Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மக்களை ஆட்சியின் அங்கமாக்குவதே ‘பிரஜா சக்தி’!

‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டமானது தற்போதைய மக்கள்நேய அரசாங்கத்தின் ஜனநாயகப் பண்புகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய கட்டம் என்றும், அந்தந்தப் பிரதேசங்களுக்குரிய தனித்துவமான பொருளாதார முறைகளை இனம் கண்டு கிராமங்களை அபிவிருத்தி செய்வதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கிராமிய அபிவிருத்தி மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் மக்களைப் பங்காளிகளாக்குவதற்காக, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘பிரஜா சக்தி’ வறுமை ஒழிப்பு தேசிய இயக்கத்தின் ‘ஆயிரம் கிராமங்களில், ஆயிரம் பணிகள்’ திட்டத்தின் கொழும்பு மாவட்ட ஆரம்ப நிகழ்வு 02-06.2026 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கஸ்பாவ, நாம்பமுணுவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் தரிசுநிலங்களாகக் கிடந்த வயல்களை மீண்டும் பயிர்செய்யும் ‘பிரஜா சக்தி’ அபிவிருத்தி சபையின் வேலைத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே பிரதமர் இக்கருத்தைக் கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர்,

“அரசாங்கத்தின் மக்கள்நேய ஆட்சியின் ஜனநாயகப் பண்புகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய சந்தர்ப்பமாக இந்த ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தை அடையாளப்படுத்தலாம். மக்கள்நேய ஆட்சி என்பது அரசாங்கம் மாத்திரம் தனித்துச் செயற்படுவதல்ல; மாறாக அது அரசாங்கம், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய அனைத்துத் தரப்புகளும் இணைந்து மேற்கொள்ளும் ஒரு கூட்டு முயற்சியாகும் என்பதையே இத்திட்டத்தின் பெயர் உணர்த்துகின்றது.

தேர்தல் காலங்களில் மாத்திரம் ஆட்சியாளர்கள் மக்களுடன் இணைந்து இயங்குவதல்ல, மாறாக மக்களை ஆட்சியின் ஓர் அங்கமாக மாற்றிச் செயற்பாட்டுரீதியாகவே அவர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளும் எண்ணக்கருவை, இந்த ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தின் ஊடாகச் சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் ஸ்தாபித்திருக்கின்றோம்.

பெயரளவிலான வலுவூட்டல் திட்டங்கள் இதற்கு முன்பும் நாட்டில் இருந்தன. ஆனால், அவற்றின் மூலம் மக்களுக்கு உரிய பலன்கள் கிடைக்கவில்லை; அரசியல்வாதிகள் மட்டுமே அதன் மூலம் வலுவடைந்தனர்.

பிறரைச் சார்ந்திருக்கும் மனநிலையிலிருந்து விடுபட்ட எமது நாட்டு மக்கள், கடந்த 2024ஆம் ஆண்டில் மேற்கொண்ட அரசியல் மாற்றத்தை அடுத்து, நாட்டைத் தங்களது சொந்த உழைப்பால் கட்டியெழுப்பும் பொறுப்பைத் தம் கைகளில் எடுத்து இந்த வேலைத்திட்டத்துடன் இணைகின்றார்கள்.

பொருளாதார வலுவூட்டலை இலக்காகக் கொண்டு, தமது பிரதேசத்திற்குரிய தனித்துவமான பொருளாதார முறையைக் கண்டறிந்து அதனைக் கட்டியெழுப்புவதை இந்தத் திட்டங்கள் மூலம் வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும்.

உலக அரசியல் பின்னணியில் ஏற்பட்டிருக்கும் தற்போதைய நெருக்கடி நிலைமைகளில், பொருளாதாரப் பாதுகாப்பிற்காகத் தன்னிறைவு பெற்ற வாழ்க்கை முறையானது எந்தவொரு நாட்டு மக்களுக்கும் மிக முக்கியமானதாக அமைகின்றது.

நாம் உள்நாட்டில் இறக்குமதி செய்ய வேண்டிய இன்றியமையாத பொருட்களை மாத்திரம் இறக்குமதி செய்வதோடு, உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் எமது நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். அதன் மூலம், உலகளாவிய சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய பலமான பொருளாதாரத்தை, உணவுப் பாதுகாப்பின் ஊடாக நாம் கட்டியெழுப்ப வேண்டும்.

அரசாங்கம், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பைப் பேணுவதன் மூலம், இந்தத் திட்டங்களின் ஊடாக மக்களின் வறுமை முழுமையாக ஒழிக்கப்படும். அப்போது ஒரு வளமான நாடு உருவாவதோடு, ஒட்டுமொத்த மக்களுக்கும் இயல்பாகவே அழகானதொரு வாழ்க்கையும் உருவாகும்.” – என்றார்.

இந்நிகழ்வில் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் நிபுணாராச்சி, கஸ்பாவ நகர சபைத் தலைவர் சாமர மத்தும கலுகே, பொரலஸ்கமுவ நகர சபைத் தலைவர் பிரதீப் நிஷாந்த வெதமுல்ல, நகர சபை உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

மக்களை ஆட்சியின் அங்கமாக்குவதே ‘பிரஜா சக்தி’! Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 03, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.