இளைஞர்களே ஒரு நாட்டின் முன்னேற்றத்தின் முதுகெலும்பு ஆவார்கள்
ஏறாவூர் இளைஞர் சம்மேளன புதிய தலைவர் சகோதரன் ஷகீல் இற்கு என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா.
முழு நாட்டினதும், ஒரு பிரதேசத்தினதும் எழுச்சியும் ,வீழ்ச்சியும் அங்கு முதுகெலும்பாக திகழும் இளைஞர்களின் கையில்தான் என்றுமே உள்ளது.
அந்த வகையில் ஏறாவூர் பிரதேசத்தில் தேசிய சேவைகள் மன்றத்தின் கீழான பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் புதிய தலைவராக தெரிவாகி உள்ள இளம் உடற்கல்வி ஆசிரியர் சகோதரன் நவாஸ் முஹம்மட் ஷகீல் அவர்களுக்கு எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் ,
சமூக ஊடகங்களின் ஆழமான தாக்கமும் , அதற்கு நிகராக அடுத்த தலைமுறையின் வளர்ச்சியை கரையான் போன்று அழிக்கும் போதையின் ஊடுருவலும் தலை விரித்தாடும் இந்த சூழலில் ஒரு ஆரோக்கியமான இளைஞர் சமுதாயத்தை கட்டி எழுப்புவது என்பது பெரும் சவாலான விடயமாக உள்ளது.
சமுகத்தில் என்ன நடக்கிறது, நாம் எப்படி ஒரு சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று கூட உணராதவர்களாக சில இளைஞர்கள் தங்களது தோளில் உள்ள பெரும் பொறுப்பினை மறந்தவர்களாக செயற்படும் சவால்மிக்க தருணத்தில் அதை நெறிப்படுத்தி சீரமைக்கும் எதிர்ப்பார்ப்புடன் தலைமை பதவியை அவர் ஏற்றுக் கொண்டு உள்ளார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழான ஏறாவூர் இளைஞர் சம்மேளனம் கடந்த காலங்களில் சமூகத்தில் முக்கிய நிலையில் உள்ள பல்வேறு ஆளுமைகளை புடம் போட்டு வழங்கியுள்ளது.
இவ்வாறான முன்னாள் தலைவர்களது சீரிய வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளுடன் முன்மாதிரி வேலைத்திட்டங்களை செயற்படுத்தும்
வகையில் மிக பொருத்தமான ஒருவர் தற்போது ஏறாவூர் இளைஞர்கள் சார்பில் தலைமை பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ளதுடன், தொழில் ரீதியாக தன்னை வலுப்படுத்தி கொண்ட ஒரு இளம் ஆசிரியராகவும், தேசியம் போற்றும் சிறந்த ஒரு விளையாட்டு வீரராகவும் , கண்ணியமான பண்புகளை தன்னகத்தே அவர் கொண்டிருப்பதும் இளைஞர்கள் மத்தியில் வினைத்திறன் மிக்க பணிகளை முன்னெடுக்கும் நம்பிக்கையினை எம் மத்தியில் உருவாக்கி உள்ளது.
ஏறாவூர் இளம்தாரகை விளையாட்டு கழக உதைப்பந்தாட்ட அணியின் தலைவர் மற்றும் பந்து காப்பாளர் எனும் அடிப்படையில் எதிரிகளின் பந்துகள் கம்பத்தை நெருங்காமல் காப்பதை போன்று எமது பகுதியின் நாளைய தலைவர்களை தீமைகளின் பக்கம் நெருங்காமல் வழிகாட்டிடவும் ,வளமான எதிர்காலத்தை நோக்கி அவர்களை ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகளை ஒரு தலைமை காப்பாளன் எனும் அடிப்படையில் அனைவரையும் அரவணைத்து கூட்டு பொறுப்புடன் முன் கொண்டு சென்றிடவும் அவர் தனது பதவிக்காலத்தை பயன்படுத்திடுவார் என பலத்த நம்பிக்கை கொண்டுள்ளதுடன் , சக இளைஞர் சம்மேளன நிருவாக உறுப்பினர்கள் , இளைஞர் கழக அங்கத்தவர்கள் என அத்தனை பேரையும் உளமாற வாழ்த்துகின்றேன் .
மேலும், ஏறாவூர் பிரதேசத்தில் சமூக பணிகளில் தன்னை முற்றுமுழுதாக அர்ப்பணிக்கும் ஒருவரான எமது பகுதியின் இளைஞர் சேவை அதிகாரி M.I. ரம்சியின் நெறிப்படுத்தல் மற்றும் வழிகாட்டலில் சகோதரர் ஷகீல் தலைமையிலான பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் இளைஞர் மேம்பாட்டுக்கான வினைத்திறன் மிக்க பணிகளுக்கு என்றும் என் முழுமையான ஒத்துழைப்பினை வழங்க தயாராக உள்ளேன் என்பதையும் இவ்விடத்தில் தெரிவிக்கிறேன்.
இளைஞர்களின் வளமான எதிர்காலத்தை என்றும் நேசிக்கும் ஒருவனாக ...
இளைஞர்களே ஒரு நாட்டின் முன்னேற்றத்தின் முதுகெலும்பு ஆவார்கள்
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 05, 2024
Rating:

கருத்துகள் இல்லை: