Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களுக்கு, முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை உள்ளிட்ட அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் கல்யாணி பொன் நுழைவாயில் திறப்பு விழாவில் ஜனாதிபதி காரசாரமாக தெரிவிப்பு..


கல்யாணி பொன் நுழைவாயில் மக்கள்மயமானது…

“முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவையை
உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களின் குற்றவாளிகளாக ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது;


பாராளுமன்றச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்…”

✔️நாட்டின் எதிர்காலப் பயணத்துக்காக அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிலையான தீர்வு.

✔️உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி தொடரும்.

✔️நாடு மூடப்படாவிடின் உறுதியளிக்கப்பட்ட அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் நிறைவு செய்யப்படும்.


- ஜனாதிபதி தெரிவிப்பு....

“ஜப்பான் - இலங்கை நட்புறவின் மேலுமோர் அடையாளமாக கல்யாணி பொன் நுழைவாயில் அமைந்துள்ளது; எதிர்காலத்திலும் ஒத்துழைப்பு வழங்குவோம்”

-ஜப்பான் தூதுவர் மிசூகொஷி ஹிதெகி தெரிவிப்பு....


உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களுக்கு, முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை உள்ளிட்ட அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டுமென்று, அந்தத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக கடந்த அரசாங்கம் நியமித்திருந்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.


அவ்வாணைக்குழுவின் பரிந்துரைகள், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அதேவேளை, தொடர் நடவடிக்கைகளுக்காக நீதியரசர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஆகியவற்றிடமும் கையளிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், பாராளுமன்றச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ள குற்றவாளிகளுக்கு எதிராகச் சட்டத்தை நிறைவேற்ற முடியுமென்றுத் சுட்டிக்காட்டினார். 


அதற்கு அவசியான மூன்றில் இரண்டு (2/3) பெரும்பான்மை அதிகாரம் அரசாங்கத்துக்கு உள்ளதென்றும் எடுத்துரைத்த ஜனாதிபதி அவர்கள், அதனால் கோரிக்கைகளை முன்வைக்கும் கவனமாக இருக்குமாறும் மக்களை ஏமாற்ற வேண்டாமென்றும் எதிர்க்கட்சியினருக்குத் தெரிவித்தார். 


உலகளாவிய உயர் தொழில்நுட்பத்துடன் தென்கிழக்கு ஆசியாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள “தெற்காசியாவின் பிரவேசமான அதிவேக வான் நுழைவாயில் ” என்று கருதப்படுகின்ற “கல்யாணி பொன் நுழைவாயில்” (Golden Gate Kalyani), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில்  நேற்று (24) மாலை மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது உரையாற்றுகையிலேயே, ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 


இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர், “கல்யாணி பொன் நுழைவாயில்”  பெயர்ப் பலகையைத் திரைநீக்கம் செய்து, புதிய களனி பாலத்தைத் திறந்துவைத்தனர். அதன் பின்னர், பாலத்தின் இரு மருங்கிலும் ஒளிரும் புதிய தொழில்நுட்பத்துடன்கூடிய மின் அலங்காரக் கட்டமைப்பையும் இயங்கச் செய்தனர். 


கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கின்ற மற்றும் வெளியேறுகின்ற வாகனங்கள் காரணமாக, களனிப் பாலத்தில் ஏற்படுகின்ற அதிக வாகன நெரிசலுக்குத் தீர்வாக, இந்தப் புதிய மேம்பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 
 
இலங்கை அரசாங்கம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் பங்களிப்புடன், 2012ஆம் ஆண்டில் இதற்கான அடிப்படைத் திட்டம் தயாரிக்கப்பட்டு, 2013ஆம் ஆண்டு சாத்தியவள ஆய்வுகள் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர், நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பதற்கான அமைச்சரவை அனுமதி 2014ஆம் ஆண்டில் கிடைத்தது.
அவ்வாண்டிலேயே இதற்குரிய உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டது.
 
இத்திட்டம் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய வீடுகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான காணிகள் வேறு இடங்களில் வழங்கப்பட்ட பின்னர், 2017ஆம் ஆண்டில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த அபிவிருத்தித் திட்டத்துக்கு, 55,000 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளதோடு, இப்பணியை நிறைவு செய்வதற்கு, நான்கு வருடகாலம் தேவைப்பட்டது. 


கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை நுழைவிலிருந்து பண்டாரநாயக்க சுற்றுவட்டம் வரையான 06 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து ஒருகொடவத்தை மற்றும் இங்குறுகடைச் சந்தி வரை 04 வழித்தடங்கள், இந்தப் புதிய மேம்பாலத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், இங்குறுகடைச் சந்தியிலிருந்து கொழும்புத் துறைமுகநகர் வரையும் ஒருகொடவத்தையிலிருந்து அத்துருகிரிய வரையிலும், தூண்களின் மேல் அமைக்கப்படுகின்ற அதிவேக நெடுஞ்சாலைக்குள் பிரவேசிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 


களனி ஆற்றின் நீர் வடிந்தோடலுக்கு எவ்விதத் தடையையும் ஏற்படுத்தாத வகையில் இந்தப் பாலம் நிர்மாணிக்கப்பட்டிருப்பதும் சுற்றாடலின் அழகைப் பாதுகாக்கும் வகையில் கொபோநீலம், எசல (திருக்கோனை), மாராமரம், இலுப்பை, கும்புக்கன் உள்ளிட்ட மரங்கள் இப்பாதையின் இரு மருங்கிலும் நடப்பட்டிருப்பதும் சிறப்பம்சமாகும்.


இந்நிகழ்வின் போது தொடர்ந்துரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், 2005 – 2010 மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி அவர்களின் ஆட்சிக் காலத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்றும் நாட்டின் ஏனைய அனைத்துப் பிரச்சினைகளுக்குமான நிலையான தீர்வைப் பெற்றுத் தருவதாகவும் குறிப்பிட்டார். 


கொவிட் தொற்றுப் பரவல் காலத்திலும்கூட, உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்காக பல்வேறு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவையனைத்தையும் தொடர்ச்சியாக முன்னெடுப்பதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், எதிர்காலத்தில் நாட்டை மூடவேண்டி ஏற்படாதிருப்பின், உறுதியளிக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களையும் நிறைவு செய்ய முடியுமென்று மேலும் கூறினார். 


இந்நிகழ்வின் போது உரையாற்றிய நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, “இந்நாட்டு மக்கள் புத்திசாலிகள். அதனால் அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். போலிச் செய்திகளுக்கு இடமளிக்க வேண்டாம். கொவிட் சவாலுக்கு மத்தியிலும் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களை இடைநிறுத்த, எதிர்க்கட்சியினருக்கு ஒருபோதும் இடமளிக்க  வேண்டாமென்றார். 


“அன்று மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி அவர்கள், கிண்ணியா பாலத்தை நிர்மாணிப்பதற்கு அவசியமான அனைத்து திட்டங்களையும் தயாரித்திருந்தார். ஆனால், கடந்த அரசாங்கம் அதனைக் கவனத்திற் கொள்ளாததால் ஏற்பட்ட துர்விளைவுக்கு வருந்துகிறோம். அந்தத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டிருப்பின், பெறுமதிவாய்ந்த உயிர்களைப் பாதுகாக்க முடிந்திருக்கும்” என்றும்,  அமைச்சர் குறிப்பிட்டார். 


இதன்போது உரையாற்றிய இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் மிசூகொஷி் ஹிதெகி “கல்யாணி பொன் நுழைவாயில்” பாலமானது, ஜப்பான் – இலங்கை நட்புறவின் மேலுமோர் அடையாளம் என்றார். அத்துடன், எதிர்காலத்திலும் ஜப்பானின் உதவிகளை இலங்கைக்குப் பெற்றுத்தருவதாகவும் கூறினார். 


மஹா சங்கத்தினர், ஏனைய மதத் தலைவர்கள், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், ஆளுநர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், தூதுவர்கள், வெளிநாட்டுப் பிரமுகர்கள், அமைச்சரவையின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள், அதிதிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களுக்கு, முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை உள்ளிட்ட அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் கல்யாணி பொன் நுழைவாயில் திறப்பு விழாவில் ஜனாதிபதி காரசாரமாக தெரிவிப்பு.. Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 25, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.