Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

அடுத்த ஆண்டு முதல் 06 ஆம் தரத்திற்குரிய புதிய கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தக் கல்வி அமைச்சு முழுமையாகத் தயார்.


கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தல் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் கல்வி அமைச்சின் பிரதானிகளுக்கு இடையில் கலந்துரையாடல்

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உட்பட கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு இடையிலான கலந்துரையாடல்   (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

அடுத்த ஆண்டு முதல் 06 ஆம் தரத்திற்குரிய புதிய கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு முழுமையான தயார் நிலையில் உள்ளதாக இங்கு குறிப்பிடப்பட்டது.

புதிய கல்வி மறுசீரமைப்புகள் ஐந்து தூண்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், இது தொடர்பாக ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய, அந்தப் பணிகளைக் கண்காணிப்பதற்கும் முன்னெடுத்துச் செல்வதற்கும் ஐந்து குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அக்குழுக்களின் செயல்பாடுகளைக் கண்டறிவதற்கும் அவற்றின் முன்னேற்றத்தை ஆராய்வதற்கும் கல்வி அமைச்சரின் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

2026 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கல்வி  மறுசீரமைப்புகள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகக் கல்வி அமைச்சின் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.

இந்த மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தல் குறித்து நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளையும் கருத்திற்கொண்டு, 06 ஆம் தரத்திற்குரிய பாடத்தொகுதிகளை (Modules) உரிய திருத்தங்களுடன் அச்சிடும் பணிகள் தயார் செய்யப்பட்டுள்ளதுடன், 06 ஆம் தரத்தின் முதலாம் தவணைக்குரிய அனைத்துப் பாடத்தொகுதிகளும் (Modules) தற்போது அச்சிட்டு முடிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டாம் தவணைக்குரிய பாடத்தொகுதிகளுடன் (Modules) சேர்த்து அவற்றை ஒரே நேரத்தில் வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

கல்வி மறுசீரமைப்புகளை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்குவதற்காக, தேசிய கல்வி நிறுவகமும், தேசிய கல்வி ஆணைக்குழுவும் தொடர்ச்சியாகத் தலையீடு செய்யும் என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், இந்தப் பாடத்தொகுதிகளை (Modules) மேம்படுத்தும் பணிகள் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் என்றும் கலந்துரையாடப்பட்டது.

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய அனைத்துப் பாடசாலைகளுக்கும், அதாவது 6,500 இரண்டாம் நிலைப் பாடசாலைகளுக்கு தேவையான உபகரணங்கள் தற்போது வழங்கி முடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர். குறிப்பாக, அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய 373 பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றை அபிவிருத்தி செய்யும் பணிகளும் தற்போது நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கல்வி மறுசீரமைப்புகளை செயற்படுத்தும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பைப் பேணி, கொள்கை ரீதியான வழிகாட்டல்களை வழங்குவதற்கு ஜனாதிபதி அலுவலகம் தொடர்ச்சியாக தலையீடு செய்வது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகள் தமது பாராட்டைத் தெரிவித்தனர்.

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக, மீண்டும் மூன்று மாதங்களின் பின்னர் கூட்டமொன்றை நடத்துவதற்கும் இங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஏ. சரத் ஆனந்த, உப தலைவர் திலக் தர்மரத்ன உள்ளிட்ட கல்வி அமைச்சினதும் அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களினதும் தலைவர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்
.

அடுத்த ஆண்டு முதல் 06 ஆம் தரத்திற்குரிய புதிய கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தக் கல்வி அமைச்சு முழுமையாகத் தயார். Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 28, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.