பொலிஸ் திணைக்களத்தில் காணப்படும் வெற்றிடங்களுக்கு தமிழ் பேசும் இளைஞர், யுவதிகளுக்கு அதிக வாய்ப்பு
மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும் எனவும், வடக்கின் காணிப்பிரச்சினை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு, வெகு விரைவில் மக்களுக்கு மீண்டும் காணிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
நாட்டின் அபிவிருத்திக்காக அல்லது பாதுகாப்புக் காரணங்களுக்காக நாட்டின் எந்தப் பகுதியிலும் காணிகளை அரசாங்கம் சுவீகரிக்க முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்தக் காணிகளுக்குப் பதிலாக கட்டாயமாக மாற்று காணிகளை
யாழ்.மக்களுக்கான மிக முக்கியமான திட்டங்களுக்காக யாழ். ஜனாதிபதி மாளிகையை முற்றாக விடுவிக்கத் தயாரெனவும் , அதற்கான உரிய முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
போரினால் இடம்பெயர்ந்த குடும்பங்கள் இன்னும் வடமாகாணத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இது குறித்து ஆராய்ந்து விரைவான தீர்மானங்களை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுகாதாரம், கடற்றொழில்,சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு,போக்குவரத்து பிரச்சினைகள்,ஆளணி குறைபாடு,காணிவிடுவிப்பு உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆராயப்பட்டது. யாழ் மாவட்டத்தில் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் ஜனாதிபதிக்கு முன்வைத்தனர். அதில் அநேக பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி உடனுக்குடன் தீர்வு வழங்கியதோடு அவை தொடர்பில் கலந்து கொண்ட வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி பணிப்புரைகளை வழங்கினார்.
பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு அரச நிறுவனங்களை நடத்திச் செல்வதற்கு 30,000 வெற்றிடங்கள் காணப்படுவதாக அடையாளம் கண்டுள்ளதென தெரிவித்த ஜனாதிபதி, ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு அமைய அந்த வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்பதோடு, பட்டதாரிகளுக்கும் இதன்போது வாய்ப்பு கிட்டும் என்றும் தெரிவித்தார்.
இதில், பொலிஸ் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும், விண்ணப்பிப்பதற்கு அவர்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை: