மழைக்காலமும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்
(பஸ்லா பர்ஸான்
காத்தான்குடி)
மழை என்றாலே அனைவருக்கும் விருப்பமான ஒன்றுதான்.மழையே உலகம் செழிப்புடன் இயங்குவதற்கு பல நன்மைகளை ஈட்டித் தருகின்றது.
ஆனால் அம்மழை தொடர்ச்சியாகப் பெய்யும் போது மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாக வேண்டி ஏற்படுகிறது.
மழைக்காலங்களில் சிறுவர்கள் கற்றல் நடவடிக்கைகளுக்குச் செல்வதிலும் பல்வேறுபட்ட தொழில் புரிவோர் தொழிலுக்குச் செல்வதிலும் குறிப்பாக மீனவர்கள் கடலுக்குச் செல்வதிலும் மற்றும் அவசியமான தேவைகளுக்கு வெளியே செல்வதிலும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படுகிறது.
எனவே இத்தகைய சந்தர்ப்பங்களில் அதற்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஒவ்வொருவரதும் பொறுப்பாகும்.
மழைக்காலங்களில் வானிலை சம்பந்தமான தகவல்கள் பற்றி விழிப்பாக இருக்க வேண்டும். வானிலை அவதான நிலையத்தினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கமைய மீனவர்கள் மற்றும் ஏனையோர் தமது செயற்பாடுகளை ஒழுங்கமைத்துக்கொள்ள வேண்டும்.
இக்காலங்களில் மண்சரிவு அபாயங்கள் ஏற்படுவதால் அது தொடர்பாக அவதானமாக இருப்பதும் அவசியம்.
மலைப் பகுதிகளில் குடியிருப்பவர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதுடன் அவசியமாயின் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டும்.
மேலும் மழைக்காலங்களில் இடி,மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதால் அத்தகைய சந்தர்ப்பங்களில் வெளியில் செல்வதையோ மரத்தின் கீழ் நிற்பதையோ தவிர்த்து வீடுகளில் தங்கியிருக்க வேண்டும்.
அத்துடன் மின் சாதனங்களின் பாவனையையும் நிறுத்தி அவற்றின் மின் தொடர்பைத் துண்டித்து விட வேண்டும்.
இல்லையேல் இடி, மின்னல் தாக்கத்தினால் அவை செயலிழப்பது மட்டுமன்றி எமக்கும் பல ஆபத்துக்களை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
கைத்தொலைபேசி பாவனையையும் இச்சந்தர்ப்பத்தில் தவிர்க்க வேண்டும்.அத்துடன் ஈரமான கைகளால் ஆளிகள்,மின் குதை போன்றவற்றைத் தொழிற்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.
தற்போது புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் அனைவரும் தங்கள் வசிப்பிடங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு அது தொடர்பான விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.
அவசியமான தேவைகளுக்கு வெளியே செல்லும்போது குடை,மழை மேலங்கி போன்றவற்றை தம்மோடு எடுத்துச் செல்ல வேண்டும்.
இதனால் அனாவசியமாக மழையில் நனைந்து உபாதைக்குள்ளாவதைத் தடுக்கலாம். வெளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும் தங்களது பாதங்களைக் கழுவிச் சுத்தமாகத் துடைக்க வேண்டும்.
இதனால் கால் விரல்களுக்கிடையே ஏற்படும் தொற்றைத் தடுக்க முடியும்.கைகளைச் சவர்க்காரமிட்டு தொற்றுக்கள் நீங்கும்படி கழுவிக்கொள்ள வேண்டும்.
அத்துடன் உடையையும் மாற்றி உடலையும் தலைமுடியையும் உலர்வாக வைக்க வேண்டும்.
இம்முறையில் நடந்துகொள்ள எம் பிள்ளைகளையும் வழிப்படுத்த வேண்டும்.வீட்டிலுள்ள சிசுக்கள் மற்றும் முதியவர்களுக்கும் உரிய முறையில் தொப்பி,காலுறைகள் போன்றவற்றை அணிவித்து அவர்களது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்.
அத்துடன் செல்லப்பிராணிகள் வளர்ப்போர் அது தொடர்பான பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.
அனாவசியமாக வீதிகளில் சுற்றித் திரிவதையும் சிறுவர்களை வெள்ளத்தில் விளையாட விடுவதையும் தவிர்க்க வேண்டும்.
மேலும் தொற்றுக்கள் அதிகம் பரவக்கூடிய காலமாக இருப்பதால் வெளியக உணவுகளை முற்றாகத் தவிர்த்து வீட்டிலேயே சமைத்த ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்.
கொதித்தாறிய நீரையே அனைவரும் அருந்த வேண்டும்.மழைக்காலங்களில் தடிமன் போன்ற பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் சுடு நீர் ஆவி பிடித்தல்,மூலிகைத் தேநீர் அருந்துதல் போன்றவற்றைப் பழக்கமாக்கிக் கொள்ளலாம்.
மூலிகைத் தேநீர் நோயெதிர்ப்பு சக்தியை ஏற்படுத்த வல்லது.
இக் காலங்களில் வீட்டைச் சுற்றி மழைநீர் தேங்க விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சிரட்டைகள்,யோகட் கோப்பைகள் போன்ற நீர் தேங்கக்கூடிய பொருட்களைச் சுற்றுப்புறத்திலிருந்து அகற்றிச் சூழலைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
இல்லையேல் அவற்றுள் நுளம்புகள் பெருக்கெடுத்து டெங்கு போன்ற கொடிய நோய்களை ஏற்படுத்த அவை ஏதுவாக அமைந்துவிடும்.
அத்துடன் கிணறு,நீர்த்தாங்கிகளை நுளம்பு வலையிட்டு மூடுவதும் சிறந்தது.
மேலும் மழைக்காலங்களில் பாம்பு,முதலை போன்ற ஆபத்தை விளைவிக்கும் பிராணிகளின் நடமாட்டம் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் இருட்டில் நடமாடுவதைத் தவிர்த்துக்கொள்வதோடு அது தொடர்பான அவதானத்துடன் இருப்பதும் முக்கியமாகும்.அத்துடன் அவசர தொலைபேசி இலக்கங்களைப் பதிந்து வைத்துக்கொள்ளும்போதும் அவை வெள்ள அபாயங்களின் போது உதவிகோர வழியாய் அமையும்.
மேலும் இக்காலங்களில் பாதைகள் ஈரமாக வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதால் அவற்றின்மீது வாகனங்களைச் செலுத்தும்போது மிக அவதானமாகப் பயணிக்க வேண்டும்.
அன்றேல் அவை விபத்துக்கள் ஏற்படவும் ஏதுவாய் அமையும்.நடந்து செல்லும் போதும் அதற்கேற்ற வழுக்காத, பாதுகாப்பான பாதணிகளை அணிய வேண்டும்.அத்துடன் முக்கியமான ஆவணங்களையும் வெள்ளத்தில் சிக்கித் தொலைந்துபோகாது பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் சாத்தியங்களை அறிந்து முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும்.
மின்துண்டிக்கப்படக்கூடிய நிலைமைகள் ஏள்படக்கூடும் என்பதால் உலர்கல வானொலிகள்,மின்சூள் என்பவற்றைக் கைவசம் வைத்திருப்பதும் சாலச் சிறந்தது.
எனவே நாம் மழையின் முக்கியத்துவத்தை உணர்ந்து மழைக்காலங்களில் அது தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு சுகாதாரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வோம்.
பஸ்லா பர்ஸான்
காத்தான்குடி.
மழைக்காலமும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 26, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 26, 2025
Rating:

கருத்துகள் இல்லை: