இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: நியூஸிலாந்து 347 ரன்கள் சேர்ப்பு
ஹாமில்டன்: நியூஸிலாந்து-இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டன் நகரில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய நியூஸிலாந்து அணிக்கு டாம் லேதம், வில் யங் ஜோடி சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தது. 30.3 ஓவர்களில் 105 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை கஸ் அட்கின்சன் பிரித்தார். வில் யங் 92 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்த நிலையில் கஸ் அட்கின்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.
தனது 31-வது அரை சதத்தை கடந்த கேப்டன் டாம் லேதம் 135 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் சேர்த்த நிலையில் மேத்யூ பாட்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார். இதன் பின்னர் நியூஸிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தது. கேன் வில்லியம்சன் 44, ரச்சின் ரவீந்திரா 18, டேரில் மிட்செல் 14, டாம் பிளண்டெல் 21, கிளென் பிலிப்ஸ் 5, மேட் ஹன்றி 8. டிம் சவுதி 23 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார் மிட்செல் சாண்ட்னர்.
முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் நியூஸிலாந்து அணி 82 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 315 ரன்கள் குவித்தது. மிட்செல் சாண்ட்னர் 54 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 50 ரன்களும், வில் ஓ'ரூர்க் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணி சார்பில் மேத்யூ பாட்ஸ், கஸ் அட்கின்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், பிரை டன் கார்ஸ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். கைவசம் ஒரு விக்கெட் இருக்க இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி 347 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 143 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தற்போது நியூஸிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

கருத்துகள் இல்லை: