‘டெல்டா’ வைரஸ் பயங்கரம் – விழிப்பாகவே வாழ்வோம்! அரசு கோரிக்கை!!
கொரோனா டெல்டா திரிபு பயங்கரமானது. அது வேகமாக பரவக்கூடிய அபாயம் உள்ளது. எனவே பயணத்தடை தளர்த்தப்பட்டாலும் சுகாதார நடைமுறைகளையும், வழிகாட்டல்களையும் முறையாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அத்துடன், ‘டெல்டா’ பரவல் தொடர்பில் எந்தவொரு தகவலையும் அரசு மறைக்கவில்லை.” – என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. இதன்போது ‘டெல்டா’ திரிபு பரவல் தொடர்பான தகவல்கள் மூடிமறைக்கப்படுகின்றன என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
”அவ்வாறு எந்தவொரு தகவலையும் நாம் மறைக்கவில்லை.அனைத்து விடயங்களும் பொறுப்புடன் வெளியிடப்பட்டு வருகின்றது.
இது தொடர்பான விடயப் பொறுப்பு சுகாதார அமைச்சிக்கு உரியது. அவ்வமைச்சின் பேச்சாளர்களும், விசேட வைத்தியர்களும் மக்களுக்கு தகவல்களை வழங்கி வருகின்றனர்.
தற்போது சமூகவலைத் தளங்கள் உள்ளன. நாட்டில் பலமான ஊடக கட்டமைப்பு உள்ளது. எனவே, தகவல்களை மறைக்க முடியாது என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.
என நினைக்கின்றேன். அதேவேளை, டெல்டா தரிபு பயங்கரமானது, அது வேகமாக பரவக்கூடும் என வைத்திய நிபுணர்கள் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனவேதான் நாடு பகுதியளவு திறக்கப்பட்டாலும் சுகாதார நடைமுறைகளையும், வழிகாட்டல்களையும் முழுமையாக பின்பற்றுமாறு மக்களிடம் கோரி வருகின்றோம்.” – என்றார்.

கருத்துகள் இல்லை: