இன்று ஏறாவூர் சுஹதாக்கள் தினம். பாசிச புலிகளின் கோழைத்தனமான வரலாற்று துரோகச்செயல் இன்றையநாள் கரிநாளாகும் .
தினத்தில் உயிர் நீத்து வரலாற்றில் வாழ்கின்ற ஏறாவூரின் தியாகிகளின் இரத்த சரித்திரம் தியாக தீப ஒளியினால் மங்காது- சுவனவாசிகளான எமது இஸ்லாமிய சகோதரர்களுக்கு என்றும் சோபனம் உண்டாக பிரார்த்திக்கிறேன்.. அலி ஸாஹிர் மௌலானா
இற்றைக்கு 31ஆண்டுகளுக்கு முன்னர் (1990.08.12) இந்த நாளில்தான், எமது ஊருக்குள்ளும், ஏறாவூரின் எல்லைப் பிரதேசங்களிலும் நடுநிசி வேளையிலே உறக்கத்தில் இருந்த எமது 121அப்பாவி பொது மக்கள் ஈழப் போராட்ட புலிகளால் கோழைத்தனமாக கொல்லப்பட்டதுடன், பலர் உடல், உள ரீதியான காயங்களுக்கு ஆளாக்கப்பட்ட கரி நாளுமாகும்.
காலப் பெருவெளியில் ஏறாவூர் மக்களதும் முஸ்லிம் சமூகத்தினதும் வரலாற்றில் இறுதிவரை வாழ்பவர்களது , “சுஹதாக்கள் தினம்” மறக்கவோ, மறைக்கவோ முடியாத ஒரு துன்பகரமான பொழுதாக பதியப்பட்டிருக்கின்றன.
நடுநிசி வேளை தூக்கத்தில் இருக்கும் எம்மை எதற்காகத்தான் கொல்கிறார்கள் என்பதைக்கூட உணரக்கூட முடியாத நிலையில், உயிர் காக்கக்கூட போராட அவகாசம் இல்லாத, தப்பி ஓடக்கூட முடியாத அப்பாவிகளான சகோதரர்கள், இல்லத்தரசிகள், முதியவர்களும், தாயின் மடியிலே உறங்கிய ஒன்றுமே அறியாத பச்சிளம் பாலகர்களும் , கர்ப்பிணி தாய்மார்களும், அவர்களுக்குள் தக்கியிருந்த சிசுக்கள் உட்பட வயிறு கிழிக்கப்பட்டு மிகவும் அகோரமாக பலியெடுக்கப்பட்ட இரத்தம் தோய்ந்த துயர வரலாறாக எமது மக்கள் மனங்களிலே அது பதிந்துள்ளது.
எங்களது நெஞ்சை விட்டு எத்தனை ஆண்டுகள்தான் கடந்து போனாலும் இதன் ரணங்களும் , ஏற்படுத்திய வடுக்களும் மறைந்து போகாது, இந்த துயர் நிறைந்த , சோகம் சூழ்ந்து எம்மக்கள் துக்கத்தோடும் அச்சத்தோடும் , நிர்க்கதியுடன் செய்வதறியாது நின்ற தருணத்திலே இறைவன் உதவியால் எம்மால் முடிந்த பணிகளை நாம் முன்னெடுத்ததுடன் இறைவன் உதவியுடன் மக்களை பாதுகாத்து நிம்மதியான சகஜ சூழ் நிலைகளை இப்பிரதேசங்களிலே ஏற்படுத்துவதற்காக பலவிதமான நடவடிக்கைகளையும், அரசு உயர்பீடம் முதலாக, இதர அமைச்சர்கள் , அரச திணைக்கள, அரசு சார்பற்ற , மற்றும் அப்போதைய பாதுகாப்பு உயர் மட்ட அதிகாரிகள் உட்பட பல மட்டங்களிலும் தொடர்ச்சியாக நான் எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் , என் நெஞ்சில் நிழலாடுகின்றன.
அரசியல் அதிகாரங்களோ ,அதற்கான அடையாளங்களோ இல்லாதிருந்தாலும், அசாத்திய துணிச்சலுடன் களமிறங்கிய ஒரு சாமானியனாக எமது மண்ணுக்கு ஆற்றவேண்டிய அக்காலத்தேவைகளை நிறைவேற்றிக்கொடுக்க தவறக்கூடாது என்ற அடிப்படையில் கடமை உணர்வுடன் அந்த அமானிதத்துக்காக என்னை முழுதாக அர்ப்பணித்து செயற்பட்டபோது “ அல்ஹம்துலில்லாஹ்”அப்பணிகளை நிறைவேற்ற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிந்தான்.
எல்லாப்புகழும் வல்ல நாயனுக்கே.
பாதிக்கப்பட்ட மக்களது பிரார்த்தனைகளும், விடாமுயற்சியும், அதாவது
எவ்வித ஈவு இரக்கமும் இன்றி எங்களது சகோதரர்கள் , தாய்மார்கள், மாணவர்கள், வயோதிபர்கள், பச்சிளம் பாலகர்களும் அநியாயமாக துப்பாக்கியால் சுடப்பட்டும், கத்தி கோடரிகளால் வெட்டப்பட்டும் காரணமேயின்றி காவு கொள்ளப்பட்டவர்களதும் , குடும்பங்களதும் தியாகத்தின் வெளிப்பாடும், எமது சகிப்புத்தன்மையும் , ஒற்றுமை, ஒருங்கிணைப்பு, நல்லிணக்கங்களுடன் சமூகங்களினது பொதுநலன் காணும் பொது முயற்சிகளுடன் எமது பிரதேசங்களது வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் அடித்தளமாக அது அமைந்தது என்றால் மிகையாகாது.
அதற்காகவே உலகம் அழியும் வரை நினைவு கூறப்படும் இந்த தியாகிகளின் வரலாறு, பல்வேறு சமூகத்தினரும் அறிந்திடும் வகையில் நினைவுக்கு கொண்டு வருவதன் மூலமாக எமது வேற்றுமைகள் , அவநம்பிக்கைகள், பகைமைகள் போன்ற தீமைகள் அகன்று அன்பு, அமைதி , நல்லிணக்கம், சகோதரத்துவம், பரஸ்பர புரிந்துணர்வு போன்றவை பலப்படுத்தப்பட வேண்டும்.
இதன்மூலமாக, இறைவன் சித்தத்தால் அந்த உயர்வை , அந்த சுஹதாக்கள் அந்தஸ்த்தினைப் பெற்ற அந்த ஷூஹதாக்களுக்கு மேலும், மேலும் அல்லாஹ்வினால் வழங்கப்படும் அந்தஸ்த்துக்களுக்கு நாமும் நல்லறங்களூடாக வளம் சேர்ப்போமாக.
“இன்ஷா அல்லாஹ்”
பயங்கரவாதத்தின் கோரப்பசிக்கு யார் யாரெல்லாம் எமது பகுதிகளில் இருந்து இரையாக்கப்பட்டு எமது சமூகத்தின் விடிவிற்கு விதையாக்கப்பட்டார்களோ அத்தனை பேருக்காகவும் , அவர்களது இழப்பினால் இன்று வரை கலங்கி நிற்கும் உறவுகளுக்காகவும் உளமார என்றுமே பிரார்த்திப்பதுடன் , மென்மேலும் இறைவன் அவர்களை கண்ணியப்படுத்தி உயர்வான அந்தஸ்த்தினை ஈருலகிலும் வழங்கிட செய்வானாக....
என்றும் உங்களோடு,
செய்யித் அலி ஸாஹிர் மௌலானா...
இன்று ஏறாவூர் சுஹதாக்கள் தினம். பாசிச புலிகளின் கோழைத்தனமான வரலாற்று துரோகச்செயல் இன்றையநாள் கரிநாளாகும் .
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 12, 2021
Rating:

கருத்துகள் இல்லை: