2022க்கு பின்னர் உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பும்..
அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலகில் சுமார் 70 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படலாம் என்றும் அவர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா 2ஆவது அலை பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனை தொடர்ந்து 3ஆவது அலை விரைவில் பரவ வாய்ப்பிருப்பதாக மருத்துவ நிபுணா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
“இந்தியாவில் கடந்த சில மாதங்களில் காணப்பட்டதைப் போல தற்போது கொரோனா தொற்று பரவவில்லை. எனவே தற்போது கொரோனா தொற்று மெதுவாகப் பரவும் நிலையை அடைந்துள்ளதாகக் கருதலாம். நோய்த் தொற்று பரவலைத் தடுப்பது குறித்த விழிப்புணா்வுடன் மக்கள் வாழத் தொடங்கியுள்ளனர்.
ஆயினும், கொரோனா தொற்றின் முதல் மற்றும் 2ஆம் அலைகளில் பாதிக்கப்படாதோர் அதிகமாக இருக்கும் பகுதிகள், குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் வாழும் பகுதிகள் ஆகியவற்றில் அடுத்த சில மாதங்களில் நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
2022 (அடுத்த ஆண்டு) இறுதிக்குள் உலகில் சுமார் 70 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என நம்பலாம். அதையடுத்து உலக நாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்புள்ளது. 3ஆம் அலை பரவும்போது, சிறுவர்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படலாம் என்ற கருத்து நிலவுகிறது.
இதனால், பெற்றோர்கள் கவலைப்படத் தேவை இல்லை. 18 வயதைக் கடந்தவா்களுடன் ஒப்பிடுகையில் குழந்தைகளும், சிறுவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது குறைவாகவே இருக்கிறது. தொற்றால் பாதிக்கப்படுபவா்களிடமும் குறைவான பாதிப்புகளே காணப்படுகின்றன.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. அதே வேளையில், சிறுவர்களிடையே நோய்த் தொற்று பரவமால் தடுப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும்” என்றும் விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் அந்த பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளார்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 31, 2021
Rating:

கருத்துகள் இல்லை: