காத்தான்குடியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட 35 வது தேசிய ஷுஹதாக்கள் தினம்.
(எம்.பஹத் ஜுனைட்)
1990 ஆகஸ்ட் மாதம் 03 திகதி காத்தான்குடியில் இரு பள்ளிவாயல்களில் இரவு நேர தொழுகையில் ஈடுபட்டுவந்த முஸ்லிம்கள் மீது விடுதலை புலிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 103 முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டனர்.
இச்சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் தேசிய ஷுஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இன்று ஞாயிற்றுக் கிழமை (03) 35 வது தேசிய ஷுஹதாக்கள் தின நிகழ்வுகள் ஹுஸைனியா மஸ்ஜித் மற்றும் மீரா ஜும் ஆ மஸ்ஜித் ஆகிய இரு பள்ளிவாயல்களில் கத்தமுல் குர் ஆன் ஓதப்பட்டதுடன் து ஆ பிரார்த்தனைகளும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரஊப் ஹக்கீம், பிரதித் தலைவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கள், பிரமுகர்கள், பள்ளிவாயல் நிர்வாகிகள், ஊர்முக்கியஸ்தர்கள்,
ஷுஹதாக்களின் குடும்பத்தினர் என அதிகமானோர் கலந்துகொண்டனர்.
அதனை தொடர்ந்து காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்,அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபை காத்தான்குடி கிளை, வர்த்தக சங்கம், தேசிய ஷுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம் மற்றும் இரு பள்ளிவாயல்களின் நிர்வாகம் ஆகியன இணைந்து பிரகடனமொன்றை வெளியிட்டனர்.
அப்பிரகடனத்தில் 1985ம் ஆண்டு தொடக்கம் 2010ம் ஆண்டு வரையான யுத்த காலப் பகுதியில் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக குறிப்பாக வடகிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் கடத்திக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் காணி இழப்புகள் தொடர்பில் ஒரு நீதியானதும் நியாயமானதும் சுதந்திரமானதுமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் ஏழு கோரிக்கைகளை முன்வைத்து காத்தான்குடி பிரதேச செயலாளரிடம் மஹஜர் கையளிக்கப்பட்டதுடன் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு துக்க தினமாக அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட 35 வது தேசிய ஷுஹதாக்கள் தினம்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 03, 2025
Rating:

கருத்துகள் இல்லை: