உலகக்கோப்பை வென்ற கிரிக்கெட் வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி பேசியது என்ன?
பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது இல்லத்தில் உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளை சந்தித்து, தொடர்ச்சியான மூன்று தோல்விகளுடனான கடினமான கட்டத்தைத் தாண்டி மீண்டு வந்து வெற்றி பெற்றதற்காக வீராங்கனைகளைப் பாராட்டினார்.
நடப்பு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி. இந்நிலையில், புதன்கிழமை அன்று உலகக் கோப்பையுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர் இந்திய அணி வீராங்கனைகள்.
இந்த சந்திப்பின்போது நடந்த உரையாடல்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. "2017-ல் நாங்கள் உங்களைச் சந்தித்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அப்போது, நாங்கள் கோப்பையுடன் வரவில்லை. ஆனால் இந்த முறை, பல ஆண்டுகளாக நாங்கள் கடுமையாக உழைத்து கோப்பையை இங்கு கொண்டு வந்திருப்பது எங்களுக்கு மிகுந்த மரியாதைக்குரிய விஷயம்" என்று கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், பிரதமர் மோடி பகிர்ந்து கொண்ட உரையாடலின் வீடியோவில் கூறினார்.
பிரதமரின் வார்த்தைகள் தங்களின் வெற்றிக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்ததாக துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா கூறினார். இந்த உரையாடலின் போது, போட்டியின் சிறந்த வீராங்கனை தீப்தி சர்மா, பிரதமர் மோடியை 2017 முதல் அவரைச் சந்திக்கக் காத்திருந்ததாகக் கூறினார்.
இதற்கு பிரதமர் மோடி அளித்த பதிலில், "நீங்கள் ஒரு சிறந்த வேலையைச் செய்துள்ளீர்கள். இந்தியாவில், கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு அல்ல. ஒரு வகையில், அது இந்திய மக்களின் வாழ்க்கையாகிவிட்டது. கிரிக்கெட்டில் நல்லது நடந்தால், இந்தியா நன்றாக உணர்கிறது, கிரிக்கெட்டில் கொஞ்சம் தவறு நடந்தாலும், முழு இந்தியாவும் மோசமாக உணர்கிறது” என்றார்.
கிரிக்கெட் வீராங்கனைகள் பிரதமர் மோடியுடன் அவரது இல்லத்தில் உரையாடியபோது, பிரதமர் தீப்தி சர்மாவிடம் அவரது ஹனுமன் டாட்டூ பற்றி கேட்டார். அதற்கு தீப்தி சர்மா, “எனது ஜெய் ஸ்ரீ ராம் இன்ஸ்டாகிராம் பயோவும், கையில் உள்ள ஹனுமன் டாட்டூவும் எனக்கு பலத்தை அளிக்கிறது” என்று கூறினார்.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹர்லீன் தியோல் பிரதமர் மோடியிடம் அவரது சரும பராமரிப்பு பற்றி கேட்டபோது, "நான் அதைப் பற்றி எல்லாம் யோசிக்கவில்லை" என்று பிரதமர் சிரித்தபடி கூறினார். ஹர்மன்ப்ரீத் பிரதமர் மோடியிடம், எப்போதும் நிகழ்காலத்தில் எப்படி இருக்க முடிகிறது என்று கேட்டார். அதற்கு “அது எனது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும், காலப்போக்கில் ஒரு பழக்கமாகவும் மாறிவிட்டது” என்று பதிலளித்தார்.
பிரதமர் மோடி அங்கிருந்த வீராங்கனைகளிடம், நாடு முழுவதும் உள்ள பெண்களிடையே, ஃபிட் இந்தியா செய்தியை ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். உடல் பருமன் அதிகரித்து வரும் பிரச்சனை குறித்தும் அவர் கவலை தெரிவித்தார், மேலும் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 06, 2025
Rating:

கருத்துகள் இல்லை: