழ்வை திட்டமிட்டதன் நோக்கம் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளுடன் தாமும் கிராமத்திற்கு சென்று மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார, சமூக பிரச்சினைகளை அவதானித்து அவற்றை கேட்டு உடனடித் தீர்வை பெற்றுக்கொடுப்பதன் மூலம் கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே ஆகும். விவசாயத்தின் அடிப்டையிலான பலமான தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை திட்டத்தில் மக்களுக்கு வழங்கிய முக்கியமான உறுதிமொழியாகும்.

தற்போது நாட்டின் மக்கள் தொகையில் 75 வீதமான கிராமிய மக்கள் நீண்ட காலமாக பல்வேறு பொருளாதார, சமூக பிரச்சினைகளுடனேயே வாழ்கின்றனர். காணி பற்றாக்குறை, சிக்கலற்ற காணி உறுதிப்பத்திரங்கள் இல்லாமை, குடிநீர் மற்றும் பயிர்ச் செய்கைக்கான நீரை பெற்றுக்கொள்ள முடியாமை, வீதி மற்றும் போக்குவரத்து சிக்கல்கள், சுகாதார மற்றும் கல்வி பிரச்சினைகள், யானை மனித மோதல், அதிகாரிகளின் கவனயீனம் போன்றவை அவற்றில் முதன்மையானதாகும். 

கிராமிய மக்கள் தமது பிரச்சினைகளை இனங்கண்டு அவர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை அடிப்படையாகக்கொண்டு அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அப்பிரச்சினைகள் இந்நிகழ்வில் தீர்த்து வைக்கப்படும். உடனடியாக தீர்க்க முடியாத பிரச்சினைகள் பின்னர் கவனத்தில் எடுத்துக்கொள்ள குறித்து வைத்துக் கொள்ளப்படும்.

கிராமிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஒருதரப்பு நியாயங்களை மட்டும் கவனத்தில் கொண்டு புரிந்துகொள்வது தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதை தாமதப்படுத்தும் என்பதே ஜனாதிபதி அவர்களின் கருத்தாகும். அதிகாரிகள் ஒரு முறையிலும் கிராமத்தினர் வேறு ஒரு முறையிலும் பிரச்சினையை காண்கின்றனர். 

பிரச்சினையின் எல்லா பக்கத்தையும் சரியாக இனங்கண்டு கொள்வதன் மூலம் தீர்வை பெற்றுக்கொடுப்பது இலகுவானதாகவும் உடனடியாக அத்தீர்வை பெற்றுக்கொடுக்க முடியுமென்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரை நடைபெற்ற “கிராமத்துடன் உரையாடல்” நிகழ்வுகளில் இவ்வாறே பல பிரச்சினைகளுக்கு உடனடி மற்றும் நீண்டகால தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியுமாக இருந்தது.

2020 செப்டெம்பர் 25ஆம் திகதி பதுளை மாவட்டத்தில் “கிராமத்துடன் உரையாடல்” நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. 

இது வரையில் மாத்தளை, இரத்தினபுரி, அனுராதபுரம், அம்பாறை, பொலன்னறுவை, களுத்துறை, மொனராகலை, கேகாலை, கண்டி, புத்தளம், திருகோணமலை, குருணாகலை காலி மற்றும் நுவரெலியா மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது .


கிராமத்துடன் உரையாடல்” மாத்தறையில்… Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 27, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.