Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ACJU வின் பத்வாவை ஆதாரமாகக்கொண்டு தீவிரவாதி ஸஹ்றான் ஹாஷிம் ஸுபி முஸ்லிம்களை கொலை செய்ய வேண்டும் என 2016 ம் ஆண்டு உரையாற்றினார் .

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா (ACJU) வின் பத்வாவை ஆதாரமாகக்கொண்டு தீவிரவாதி ஸஹ்றான் ஹாஷிம் ஸுபி முஸ்லிம்களை கொலை செய்ய வேண்டும் என 2016 ம் ஆண்டு உரையாற்றினார் .

-மௌலவி KRM.ஸஹ்லான் றப்பானீ-
செயலாளர், அல் ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு
நாங்கள் பாரம்பரிய முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாமிய ஸூபித்துவத்தை பின்பற்றுபவர்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரி ஸஹ்றான் ஹாஷிம் ஸூபி முஸ்லிம்களை காபிர்கள் முர்தத்கள் ( மதம்மாறியவர்கள்) என்று கூறி அவமதித்தார். எங்களை முஸ்லிம்கள் அல்ல என்று அவர் கூறினார்.
2013 ஆண்டு முதல் 'தௌஹீத்' என்ற மாதாந்த இதழை வெளியிட்டார். இந்த இதழின் சுமார் 10 அல்லது 13 இதழ்களை அவர் வெளியிட்டார். அதைப் பயன்படுத்தி எங்களை அவமதித்தார். நாங்கள் கந்தூரி அன்னதானம் வழங்கும் உணவுகளை உண்பது பன்றி இறைச்சி சாப்பிடுவதற்குச் சமம் என்று அவர் பகிரங்கமாக கூறினார்.
2013 மற்றும் 2014 ஆண்டுகளுக்கிடையில், ஸஹ்றான் ஹாஷிமுக்கு எதிராக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் 11 முறைப்பாடுகளை நாங்கள் பதிவு செய்தோம். பொலிஸார் அவருக்கு எதிராக மட்டக்களப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆனாலும், அவர் தொடர்ந்து எங்களை அவமதித்து வந்தார்.
2015 இல் கிழக்கு மாகாண இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேராவிடம் கூட இவரைப்பற்றி நாங்கள் முறைப்பாடு செய்தோம். அவர் ஸஹ்றான் ஹாஷிமைஅழைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று எச்சரித்தார், ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்தார்.
2015 ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, ​​காத்தான்குடியில் போட்டியிடும் வேட்பாளர்களை தனது ஆதரவிற்கு ஈடாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஸஹ்றான் ஹாஷிம் ஏற்பாடு செய்தார். இந்த ஒப்பந்தம் வேட்பாளர்கள் ஸூபிகளுக்கு எந்த ஆதரவையும் வழங்கவோ அல்லது அவர்களிமிருந்து ஆதரவு பெறவோ கூடாது என்று குறிப்பாகக் கோரியது.
2016 ஆம் ஆண்டில், ஸஹ்றான் ஹாஷிம் கத்தோலிக்க சமயத்தவளுக்கு எதிராகவும் பேசினார். கிறிஸ்துமஸ் கொண்டாட வேண்டாம் என்று மக்களை அழைக்கும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார்.
12.09.2016, 17.02.2017 மற்றும் 02.03.2017 ஆகிய திகதிகளில் காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில், அவர் ISIS-ஐ ஆதரித்துப் பேசினார். இஸ்லாம் மார்க்கத்தில், ஒருவரின் நாட்டிற்கான தேசபக்திக்கு இடமில்லை என்றும், தேசியக் கொடியை ஏற்றுவது இஸ்லாமிய அரசுக்கு எதிரானது என்றும் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அந்த வகையில் 09.12.2016 ம் திகதி காத்தான்குடி தேசியதெளஹீத் ஜமாஅத் (NTJ) தலைமையகத்தில் தீவிரவாதி ஸஹ்றான் ஹாஷிம் "கொல்லப்படவேண்டிய முர்தத்களுடன் (மதம்மாறியவர்களுடன்) உறவுவைக்காதீர்கள்" என்ற தலைப்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா (ACJU) வின் பத்வாவை ஆதாரமாகக்கொண்டு உரையாற்றினார்.
குறித்த உரையில் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய முர்தத்கள் கொல்லப்படவேண்டும் அல்லது சிலுவையில் அறையப்படவேண்டும் அல்லது நாடு கடத்தப்படவேண்டும் இதில் முதன்மையான விடயம் கொல்லப்படவேண்டும் என்பதாகும் என்றும் யார் இஸ்லாத்தை விட்டும் மதம் மாறுகின்றாரோ அவரை கொல்லுங்கள். பிறக்கும் போதே காபிராக பிறந்து வளர்பவர்கள் கொல்லப்பட முன்னர் முதலில் கொல்லப்பட வேண்டியவர்கள் மதம் மாறிய முர்தத்கள் தான் என்றும் முர்தத்கள் ஆண்கள் பெண்கள் அனைவரும் கொல்லப்படவேண்டியவர்கள் தான். அவர்களுடன் நட்பு கொள்ளாதீர்கள். அவர்களின் ஜனாஸாக்களில் கலந்து கொள்ளாதீர்கள் என்றும் உரையாற்றினார். இது மிகவும் ஆபத்தான ஒரு உரையாகும்.
11.03.2017 ம் திகதி மற்றும் 13.03.2017 ம் திகதிகளில் தேசியதௌஹீத் ஜமாஅத் (NTJ) உறுப்பினர் தீவிரவாதி ALM நியாஸ் தனது முகநூல் (Face book) பதிவில் அலியார் சந்தி கலவரம் சம்பந்தமாக எழுதும் போது முர்தத்கள் - இஸ்லாத்தைவிட்டும் வெளியேறியவர்கள் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் தீர்ப்பு வழங்கப்பட்டவர்கள் எனவே இவர்களின் இரத்தம் மண்ணை நனைக்வேண்டும் என தேசியதௌஹீத் ஜமாஅத் (NTJ) உறுப்பினர்களை மீண்டும் தீவிரவாதத்திற்கு அழைப்பு விடுத்தார்.
2017 ம் ஆண்டு அலியார் சந்தி கலவரத்தின் பின் ஸஹ்றான் ஹாஷிம் தலைமறைவாகி இருந்தபோது கிழக்கிலிருந்து புறப்படும் தீப்பிழம்பு முர்தத் (மதம் மாறியவர்களையும்) முஷ்ரிக்குகளையும் (இணவைக்கும் மாற்று மதத்தவர்ளையும்) எரிக்காமல் ஓயப்போவதில்லை என 05.09.2017 ம் திகதி இணையத்தளத்தினூடாக எச்சரிக்கை விடுத்தார்.
எனவே அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா (ACJU) 1979ம் ஆண்டு வழங்கிய “பத்வா“வை அடிப்படையாகக் கொண்டு ஸஹ்றான் ஹாஷிமும் அவனது தீவிரவாத குழுவினரும் மேற்கொண்ட பகிரங்கப் பிரச்சாரத்தினால்தான் பல இளைஞர்கள் ஸஹ்றான் ஹாஷிமின் பின்னால் அவனது கருத்துக்களை நம்பி சென்றனர். இதனாலேயே ஸஹ்றான் ஹாஷிம் பிரபலமடைந்து தீவிரவாத தாக்குதலை மேற்கொண்டார்.
27.03.2017 அன்று ஸஹ்றான் ஹாஷிமின் உரைகள் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்திற்கு எழுத்துப்பூர்வ முறைப்பாட்டை சமர்ப்பித்தோம். முஸ்லிம் அல்லாதவர்களைக் கொல்ல வேண்டும் என்று அவர் கூறிய உரைகள் உட்பட அவரது மூன்று உரைகள் அடங்கிய CD களையும் நாங்கள் ஒப்படைத்தோம்.
அப்போதைய அரசாங்கத்தின் கவனத்திற்கு இந்த விடயங்களை சமர்ப்பித்தோம். ஆயினும் இதுபற்றி எவரும் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
1979 ம் ஆண்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா (ACJU) வினால் வழங்கப்பட்ட பத்வாவை தீவிரவாதி ஸஹ்றான் ஹாஷிமும் அவரது குழுவினரும் பயன்படுத்தியுள்ளனர்.
எனவே அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா (ACJU) வினால் 1979 ம் ஆண்டு வழங்கப்பட்ட பத்வா இன்று இலங்கை நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. குறித்த பத்வா இன்றும் நடைமுறையில் உள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினது “பத்வா” தொடர்ந்தும் நடைமுறையில் இருந்தால், தற்போதைக்கு சந்தர்ப்பம் இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் 2019 ம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் போன்று ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம் நிச்சயமாக ஏற்படலாம். ஏனெனில் கடந்த காலத்தில் ஸஹ்றான் ஹாஷிமால் இவ்வாறே சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன என்பது வெளிப்படையான உண்மையும் ஆதாரமுமாகும்.
அந்த வகையில் இலங்கை நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் இலங்கை நாட்டின் சட்டத்திற்கு முரணான வகையில் 1979 ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ள பத்வா (மார்க்கத் தீர்ப்பு) தொடர்பாக சென்ற 2011 ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரையுள்ள சகல அரசாங்கங்களிற்கும் பாதுகாப்பு தரப்பினர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் (முஸ்லிம் அரசியல் தலைவர்கள் உட்பட) நாம் தெரியப்படுத்தியுள்ளோம்.
இலங்கை நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான எம்மால் குறிப்பிடப்படும் இந்த விடயம் தொடர்பில் சகல தரப்பினரும் கூடிய கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.
ACJU வின் பத்வாவை ஆதாரமாகக்கொண்டு தீவிரவாதி ஸஹ்றான் ஹாஷிம் ஸுபி முஸ்லிம்களை கொலை செய்ய வேண்டும் என 2016 ம் ஆண்டு உரையாற்றினார் . Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 20, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.