Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

அரசாங்கத்தின் ஆயிரம் தேசியப் பாடசாலைத் திட்டத்தில் தெளிவான நோக்கம் இல்லை-நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான்

 அரசாங்கத்தின் ஆயிரம் தேசியப் பாடசாலைத் திட்டத்தில் தெளிவான நோக்கம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். புதன்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

அரசியல்வாதிகளினதும், அதிகாரிகளினதும் செல்வாக்குகளுக்கு அமையவே தேசியப் பாடசாலைக்கான பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் 19 பாடசாலைகள் தேசியப் பாடசாலைகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப் படுகின்றது. எனது மாவட்ட சகோதர பாராளுமன்ற உறுப்பினரான கௌரவ கபில அத்துக்கோரள அவர்கள் எல்லா இனங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் தேசியப் பாடசாலைகளைத் தெரிவு செய்வதில் கவனம் செலுத்தியுள்ளார். அதற்காக அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசியப் பாடசாலை இல்லாத பிரதேச செயலகங்களில் குறைந்தது ஒரு தேசியப் பாடசாலையாவது இருக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் தேசியப் பாடசாலைகள் தெரிவு செய்யப்படும் போது இடத்துக்கு இடம் வேறு கொள்கைகள் அமுல் படுத்தப் பட்டுள்ளன. 

குச்சவெளியில் அந்நூரியா மகா வித்தியாலயம் போன்ற சில பெரிய பாடசாலைகள் தேசியப் பாடசாலை கோரிக்கையை முன்வைத்த போது உயர்தர விஞ்ஞானப் பிரிவுள்ள பாடசாலைதான் தேசியப் பாடசாலையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது எனக் காரணம் கூறப்படுகின்றது.

ஆனால் தம்பலகமத்தில் அக்கொள்கை பின்பற்றப்படவில்லை. உயர்தர விஞ்ஞானப் பிரிவுள்ள முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரி தேசியப் பாடசாலையாகத் தெரிவு செய்யப்பட வில்லை. முள்ளிப்பொத்தானை மத்திய  கல்லூரியானது 1958 இல் ஆரம்பிக்கப்பட்ட கலை, விஞ்ஞான ,வர்த்தக, தொழில்நுட்ப பிரிவுகளை கொண்ட பல வைத்தியர்களை பட்டதாரிகளையும் உருவாக்கிய பாடசாலை. நல்ல பெறுபேறுகளைப் பெற்று வரும் இப்பாடசாலை பறக்கணிக்கப்பட்டுள்ளது. இங்கு தெரிவுக்கு வேறு காரணம் கூறப்படுகின்றது.

எனவே, முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரியையும், குச்சவெளி அந்நூரியா மகா வித்தியாலயத்தையும் தேசியப் பாடசாலைத் திட்டத்தில் உள்வாங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

திருகோணமலை நகரில் ஏற்கனவே சிங்கள மொழி மூல தேசியப் பாடசாலைகள் இரண்டு உள்ளன. தற்போது மூன்றாவது சிங்கள மொழி மூலப் பாடசாலை திருகோணமலையில் தேசியப் பாடசாலையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனை நகருக்கு வெளியே தெரிவு செய்திருக்கலாம். நாலாம் கட்டை சுமெதங்கரபுர மகா வித்தியாலயம், சீனக்குடா நாலந்தா மகா வித்தியாலயம் போன்ற பொருத்தமான பாடசாலைகள் நகருக்கு வெளியே உள்ளன. இவ்வாறான பாடசாலைகளுள் ஒன்றை தேசியப் பாடசாலையாகத் தெரிவு செய்திருந்தால் அப்பகுதி மாணவர்கள் பெரிதும் நன்மை அடைந்திருப்பார்கள்.

திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலகப் பிரிவுகள் உள்ளன. இவற்றில் கிண்ணியா தவிர்ந்த ஏனைய 10 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் புதிய தேசியப் பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவு மட்டும் இந்த அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

கிண்ணியாவில் ஒரு பாடசாலையையேனும் தேசியப் பாடசாலையாக உள்வாங்க முடியாத நிலை உள்ளமை குறித்து நான் மிகவும் கவலையடைகிறேன்.

எனவே. கிண்ணியாப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அல்ஹிரா மகளிர் மகா வித்தியாலயம், குறிஞ்சாக்கேணி மகா வித்தியாலயம், அந்நஜாத் மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளும் தேசியப் பாடசாலைத் திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும்.

அதே போல மூதூர் பிரதேசத்தில் சாதனைகள் பல படைத்த மிகவும் பெரிய பாடசாலையான அல் ஹிலால் மத்திய கல்லூரி தேசியப் பாடசாலைத் திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனையும் இத்திட்டத்தில் உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

அரசாங்கத்தின் ஆயிரம் தேசியப் பாடசாலைத் திட்டத்தில் தெளிவான நோக்கம் இல்லை-நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 08, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.