ஆளப்போவது யாரு? அனல் கக்கும் அரசியல் களம்!
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது என தேர்தல் ஆணைக்குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செப்டம்பர் 26 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 14 ஆம் திகதி நண்பகல் வரை கட்டுப்பணம் செலுத்த முடியும். தேர்தலுக்கான வேட்பு மனு எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தென்னிலங்கை அரசியல் களமும் அனல் கக்க ஆரம்பித்துள்ளது. கட்சி தாவுதல், காலை வாருதல், குதிரை பேரம் என தேர்தல் காலத்துக்கே உரித்தான தரமான, சிறப்பான அரசியல் சம்பங்கள் இனிதே அரங்கேறவுள்ளன.
அதிகரிக்கும் வேட்பாளர்களின் எண்ணிக்கை
இலங்கையில் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தேர்தல் 1982 இல்தான் நடைபெற்றது. அத்தேர்தலில் ஆறு வேட்பாளர்கள் மாத்திரமே போட்டியிட்டனர். எனினும், 2019 ஆம் ஆண்டில் கடைசியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் களமிறங்கினர்.
தேர்தல் ஆணைக்குழுவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக இருந்தால் கட்சி சார்பில் ஒருவர் போட்டியிடலாம். சுயேட்சையாக போட்டியிடுவதாக இருந்தால் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். வயது, இலங்கை பிரஜை உட்பட ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு மேலும் சில தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும்.
எதிர்வரும் ஆகஸ்ட் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கென இதுவரை 4 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இருந்தாலும் இம்முறையும் பலர் போட்டியிடவுள்ளனர்.
வெளிநாட்டு கண்காணிப்பு அமைப்புகள் களத்தில்
ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் ஈடுபடவுள்ளன.
இதற்கமைய சார்க் மற்றும் பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் இலங்கை வரவுள்ளன. ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு வருமா என்பது பற்றி இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
அத்துடன், உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் தற்போதிருந்தே தமது பணிகளை ஆரம்பித்துள்ளன. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் அவை முழு வீச்சுடன் களமிறங்கவுள்ளன.
ஜனாதிபதி தேர்தலை நீதியாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவும் கண்காணிப்பாளர்களை நியமிக்கவுள்ளது. அரசியல் கட்சிகளும் தேர்தல் கண்காணிப்பு குழுக்களை அமைத்துள்ளன.
மொட்டு கட்சியின் பங்காளிகள் ரணில் பக்கம்
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த ஏழு பங்காளிக்கட்சிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தம் பக்கம் வளைத்து போட்டுள்ளார். மொட்டு கட்சியின் உறுப்பினர்களையும் தன் பக்கம் இழுத்துள்ளதார்.
இதனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாமல் தரப்பு கடும் அதிருப்தியில் உள்ளது. புலிகளை உடைத்ததுபோல, மொட்டு கட்சியையும் ரணில் உடைத்துவிட்டார் என நாமல் புலம்பியுள்ளார். இந்த பழக்க தோசத்தை ரணில் கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈபிடிபி, தேசிய காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி (கருணா), முற்போக்கு தமிழர் கழகம் (வியாழேந்திரன்) , சுதந்திரக்கட்சி (நிமல் சிறிபாலடி சில்வா அணி) என்பனவே ஜனாதிபதி ரணிலுக்கான ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளன. இதனால் மொட்டு கட்சி தனித்துவிடப்பட்டுள்ளது.
அத்துடன், முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் என்பவற்றின் எம்.பிக்கள் சிலர்கூட ரணில் பக்கம் நிற்கின்றனர். மொட்டு கட்சியின் 30 இற்கு மேற்பட்ட எம்.பிக்கள் குழுவொன்றின் ஆதரவையும் ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார்.
மொட்டு கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த தேசிய சுதந்திர முன்னணி, பிவிருது ஹெல உறுமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி, ஸ்ரீலங்கா கம்யூனிஸ் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, யுத்துகம அமைப்பு என்பனவும் மொட்டு தரப்பை கைவிட்டு புதிய கூட்டணியை அமைத்துள்ளதால், அக்கட்சி அரசியல் ரீதியிலும் அநாதையாக்கப்பட்டுள்ளது.
உளவு தகவல்கள் என்ன சொல்கின்றன?
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உளவு பிரிவுகளால் அரச தலைமையிடம் அறிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு உளவு பிரிவுகளும் தமது கணிப்பை வெளியிட்டுள்ளன. தற்போதைய சூழ்நிலையில் சஜித் பிரேமதாசவே முன்னிலையில் இருப்பதாக தெரியவருகின்றது.
தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவு, வாக்கு வங்கி அதிகரித்துள்ளபோதிலும் அக்கட்சியால் வெற்றிவாகை சூடமுடியாது எனவும் கூறப்படுகின்றது. மறுபுறத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவின்றி ரணில் பயணித்தாலோ அல்லது ரணிலுக்கு ஆதரவு வழங்காமல் மொட்டு கட்சி தனிவழி சென்றாலோ இரு தரப்புகளுக்குமே பெரும் பின்னடைவு ஏற்படும் எனவும் கூறப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் இறுதி நிலைப்பாடு ஜுலை 29 ஆம் திகதி ( இன்று) அறிவிக்கப்படவுள்ளது. ரணில் விக்கிரமசிங்க அல்லது தம்மிக்க பெரேரா ஆகிய இருவரில் ஒருவரையே அக்கட்சி ஆதரிக்கவுள்ளது.
சஜித் கூட்டணி
அத்துடன், தமிழ்த் தேசியக் கட்சியின் ஆதரவை பெறும் விடயத்தை சஜித் பிரேமதாச நேரடியாக கையாண்டு வருகின்றார். தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டாலும் வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையான ஆதரவு தமக்கே கிட்டும் என அவர் உறுதியாக நம்புகின்றார்.
2ஆம், 3ஆம் விருப்பு வாக்குகள்
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, அறகலய காரர்கள் என முக்கிய சிலர் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதால் பிரதான வேட்பாளர்களால் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பெறமுடியாத சூழ்நிலை ஏற்படும் எனவும் கூறப்படுகின்றது.
அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் 2 ஆம் விருப்பு வாக்கே வெற்றியை தீர்மானிக்கும். எனவே, தேர்தல் பிரசாரத்தின்போது இம்முறை 2 ஆவது விருப்பு வாக்கு பற்றியும் அதிகம் பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ku

கருத்துகள் இல்லை: