Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வரின் நான்காவது வருட தினம்

இலங்கையை உலகுக்கு காட்டியவர் மர்ஹும் ஏ.எச்.எம்.அஸ்வர்.

முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வரின் நான்காவது வருட தினத்தை  முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது)


இலங்கை முஸ்லிம்களை குறிப்பாக, இலங்கையை உலகத்துக்குச் சொன்னவர்களுள் ஒருவர்தான் முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.எச்.எச்.அஸ்வர். அவரது 4ஆவது வருட நினைவு தினம் (30) இன்றாகும். அவர் மறைந்தாலும் அவரது காலத்தில் வாழ்ந்த நாங்கள் அவருக்காகச் செய்கின்ற கைம்மாறு, அவரது பணிகளை ஞாபகப்படுத்துவதும், அவருடைய சேவைகளை எடுத்துச் சொல்வதும், எதிர்கால சந்ததியினருக்கு அதனைச் சரியாகச் சொல்வதும்தான் மிகப் பொருத்தமானது என நினைக்கின்றேன்.

மர்ஹும் ஏ.எச்.எம் அஸ்வர், சுமார் 8 தசாப்தங்கள் அதாவது 80 வருடங்களுக்கு மேலாக உலகில் வாழ்ந்தவர். கொழும்பு சாஹிராக் கல்லூரியிலே மர்ஹும் ரீ.பி.ஜாயா, மர்ஹும் ஏ.எம்.ஏ. அஸீஸ் போன்ற பெருந்தலைவர்கள் மத்தியில் கல்வி கற்று, உயர்ந்து வந்தவர். அந்த சாஹிராவில் கற்ற காலத்தில், தன்னுடைய குருவாக இருந்தவர்களுள் ஒருவர் என்று மர்ஹும் அறிஞர் எஸ்.எம். கமால்தீன், மர்ஹும் டாக்டர் அல்லாமா எம்.எம். உவைஸ் அதேபோல மர்ஹும் எம்.ஏ. பாக்கீர் மாக்கார் போன்றவர்களைச் அடிக்கடி சொல்வார். எதிர்காலத்தில் அதே பாக்கீர் மாக்காருடைய அந்தரங்கச் செயலாளராக அஸ்வர் வந்து சேர்கிறார். 1960ஆம் ஆண்டு காலப்பகுதியில் மர்ஹும்களான டாக்டர் எம்.ஸி.எம். கலீல்,  ரீ.பி.ஜாயா, சேர். ராசிக் பரீட்,  பதியுதீன் மஃமூத், அதேபோல பழீல் ஏ. கபூர் போன்ற பெரும் அரசியல் தலைவர்களுடைய காலத்தில் வாழ்ந்து பெற்ற படிப்பினைகள்தான். அடிக்கடி மர்ஹும் டாக்டர் எம்.ஸி.எம் கலீலை தன்னுடைய அரசியல் குரு என்றும் அரசியல் வழிகாட்டியாக இருந்தவர் மர்ஹும் எம்.ஏ. பாக்கீர் மாக்கார் என்றும் சொல்லுவார். மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்ததனால் வாழ்க்கையில் நான் நிறைய உதாரணங்களைக் கண்டேன். என்னோடு, மூத்த ஊடகவியலாளர் என்.எம் அமீனும் சேர்ந்து வலதும் இடதுமாக முன்னாள் சபாநாயகர் மர்ஹும் எம்.ஏ. பாகீர் மாகாருக்கும் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வருக்கும் இருந்து, அவர்களது அரசியல், ஒழுக்க, சமய வாழ்க்கையில் இருந்து நிறைய விடயங்களைப் படித்துக் கொண்டோம்.


அடிக்கடி இலங்கை முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் வருகின்ற போதெல்லாம் மர்ஹும் எம்.ஏ. பாகீர் மாக்கார் சபாநாயகராக இருந்து தலைமை வகித்த, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளினை எடுத்துச் சென்றார். 

அதே வாலிப முன்னணிகள் நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்ட போது அந்த முன்னணிகளின் தூதுவர்களாக நாங்கள் இருந்தோம்: செயற்பட்டோம். இலங்கை முஸ்லிம்களை குறிப்பாக, உலகத்துக்குச் சொன்னவர் மர்ஹும் அஸ்வர் என்று ஆரம்பத்தில் நான் சொன்னேனே அதற்கு காரணம் இருக்கிறது.

1967ஆம் ஆண்டு ஹிஜ்ரி 1400ஆம் ஆண்டு இலங்கையில் கொண்டாடப்பட்டது. அப்போது முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் என்று ஒன்று இருக்கவில்லை. இலங்கை இஸ்லாமியர்களுடைய மத்திய நிலையமாக இல்லாமிய நிலையம் என்று முன்னாள் அமைச்சர் மர்ஹும் எம்.எச். முஹம்மத் தலைமையில் ஓர் அமைப்பு இருந்தது.

ஹிஜ்ரி நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும் என்று மர்ஹும் அஸ்வர் கங்கணம் கட்டி, அந்த விழாவினைக் கொண்டாடினார். அவர் நடாத்திய அந்த மாபெரும் மாநாடு கொழும்பு சுகததாச விளையாட்டு உள்ளக மற்றும் வெளி அரங்குகளில் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் நாடு முழுவதிலும் இருந்து அழைக்கப்பட்டிருந்தனர். அங்கே ஹிஜ்ரி 1400ஆம் ஆண்டுக்கான ஞாபகார்த்த முத்திரை ஒன்றும் வெளியிடப்பட்டது. 

மர்ஹும்களான டாக்டர் எம்.ஸி.எம். கலீல், எம்.எச். முஹம்மத், எம்.ஏ. பாக்கீர் மாகார், ஏ.ஸீ.எஸ். ஹமீத், பதியுதீன் மஃமூத் என்ற பெரும் தலைவர்கள் இணைந்து இந்தப் பெரும் விழாவை எடுத்தனர். எனக்கு இப்போதும் ஞாபகம். அப்போது எனக்கு 11,12 வயதிருக்கும். அந்த வயதிலும்; ஓடோடி வந்து அந்த நிகழ்ச்சியில் பாடசாலை மட்டத்தில் இருந்து கலந்து கொண்டேன். அன்றிலிருந்து அரசியல் ஆர்வத்தில் தூண்டப்பட்ட நான், அவரோடு இணைந்து பிற்காலத்தில் சமூக, சமய, கல்விப்பணிகளைச் செய்யக்கூடிய வாய்ப்பினைப் பெற்றேன். அந்த முத்திரை வெளியீட்டு விழாவின் மூலமாக முஸ்லிம் சமூகத்தை வெளிப்புறச் செய்தவர்களுள் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வரும் ஒருவர். முன்னாள் அமைச்சர் மர்ஹும் எம்.எச். முஹம்மதுக்கு மர்ஹும் அஸ்வர் பக்கபலமாக இருந்தார். ராபிததுல் ஆலமுல் இஸ்லாம் என்ற உலக முஸ்லிம் லீக்கை இலங்கைக்கு எடுத்து வந்தவர்கள் அதன் ஸ்தாபகச் செயலாளர் டாக்டர் பஸ்லுல் ரஹ்மான் அன்ஸாரி அதேபோல டாக்டர் உமர் நஸீர் போன்றவர்கள். உலக முஸ்லிம் லீக் ராபிதாவுடைய தலைவர் போன்றவர்கள் இலங்கை வருவதற்கு காரணமாக இருந்தவர் மர்ஹும் அஸ்வர். அவர்களோடு சேர்ந்து உலக நாடுகளுக்கு, உலக மாநாடுகளுக்கு சென்ற பெரும் பாக்கியம் பெற்றவரும் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வர்.

மர்ஹும் எம்.எச். முஹம்மத் அடிக்கடி சொல்வார். எனக்கு இரண்டு பேர் இருந்தனர். ஒன்று மர்ஹும் எம்.பி.எம். மாஹிர் அடுத்தவர் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வர். இந்த இரண்டு பேரும் என்னுடைய சமூக மற்றும் சமயப் பணிகளை எடுத்துச் சென்றவர்கள். இந்த இருவரின் மூலமாக என்னுடைய இயக்கத்தையும் சமுதாயத்தையும் பாதுகாத்து வளர்த்தவனாக இருக்கின்றேன். 

அந்த வகையிலே முஸ்லிம் லீக்கை உலகளாவிய மட்டத்திலே உலக முஸ்லிம் லீக்கில் இணைத்துப் பதிந்து இந்த நாட்டுக்குச் சேவை செய்வதற்கு வாய்ப்பாக இருந்தவர்களுள் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வர் மிக முக்கியமானவர் என்று மர்ஹும் எம்.எச். முஹம்மத் அடிக்கடி சுட்டிக்காட்டுவார்.  

எம்.எச்.முஹம்மத் மரணமானதின் பின்னர்தான் ஏ.எச்.எச். அஸ்வர் மரணமாகின்றார். ஆனால், அவர்கள் காலத்தில் செய்த பணிகளை அடிக்கடி இருவரும் பேசிக் கொள்வர். 

நான் சின்ன வயதில் இருந்து அவர்களிடமிருந்து அரசியலைப் படித்தேன். ஆத்மீகம், கல்வி, சமூக, அரசியல், பொருளாதாரப் பணிகள் பற்றிப் படித்தேன். கல்வித்துறையிலே முஸ்லிம்கள் வீழ்ச்சியடைந்த காலத்தில் மர்ஹும் கலாநிதி பதியுதீன் மஃமூத் வந்து சேர்கிறார். அவருடனும் இணைந்து அரசியல் பணி செய்தவர்தான் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வர்.

மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் தனிக்கட்சி அமைத்துச் சென்றதினால், தனியாக சமுதாயத்தில் இருந்து பிரிந்து சென்றாலும் அவர் கிழக்கிலங்கைக்கு தலைமை வகித்தார். முழு நாட்டுக்கும் தலைமை வகித்த, மர்ஹும்களான சேர். ராசிக் பரீட், பதியுதீன் மஃமூத் என்ற பெரும் தலைவர்கள் நாட்டிலே இருந்து செய்த பணிகளை எப்போதும் அடிக்கடி ஞாபகப்படுத்தக் கூடிய ஒருவராகத்தான் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வர் இருந்தார்.

மர்ஹும் ஏ.எச்.எம் அஸ்வர் ஓர் அரசியல் கலைஞர்: இல்லை அறிவுக் கலைஞர். அதேபோல் வானொலி மற்றும் தொலைக்காட்சி கலைஞர். அவரோடு நான் நிறைய வானொலி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். அவர் கடைசி காலங்களில் மஹிந்த அரசை ஆதரிக்கக் காரணம், அரசியலில் அவர் சார்ந்த கட்சி அவரைக் கைவிட்டது. 

அவர் சார்ந்த கட்சியினர் சுயநலவாதிகளாக மாறினர். அவர் பொறுமையாக எவ்வளவு காலம் இருப்பது என எண்ணிக் கொண்டு தன்னுடைய பணி அரசியல் பணிதானே என்று மஹிந்த ராஜபக்ஷவுடைய பொதுஜன பெரமுனவில் இணைந்து அதனை வளர்ப்பதில் பாடுபட்டார். அந்தப் பகுதியிலும் முஸ்லிம்கள் இருக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் அதற்குக் காரணம். வானொலியில் நான் கடமையாற்றிய சுமார் நாற்பதாண்டு காலத்துக்குள் எனக்கு 25 ஆண்டுகள் பக்கபலமாக இருந்தார். நிறைய ஆலோசனைகள், அறிவுரைகளைத் தந்தார். முஸ்லிம் தலைவர்களைத் தேடித்தேடி படி. அவளுடைய வாழ்க்கையை சுவடிக்கூடமாக வானொலி நிலையத்திலே பாதுகாத்து வைத்து அதனை ஒலிபரப்புங்கள். எதிர்வரும் சந்ததியினருக்கு அது பாடமாக இருக்கட்டும் என்று அருமையாக ஆலோசனை சொல்லி என்னை வழி நடாத்தி கொண்டு வந்தவர்தான் மர்ஹும் ஏ.எச்.எம்.அஸ்வர்.

அவருடைய பணிகளில் இன்னொரு முக்கியமானதொரு நிகழ்வு என்னவென்றால், 2010ஆம் ஆண்டில் யுத்தம் வென்றதன் பின்னர் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய நாடுகள் மாநாட்டுக்குச் செல்கின்றார். அப்போது அமைச்சர் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வரையும் அழைத்துச் செல்கின்றார். அந்த உலக மாநாட்டிலே மஹிந்த ராஜபக்ஷ பேசுவதற்கு நேரம், நாள் என்பன குறிக்கப்பட்டிருந்தன. அப்போது பேசுவதற்கு செவ்வாய்க்கிழமை என்று சொன்னால், திங்கட்கிழமை அந்திநேரத்திலே மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வர் அந்த மண்டபத்துக்குச் சென்று, இரவோடு இரவாக செயலாளரை அணுகி, அங்கே மஹிந்த ராஜபக்ஷ பேசப்போகின்ற அந்தப் பேச்சை ஆங்கிலத்திலும் அரபியிலும் என உலக பாஷைகள் பல மொழிகளிலே முக்கியமாகத் தொகுத்தெடுத்து அவர் ஒவ்வொரு ஆசனத்திலும் போட்டிருக்கிறார். மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வர் ஐக்கிய நாடுகள் மாநாட்டுக்காக அமெரிக்கா சென்றபோது செய்த விடயம் பற்றி, மஹிந்த ராஜபக்ஷ இதன் பின்னர் கேள்விப்பட்டதும் புல்லரித்துப் போனதாக நான் கேள்விப்பட்டேன். அப்படி மிகவும் விஸ்வாசமாக நடந்த ஒரு முஸ்லிம் அரசியல் தலைவர்தான் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வர்.

மர்ஹும் ஏ.எச்.எம்.அஸ்வர், ஒரு வித்தியாசமான அரசியல்வாதி. அவர் சேர்த்த பொருட்கள் எதுவும் இல்லை. வாழ்ந்த வீடு கடைசி காலங்களில் தான் அவர் கொஞ்சம் விசாலமாகக் கட்டிக் கொண்டார். தன் பிள்ளைகளைக் கூட அரசியல் வாரிசாக அமர்த்திக்கொள்ளவில்லை. என்றாலும், சமூகம், சமயம், சன்மார்க்கம், கல்வி, அரசியல், பொருளாதாரம் என்று எல்லாவற்றிலும் அவர் தலையிட்டு வாழ்ந்தாலும் எதிலும் நிரந்தரமாக இருக்கவில்லை. 

மக்களுக்குச் சேவை செய்வது, கொழும்பு சாஹிராவில் மக்களுக்குத் தாராளமாக இடம் பெற்றுக் கொடுப்பது, கல்வியை உயர்த்துவது, அகில இலங்கை முஸ்லிம் லீக் மர்ஹும் டாக்டர் எம்.ஸி.எம். கலீல், மர்ஹும் எம்.ஏ.பாகீர் மார்க்கார் இவர்களது சிந்தனையில் வளர்த்தெடுப்பது, குறிப்பாக, அகில உலகத்தோடு இலங்கை முஸ்லிம்களை இணைத்து வைப்பது, ஹஜ் மற்றும் உம்ரா காலங்களில் இலங்கை முஸ்லிம்களுக்காக வசதிகளைப் பெற்றுக் கொடுப்பது, அதிலும் விசேஷமாக மக்காவில் இருந்த  'சிலோன் ஹவுஸ்' இலங்கை இல்லத்தை எப்படியாவது எடுத்து கொடுக்க வேண்டும் என்று மர்ஹும் அஸ்வர் போராடினார்; பேசினார்; குரல் கொடுத்தார். ஆனால், பிற்காலத்தில் அதற்கு என்ன நடந்ததென்று கூட தெரியவில்லை. இதனால் மர்ஹும் அஸ்வர் கவலையோடு காட்சி அளித்தார்.

இவை எல்லாவற்றுக்கு மேலாக முஸ்லிம் கலாசார ராஜாங்க அமைச்சராக இருந்த காலத்திலே அவர் சாதித்தவைகள் நிறைய இருக்கின்றன. 1991 ஆம் ஆண்டு முதன்முதலாக அவர் எண்ணம் வைத்து நடாத்திய 'வாழ்வோரை வாழ்த்துவோம்' கலைஞர் தெரிவில், சுமார் 25 பேர் தெரிவு செய்யப்பட்டு, அந்த 25 பேருக்கும் 1991 ஆம் ஆண்டில் பிரேமதாச அரசாங்கத்தில் அவர் முஸ்லிம் சமய கலாசார ராஜாங்க அமைச்சர் என்ற வகையிலே ஒவ்வொருவருக்கும் பத்தாயிரம் ரூபா பணம் கொடுத்து, பொன்னாடை போர்த்தி, பொற்கிழி கொடுத்து, விசேஷமாக அரபு மொழியிலே பட்டமளித்து, பாராட்டி, கௌரவித்தார்.

பெரும் விழாவாக அதனை எடுத்தார். அரசு உயர்மட்டத் தலைவர்கள், அமைச்சர்கள் இந்நிகழ்வுக்காக வரவழைக்கப்பட்டு, அவர்கள் கைகளால் வழங்கப்பட்டன. இது ஒரு பெரிய சாதனை. இவ்விழா 4 தடவைகள் மர்ஹும் அஸ்வர் தலைமையில் நடைபெற்று,மொத்தமாக 135பேர் கௌரவிக்கப் பட்டனர். 

இதுபோன்ற விழா இவருக்கு முன்னரும் பின்னரும் இடம்பெறவில்லை. அதுமட்டுமல்ல,ஒவ்வொரு வருஷமும் ஏப்ரல் முதலாம் திகதி மஸ்ஜித் மதரஸா அபிவிருத்தி நிதியம் ஒன்றை ஆரம்பித்தார். பைத்துல்மால் ஐ பள்ளிவாசல்கள், ஜும்ஆப் பள்ளிவாசல்கள் தோறும் திறந்து வைக்க வேண்டும், ஆரம்பிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறி அதனை அமுல்படுத்த எத்தனித்தார். அது மாத்திரமல்ல, முஸ்லிம் தர்ம ஸ்தாபனங்கள், வகுப் வோட், முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களப் பணிகளை பரவலாக்க வேண்டும் என்ற எண்ணம் வைத்தார். இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முதல் பொறுப்பு அதிகாரியான மர்ஹும் எம்.எம். உவைஸ் தன் குருநாதர் என்றும் அவருக்காக வேண்டி அல்லாமா என்ற அருமையான உயர்ந்த ஒரு சன்மார்க்க பட்டத்தை சிறப்பாக வழங்கி கௌரவித்தார். 

அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுடைய அலரிமாளிகையில் இந்த விழாவை நடாத்தினார். அதில் எனக்கும் கலந்து கொள்ள கிடைத்தது. பேராசிரியர் சாய்பு மரிக்கார், தமிழ் நாட்டிலிருந்து அவ்விழாவுக்காக இங்கு வந்து வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். இப்படி சிறப்பான பணிகள் நிறைய செய்திருக்கிறார். 

இலங்கை முஸ்லிம்கள் குறிப்பாக, தங்களுடைய வரலாற்றை, வாழ்வியலை பதிந்து வைக்க வேண்டும் என்று  ஆசை வைத்தார். ஆண்டு தோறும் நடாத்துகின்ற மீலாத் விழாக்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடாத்தப்பட்டு, அந்த மாவட்டத்தின் வரலாற்றை புத்தகமாகப்  பதிவு செய்யும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார். இவ்வாறு புத்தளம், ப் அம்பாறை,  கம்பஹா, கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, மாத்தறை என்றெல்லாம் ஒவ்வொரு மாவட்டத்து வரலாறுகளை வெளியிட்டு இருக்கிறார். இதற்காகவேண்டி அவரது செயலாளராக இருந்த கல்விமான்  மர்ஹும் எஸ்.எச்.எம்.ஜமீலும் மிகவும் பாடுபட்டார்.

முஸ்லிம் கலை இலக்கியவாதிகளை, எழுத்தாளர்களை ஊக்குவித்து, அவர்களுக்கு பணப்பரிசில்கள் கொடுத்தார். அவர்களைப் பாராட்டினார். அவர்கள் நடாத்துகின்ற வெளியீட்டு விழாக்களில் முக்கியத்துவம் கொடுத்து கலந்து கொண்டார். உற்சாகப்படுத்தினார். அவர்களது புத்தகங்களை வாங்கினார். அறபு, இஸ்லாமிய எழுத்தணி கண்காட்சிகளை நடாத்தினார்.

ஆண்டுதோறும் முஸ்லிம்களின் பெருநாள் தினங்களான நோன்பு, ஹஜ் பெருநாட்களிலே  முஸ்லிம்களுக்கு  எதுவும் பிரச்சினைகள் வராது அரசாங்க மட்டத்திலிருந்து பேசி, அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்று, அரசியல்வாதிகளதும் மற்றவர்களதும்  உதவியைப்பெற்று, மிகச் சிறப்பாகப் பணியாற்றி பாதுகாத்து வந்தார். ஆனால், சமூகம், சமூகம் என்று பாடுபட்டு, உழைத்த மர்ஹும் ஏ.எச்.எம்.அஸ்வருடைய வாழ்வையும் பணியையும் மக்கள் புரிந்து கொண்டால் அவர் மனிதாபிமான அரசியல்வாதி என்று நிச்சயம் அங்கீகாரம் கொடுப்பர். 

இன்று அவர் நம் மத்தியில் இல்லையே என்று கவலைப்படுகிறோம்: ஆதங்கப்படுகிறோம். அவருடைய பணிகளை நாங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். மூன்றாண்டுகள் அவரது நினைவு விழாக்களை தொடர்ந்து நடாத்தி வந்தோம். கடந்த ஆண்டில் கொரோனா காரணமாக அகில இலங்கை முஸ்லிம் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் ஸ்தாபர்களில் ஒருவரான ஏ.எச்.எம். அஸ்வர் மற்றும் அதன் தலைவர் எம்.ஏ. பாகீர் மாகார் ஆகிய இருவரையும் ஞாபகப்படுத்தி, கொழும்பு எல்விடிகல மாவத்தை மண்டபத்தில் 50 பேர் கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்வாக நடாத்தினோம்.

அந்நிகழ்வில், ஏழை மாணவர்களுக்கு கல்விப்புலமைப்பரிசில்களும் கொடுத்தோம். இப்படி இருந்து செய்த பணிகளை இந்த ஆண்டும் நினைவுபடுத்தி விழா நடாத்த எண்ணினோம். கொரோனா காரணமாக நடாத்த முடியவில்லை.

ஆனால், முக்கியமான கோரிக்கை ஒன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் முன்வைக்கிறோம். அதாவது மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வர் ஞாபகார்த்தமாக அவரது முத்திரைத்தலை வெளியிட்டு அவரைக் கௌரவிக்க வேண்டும் என்றும் இது நான்காவது வருடம் ஐந்தாவது வருடத்துக்குள் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோளை முன்வைக்கிறோம். அகில இலங்கை முஸ்லிம் லீக்கினுடைய முன்னாள் தலைவர் என்.எம். அமீனோடு சேர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகீர் மாகார் தலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து இந்த வேண்டுகோளை முன்வைப்போம் என கோரிக்கை விடுத்திருக்கிறேன். அந்தப் பணி மிகச் சிறப்பாக நடக்க இறைவன் துணை புரிய வேண்டும் என்றும் வல்ல இறைவன் அவரது பணிகளுக்கேற்ற கூலிகளை நிச்சயம் கொடுக்க வேண்டும் என்றும் மேலான சுவர்க்கமான ஜென்னத்துல் பிர்தௌஸையும் கொடுக்க துஆ செய்கிறேன்.

எம்.இஸட்.அஹ்மத் முனவ்வர்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம்




முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வரின் நான்காவது வருட தினம் Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 31, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.