Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இலங்கை வரலாற்றில் ஒரு பெண் தலைமைத்துவத்துடன் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது மலையக கட்சி புரட்சிகர மக்கள் சக்தி.



சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவால் அங்கீகாரமளிக்கப்பட்ட அரசியல் கட்சியாக புரட்சிகர மக்கள் சக்தி அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் விளக்களிக்கும் முகமாக புரட்சிகர மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் அனுஷா சந்திரசேகரன் தலையில் ஹட்டனில் அமைந்துள்ள புரட்சிகர மக்கள் சக்தியின் காரியாலயத்தில் ஒரு ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது அவரால் முன்வைக்கப்பட்ட கருத்துகள் வருமாறு,

”எமது கட்சியான புரட்சிகர மக்கள் சக்தியை 2020ம் ஆண்டளவில் ஆரம்பித்தோம். கட்சியின் ஆரம்ப பெயராக சந்திரசேகரன் மக்கள் முன்னணி என்றே காணப்பட்டது. 1981ம் ஆண்டு 1ம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்திற்கு அமைவாக எமது கட்சியின் பெயர் சந்திரசேகரன் மக்கள் முன்னணி என்னும் பெயரிலிருந்து புரட்சிகர மக்கள் சக்தி என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

எமது புரட்சிகர மக்கள் சக்தி 2026ம் ஆண்டு தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாக பிரகடனப்படுத்தப்படுகிறது.

எமது கட்சியின் பெயர் தமிழில் புரட்சிகர மக்கள் சக்தி சிங்களத்தில் விப்லவவாதி ஜனதா பலய ( විප්ලවවාදි ජනතා බලය) ஆங்கிலத்தில் ரிவலூஷனரி பீப்பள்ஸ் பவர் (Revolutionary Peoples Power)

புரட்சிகர மக்கள் சக்தி கட்சியின் சின்னம் கை கோடரி / Hand Axe / අත් පොරව

எமது கட்சி கொடியின் நிறம் சிவப்பு வெள்ளை கறுப்பு ஆகிய நிறங்கள்.

இலங்கை வரலாற்றில் ஒரு பெண் தலைமைத்துவத்துடன் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது மலையக கட்சி இந்த புரட்சிகர மக்கள் சக்தி.

ஒரு சட்டத்தரணியாக, ஒரு பெண்ணாக, மலையக பெண்ணாக எனக்கும் இந்த கட்சி அங்கீகரிக்கப்பட்டது பெருமையே!

மலையக வரலாற்றில் அமரர் சந்திரசேகரனுக்கு அடுத்தபடியாக அவர் கொள்கை அரசியலை முன்னெடுக்கும் இந்த அனுஷா சந்திரசேகரனுக்கு தேர்தல் ஆணைக்குழுவினால் புரட்சிகர மக்கள் சக்தி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவிக்கப்பட்டது, எனக்கும் நேர்மையாக, சுயாதீனமாக அரசியலில் ஈடுபட எண்ணும், விரும்பும் எதிர்கால மலையக இளைஞர்களுக்கும், அடுத்த தலைமுறைக்கும் ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

தவிர்க்க முடியாத காரணங்களால் எங்களுடைய புரட்சிகர மக்கள் சக்தி இதுவரை காலமும் எமது செயற்பாடுகளை நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் மேற்கொண்டிருந்தாலும், இனி நாடளாவிய ரீதியில் எமது கட்சி இயங்கும், நாம் எமது செயற்பாடுகளை விஸ்தரிக்கிறோம்.

அதற்காக ஆர்வமுள்ள, உண்மையான உணர்வுள்ள, நேர்மையாக அரசியல் செய்ய விரும்பும் அனைவரையும் அரவணைத்து இணைத்துக்கொண்டு நாம் எமது பணிகளை மேற்கொள்வோம். ஆர்வமுள்ள அனைவரையும் எம்முடன் இணைந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

தலவாக்கலை மண்ணிலிருந்து இலங்கை அரசியலில் தடம் பதிக்கும் இரண்டாவது கட்சியாக இந்த புரட்சிகர மக்கள் சக்தி உருவாகியிருக்கிறது. தலவாக்கலை மண்ணில் முதலாவதாக உதித்த மலையக மக்கள் முன்னணி எனது தந்தை சந்திரசேகரன் அவர்களால் உருவாக்கப்பட்டது. அந்த மலையக மக்கள் முன்னணி எனது தந்தை இருக்கும் வரை எவ்வளவு சேவைகளை இந்த மக்களுக்கு வழங்கியதோ, அதேபோன்று புரட்சிகர மக்கள் சக்தியும் மக்களுக்கான சேவைகளை வழங்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் படத்தேவையில்லை.

இந்த கட்சியில் எந்த ஜாதி சங்கங்களுக்கோ, மத சங்கங்களுக்கோ இடமில்லை. ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வுகளுக்கோ வர்க்க பேதங்களுக்கும் இடமில்லை. அனைவருக்கும் சம உரிமை உண்டு, சம வாய்ப்பு வழங்கப்படும்.

இலங்கை வரலாற்றில் ஒரு புதிய சரிதம் படைக்க போகும் இந்த புரட்சிகர மக்கள் சக்தியில் இணைந்து நமது சமூகத்தின் நிலையை உயர்த்த நாம் புரட்சிகரமாக ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு நான் கூறும்போது பலருக்கு பல தெளிவின்மை, பல சந்தேகங்கள் ஏற்படலாம். பல தேர்தல்களில் பல கட்சிகளினூடாகவும், பல சின்னங்களினூடாகவும் போட்டியிட்டிருக்கிறேன். ஆகவே இது என்ன புதிய கட்சி, புதிய சின்னம் என பலருக்கும் பல தெளிவின்மைகள், சந்தேகங்கள் எழலாம். ஆகவே அதை சற்று விரிவாக தெளிவுபடுத்த வேண்டும் என்று எண்ணுகிறேன்.

2020ம் ஆண்டு சுயேட்சையாக கோடரி சின்னத்தில் நான் களமிறங்கியிருந்தேன் பாராளுமன்ற தேர்தலில், 17107 வாக்குகள் எனக்கு கிடைக்கப்பெற்றது. 1000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் நான் பின்னடைவை சந்தித்திருந்தேன். 2018ம் ஆண்டு எனக்கு , என்னுடைய தந்தையினாலும் எனது தனதையோடு இணைந்து சிறைவாசம் அனுபவித்த, பல போராட்டங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட மலையக மக்கள் முன்னணியால் எனக்கு பிரதி செயலாளர் நாயகம் என்ற அதிகாரமற்ற ஒரு பதவி தரப்பட்டிருந்தது.

2020ல் தேர்தலுக்கு பிறகு அந்த பிரதி செயலாளர் நாயகம் என்ற பதவியும், மலையக மக்கள் முன்னணியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்தும் என்னை நீக்கினார்கள். அப்போதைய செயலாளர் நாயகம் மறைந்த லோரன்ஸ் அவர்களின் தலைமையில் என்னை நீக்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.

இது அந்த காலத்தில் ஒரு பேசுபொருளாக இருந்தது.

இத்தனை வருடம் கட்சிக்காக நான் உழைத்தேன், போஸ்டர் ஒட்டினேன் எனக்குதான் பதவி வேண்டும், அடுத்த செயலாளர் நாயகம் நான் தான், நான் தான் கல்விமான், நான் பேராசிரியர் எனக்கு இந்த பதவி வேண்டும் என்று பதவி வெறிபிடித்து அலைபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஏமாற்றுக்காரர்கள் இருக்கிறார்கள். ஊழல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டுமென்றால் இந்த அதிகாரம் அற்ற பிரதி செயலாளர் நாயகம் என்ற பதவி என்பது பெரிதாக இருக்கலாம்.

அரசியல் தலைமைகள் தூக்கிபோடும் எழும்பு துண்டுகளுக்கு வாலாட்டுபவர்களுக்கு இந்த பதவிகள் பெரிதாக இருக்கலாம், ஆனால் 1994ம் ஆண்டு இலங்கை அரசியலையே புரட்டிப்போட்ட உலகறிந்த தலைவர் அமரர் சந்திரசேகரனின் அரசியலை சிறுவயதிலிருந்தே பார்த்து வளர்ந்திருக்கிறேன். அவருடைய உரையை நான் கேட்டிருக்கிறேன். அவருடைய கொள்கைகளை உள்வாங்கியிருக்கிறேன்.

என்னுடைய நாடி நாளம் முழுவதும் என்னுடைய தந்தை சந்திரசேகரன் அவர்களிடைய புரட்சிகர ரத்தம் ஓடுகிறது. அப்படிப்பட்ட அனுஷா சந்திரசேகரனுக்கு அந்த பதவிகளோ கட்சிகளோ பெரிய விடயமாக தெரியவில்லை. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கம் மட்டும்தான் இருந்தது.

எமது மக்களுக்கு நிலவுரிமை வேண்டும், எமது மக்கள் கல்வியில் மேம்பட வேண்டும், நாளை பிறக்கப்போகும் பெண் குழந்தைக்கு, ஆண் குழந்தைக்கு , மலையகத்தில் பிறக்கப்போற குழந்தைகளுக்கு நல்ல வளமான எதிர்காலத்தை உருவாக்கித்தர வேண்டும் என்ற ஒரே ஒரு. நோக்கம் மட்டும் தான் இருந்ததே தவிர, அதற்காக தான் நான் அரசியலுக்கு 2018ம் ஆண்டு வந்தேனே தவிர , என்னுடைய வருவாயை ஈட்டிக்கொள்வதற்காகவோ, என்னுடைய வியாபாரத்தை காப்பாற்றிக்கொள்ளவோ நான் அரசியலுக்கு வரவில்லை. எனக்கு சட்டத்தரணி என்ற் தொழில் இருக்கிறது.

அந்த தொழிலின் மூலமாக நான் வருவாயை ஈட்டிக்கொள்ள முடியும், 1994ம் ஆண்டு ஆரம்பித்த எனது தந்தை அமரர் சந்திரசேகரனின் பயணம் 2010 ஆண்டுடன் முடிவுக்கு வந்தது. ஆனாலும் அவர் வாழ்ந்த 16 வருடங்களில் தனி வீடமைப்பு திட்டமாக இருக்கட்டும், மின்சார வசதிகளை வழங்குவதாக இருக்கட்டும், கல்வி அபிவிருத்தியாக இருக்கட்டும், விளையாட்டு துறை அபிவிருத்தியாக இருக்கட்டும். அனைத்து துறைகளிலுக் வளர்ச்சியை உருவாக்கிவிட்டே அவர் மறைந்தார்.

அவர் மறைந்து 16 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த 16 வருடங்களில் ஒரு அரசியல் வரட்சியை தான் நான் பார்க்கிறேன். ஒரு சரியான ஒரு தலைமைத்துவம் இருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறியே. பல கட்சிகள் இருக்கின்றன. பல அரசியல் தலைமைத்துவங்கள் இருக்கின்றன. ஆனால் தேர்தல் காலங்களில் மட்டும் அமையப்பெறும் கூட்டணிகள் மக்களுக்கான கூட்டணிகளாக தெரியவில்லை. தேர்தல் காலங்களில் வாக்குகளை சேகரிப்பதற்காக மட்டும் தான் இந்த கூட்டணிகள் இருக்கின்றன. அவர்கள் மக்களுக்கான அரசியலை செய்வதாகவும் தெரியவில்லை.

தங்களுடைய வியாபாரத்தையும், தங்களுடைய இருப்பையும் காப்பாற்றுக்கொள்வதற்கான அரசியலைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்.

ஆகவே தலைமத்துவத்தில் ஒரு வறட்சி, அரசியலில் ஒரு வறட்சி நிலையே காணப்படுகிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்கள் நடைபெறுகிறது. அலைகளில் எமது இளைஞர்கள் அள்ளுண்டு சென்று வாக்குகளை வழங்குகிறார்கள். தேசிய கட்சிகளுடன் இணைந்து செயற்படுகிறார்கள், அது எமது இளைஞர்களுக்கு எதிர்கால கேள்விக்குறியாக மாறிப்போய் இருக்கிறது. இது அவ்வளவுக்கும் காரணம் எமது மலையகத்தில் இருக்கும் அரசியல் தலைமைகளின் அரசியல் வறட்சியும் அரசியல் தலைமைத்துவ வறட்சியும் தான் காரணம்.

இதை எல்லாம் உள்வாங்கி தான் பத்தோடு பதினொன்றாக இருந்துவிடாமல் ஒரு அரசியல் செய்ய வேண்டும், அது பல நூற்றாண்டுகளுக்கு பேசப்பட வேண்டும் என்ற ஒரு நோக்கத்தோடு புரட்சிகர மக்கள் சக்தியை ஆரம்பித்தேன்.

போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும், நான் சிறுவயதில் இருந்து பார்த்த, எனது தந்தை அமரர் சந்திரசேகரனின் அரசியலை, எதிர்கால சந்ததியினரும் பார்க்க வேண்டும். எதிர்கால சந்ததியினரும் அந்த அரசியலின் மூலமாக பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் 1989ம் ஆண்டு எனது தந்தை சந்திரசேகரன் அவர்கள் எப்படி மலையக மக்கள் முன்னணி என்ற கட்சியை உருவாக்கினாரோ, தான் இருந்த ஒரு கட்சியை விட்டு விலகி வந்து மலையக மக்கள் முன்னணி என்னும் கட்சியை உருவாக்கினாரோ, அதே போல மக்கள் மக்கள் முன்னணியில் இருந்து நான் விலகி புரட்சிகர மக்கள் சக்தி என்ற புதியதொரு கட்சியை நான் உருவாக்கினேன். சந்திரசேகரன் மக்கள் முன்னணியாக இருந்து பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த 07 வருடமாக மூன்று அரசாங்கங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம், 2020 ஆண்டுகளில் ஒரு அரசாங்கம் வந்தது. இதுதான் இன்னும் 20, 25 வருடங்களுக்கு இந்த அரசாங்கம் தான் நிலைக்க போகிறது என்று விமர்சித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்கள் தான் இனி இலங்கையை ஆளப்போகிறார்கள் என்று நிறைய பேர் விமர்சித்திருந்தார்கள். ஆனால் மூன்றே வருடங்களில் ஆட்சி கவிழ்ந்தது. இன்னும் இரு இடைக்கால அரசாங்கம் வந்தது. இந்த இடைக்கால ஜனாதிபதிதான் இனி நாட்டை கொண்டு நடாத்துவர், இனி இவர்தான் பத்து வருடங்களுக்கு இருக்கப்போகிறார் என்று சொன்னார்கள். அதுவும் கவிழ்ந்து இப்போது இன்னுமொரு அலையில் ஒரு அரசாங்கத்துடன் காலம் கடந்துகொண்டிருக்கிறது.

நாம் இவ்வாறு குறிப்பிடும் போது எந்த அரசாங்கத்துக்கும் புரட்சிகர மக்கள் சக்தியாக நாங்கள் எதிரானவர்கள் அல்ல. இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியலமைப்புக்கு அமைய நாங்கள் மக்களுக்கான சேவைகளை செய்ய வேண்டும் என்ற ஒரு நோக்கம் மட்டும்தான் எங்களுக்கு இருக்கின்றது. தனி ஒருவரின் விருப்பு வெறுப்பிற்காக, அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவின் விருப்பு, வெருப்பிற்காக அரசியல் செய்பவர்கள் நாங்கள் அல்ல. குறிப்பிட்ட குழுக்களின் தேவைகளுக்காக அரசியல் செய்பவர்கள் நாங்கள் அல்ல.

ஏனென்றால் மக்களோடு மக்களாக நாங்கள் களத்தில் நிற்கிறோம். பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவிகள் இருப்பவர்களும் சரி, அமைச்சுப்பதவிகளை வைத்துக்கொண்டு அலங்கரிப்பவர்களும் சரி மக்களோடு மக்களாக இருக்கிறார்களா என சிந்தித்து பார்க்க வேண்டும்.

பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்களுக்காக நாங்கள் கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்தினூடாக உதவிகளை செய்து வருகிறோம். அதேபோன்று இப்போது அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலால பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை நாம் செய்திருக்கிறோம். உதவியின் அளவு சிறிதாக இருக்கலாம், இருந்தாலும் எத்தனையோ பேர் பதவிகளையும், அதிகாரங்களையும் வைத்துக்கொண்டு உதவிகள் செய்யாமல் இருக்கும் போது எங்களால் முடிந்த உதவிகளை செய்வதை மக்கள் பெரிய விடயமாக பார்க்கிறார்கள். எமது மக்களுக்காக எமது சமூகத்தின் வளர்ச்சிக்காக நாம் வகுத்திருக்கும் திட்டங்களையும், உரிமை சார் விடயங்களையும் மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து வேலைத்திட்டங்களையும் நாம் எமது கட்சியின் மூலமாக மேற்கொள்வோம். இதற்காக நாம் அனைவரையும் ஒன்று திரட்ட அவசியமான அனைத்து வேலைத்திட்டங்களையும் மேற்கொள்வோம் என்பதனையும் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

எங்களுடைய அரசியல் கொள்கைகளாக காணி உரிமை, அதேபோன்று ஆரோக்கியமான வாழ்க்கை நிலையை எமது மக்களுக்கு வழங்குதல், கல்வி அபிவிருத்தி, தோட்ட தொழிலாளர்களுக்கான உரிமை சார் விடயங்கள் தொடர்பில் பங்கெடுத்தல், சுகாதார மேம்பாடு என்பது எமது பிரதான கொள்கையாக, பிரதான நோக்கமாக பெருந்தோட்ட மக்களுக்காக இரு தனியான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் நாம் முன்வைக்கிறோம்.

எனது தந்தை அமரர் சந்திரசேகரனது கட்சியை சதியினால் கைப்பற்றியிருக்கலாம்.
ஆனால் நாம் எமது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு மதியினால் புரட்சிகர மக்கள் சக்தியை உருவாக்கியிருக்கிறோம்” – என்றார்.

இலங்கை வரலாற்றில் ஒரு பெண் தலைமைத்துவத்துடன் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது மலையக கட்சி புரட்சிகர மக்கள் சக்தி. Reviewed by www.lankanvoice.lk on ஜனவரி 26, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.