அமைதி பேச்சுக்கு மத்தியில் ஈரானின் உயர்மட்ட தலைவர்களை குறிவைத்த இஸ்ரேல் – அமெரிக்க ஊடகங்கள் திடுக்கிடும் தகவல்
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்குரிய அமைதி பேச்சு நடந்து கொண்டிருந்த வேளையில், ஈரானின் இரு முக்கிய உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர்களைப் கொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்காவின் முன்னணி நாளிதழ்களான ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ (The Washington Post) மற்றும் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ (The New York Times) ஆகியவை செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகளின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது.
டிரம் நிர்வாகம் இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர தூதரக ரீதியிலான உடன்படிக்கையை மேற்கொள்ள முயன்றுகொண்டிருந்தது.
அந்தச் சமயத்தில், ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) மற்றும் அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) ஆகியோரைக் குறிவைத்து படுகொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக வாஷிங்டன் பலத்த சந்தேகமடைந்தது.
இத்தகைய படுகொலைகள் நடந்தால், அது ஒட்டுமொத்த பேச்சுவார்த்தையையும் சீர்குலைத்து, மீண்டும் போரை மூட்டிவிடும் என்று அமெரிக்க அதிகாரிகள் கடுமையாக அஞ்சினர்.
இது குறித்துப் பேசிய அமெரிக்க அதிகாரி ஒருவர்,
“அத்தகைய நபர்களை நீங்கள் கொன்றால், சமரசத்தை விரும்பும் நிதானப்போக்குடைய மனிதர்களைக் (Pragmatists) கொல்வதாக அர்த்தம்” என்று கவலை தெரிவித்துள்ளார்.
இந்த ஆபத்து மிகவும் தீவிரமாக இருந்ததால், கடந்த வசந்த காலத்தில் (Spring) சில இடைத்தரகர்கள் மூலமாக ஈரானுக்கு அமெரிக்கா ரகசிய எச்சரிக்கை விடுத்திருந்தது.
மேலும், தூதரக முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் போது ஈரானின் அரசியல் தலைமைகளை இலக்கு வைக்க வேண்டாம் என்று கடந்த மார்ச் மாத தொடக்கத்திலேயே இஸ்ரேலிடம் அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தியிருந்தனர்.
இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், “அமைதி செயல்முறை அதன் போக்கில் முழுமையாக நடந்து முடிவதையே அதிபர் விரும்புகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், ஈரானின் தற்போதைய அரசியல் மற்றும் ராணுவக் கட்டமைப்பு தொடர்ந்து அதிகாரத்தில் நீடிக்கவே வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்த அமெரிக்க அதிகாரிகள், பின்னர் தங்களது போக்கை மாற்றி, பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முன்னுரிமை அளித்தனர். ஆனால் இஸ்ரேலோ இதற்கு மாறான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது.
முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஆரோன் டேவிட் மில்லர் இது பற்றிக் கூறுகையில்,
“இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் நோக்கங்களுக்கு இடையே உள்ள முரண்பாட்டையும், அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு பேச்சுவார்த்தையையும் முறியடிக்க வேண்டும் என்ற இஸ்ரேல் பிரதமரின் அசைக்க முடியாத நோக்கத்தையும் காட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில், ஈரானின் மூத்த தேசிய பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானியை (Ali Larijani) இஸ்ரேல் படுகொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்தது.
“அதிஉச்ச தலைவர் (Supreme leader) படுகொலை செய்யப்பட்டது திருப்புமுனை அல்ல, லாரிஜானியின் படுகொலைதான் உண்மையான திருப்புமுனை. அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த ஒரு ஈரானிய அதிகாரியைத் தேடிக்கொண்டிருந்த வேளையில், அவர் திடீரென இல்லாமல் ஆக்கப்பட்டார்” என்று மேற்கத்திய அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்பின்னர், ஏப்ரல் மாதத்தில் ஆரம்பகட்ட போர்நிறுத்தத்தை எட்டவும், ஜூன் மாதத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பரந்த கட்டமைப்பு ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்தவும் அராக்சியும் காலிபாஃபும் தான் வாஷிங்டனின் முதன்மைத் தொடர்பாளர்களாக மாறினர்.
ஏப்ரல் 8 போர்நிறுத்தத்திற்குப் பிறகும் கூட, இந்த இரு அதிகாரிகளையும் இஸ்ரேல் இலக்கு வைக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் நம்பினர்.
ஏப்ரல் 12 அன்று, ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாஃப், அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸ் (JD Vance) உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்லாமாபாத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, இஸ்ரேலின் தாக்குதல் அச்சுறுத்தல் குறித்த உளவுத்துறைத் தகவல் கிடைத்தது.
இதன் காரணமாக அவரது விமானம் அவசரமாக மஷ்ஹாத் (Mashhad) நகரில் தரையிறக்கப்பட்டு, பின்னர் அவர் தரைவழியாகத் தெஹ்ரானுக்குப் பயணம் செய்தார் என்று ‘தி நியூயார்க் டைம்ஸ்’ குறிப்பிட்டுள்ளது.
தற்போது வரை வாஷிங்டன் தூதரக ரீதியிலான அமைதிக்கு முன்னுரிமை அளித்து வரும் வேளையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரானுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டையே தொடர்ந்து ஆதரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் குறித்து வாஷிங்டனில் உள்ள இஸ்ரேிய தூதரகம் எந்தவொரு கருத்தும் தெரிவிக்க மறுத்துவிட்டது.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 03, 2026
Rating:

கருத்துகள் இல்லை: