Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

சபரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய மருத்துவபீட வளாகம் பிரதமர் தலைமையில் மாணவர் பயன்பாட்டிற்கு கையளிப்பு!

 

நாட்டுமக்களுக்கு உயர்ந்த தரத்திலான சுகாதார சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட தேசிய இலக்கின் ஒரு முக்கிய மைல்கல்லாக சபரகமுவ பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த புதிய மருத்துவபீட வளாகத்தைக் குறிப்பிடலாம்.

மருத்துவக் கல்வி முறையின் தரத்தை மேம்படுத்துவதன் மூலமாக, மாற்றம் பெற்று வரும் சமூகத் தேவைகளையும் உலகளாவிய சுகாதாரப் போக்குகளையும் பூர்த்தி செய்யக்கூடிய, அறிவையும் ஒழுக்கநெறிப் பண்புகளையும் கொண்ட மருத்துவர்களை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாட்டுமக்களுக்கு உயர்ந்த தரத்திலான சுகாதார சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட தேசிய இலக்கின் ஒரு முக்கிய மைல்கல்லாக சபரகமுவ பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த புதிய மருத்துவபீட வளாகத்தைக் குறிப்பிடலாம் என, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.


அத்தோடு, மருத்துவக் கல்வி முறையின் தரத்தை மேம்படுத்துவதன் மூலமாக, மாற்றம் பெற்று வரும் சமூகத் தேவைகளையும் உலகளாவிய சுகாதாரப் போக்குகளையும் பூர்த்தி செய்யக்கூடிய, அறிவையும் ஒழுக்கநெறிப் பண்புகளையும் கொண்ட மருத்துவர்களை உருவாக்குவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார் .


2026.07.04 இடம்பெற்ற, சபரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட, புதிய பீட வளாகத்தை மாணவர் பயன்பாட்டிற்காகக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

 

சபரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் தற்போது ஏறத்தாழ 750 மாணவர்கள் கற்று வரும் அதேவேளை, வருடாந்தம் சுமார் 160 மாணவர்கள் மருத்துவக் கல்விக்காக இப்பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர்.

 

இப்புதிய மருத்துவபீட வளாக நிர்மாணத் திட்டத்திற்காக இலங்கை அரசாங்கம் சுமார் 2,876 மில்லியன் ரூபா நிதியைச் செலவிட்டுள்ளதுடன், சவூதி அரேபிய அரசு சுமார் 15 பில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியிருக்கின்றது.

 

இப்பீட வளாகம், ஒரே தடவையில் 500 மாணவர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்கக்கூடிய விடுதி மற்றும் 1,060 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் அமரக்கூடிய கேட்போர்கூடம் மற்றும் நிர்வாகக் கட்டிடம் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றது.

 

250 ஆசனங்களைக் கொண்ட இரண்டு விரிவுரைக்கூடங்களையும், 200 மாணவர்கள் அமரக்கூடிய ஒரு விரிவுரைக்கூடத்தினையும், சுமார் 160 மாணவர்கள் அமரக்கூடிய மூன்று விரிவுரைக்கூடங்களுமாக மொத்தம் ஆறு விரிவுரைக்கூடங்கள் இவ்வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன.

 

மேலும், மருத்துவ முற்கல்வி மையம், நூலகம், உணவகங்கள் மற்றும் ஊழியர் விடுதி போன்ற பல வசதிகளைக் கொண்டுள்ள இம்மருத்துவபீட வளாகம் 20 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்திருக்கின்றது.

 

அத்துடன், இம்மருத்துவபீட நிர்மாணத் திட்டத்திற்கு இணையாக, இரத்தினபுரி போதனா வைத்தியசாலையை மையப்படுத்தி, முழுமையான ஆய்வகங்கள் மற்றும் இதர வசதிகளைக் கொண்ட ஒன்பது மாடிகளைக் கொண்ட பேராசிரியர்கள் பிரிவு ஒன்றும் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

 

சபரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய மருத்துவபீட வளாகத்தை பிரதமர் திறந்து வைத்ததுடன், அதனைத் தொடர்ந்து பீட வளாகத்தை நேரில் பார்வையிடுவதற்கான கண்காணிப்பு விஜயமொன்றையும் மேற்கொண்டார்.

 

இந்த நிகழ்வில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

 

இந்த நிகழ்வானது நமது உயர் கல்வி மற்றும் சுகாதாரத்துறை ஆகியவற்றின் தொடர்ச்சியான அபிவிருத்தியில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைகின்றது. இப்பீட வளாகத்தை நிறுவியமையானது இலங்கையின் மருத்துவக் கல்வியில் ஆராய்ச்சி மற்றும் மருத்துவப் பயிற்சி ஆகிய பிரிவுகளைப் பலப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கியமான தேசிய முதலீடாகும்.

 

மருத்துவக் கல்வியின் தரத்தின் மீதே ஒரு சுகாதாரக் கட்டமைப்பின் வலிமையும் அதன் தாக்குப் பிடிக்கும் தன்மையும் தங்கியுள்ளது. விஞ்ஞான அறிவு, மருத்துவ நம்பிக்கை, நெறிமுறை நேர்மை மற்றும் பொதுச் சேவைக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒரு புதிய தலைமுறை மருத்துவ நிபுணர்களை உருவாக்க இப்பீடம் பங்களிக்கும் என நான் நம்புகிறேன்.

 

நமது நாட்டில் உயர்ந்த தரத்திலான மருத்துவக் கல்வியும் மருத்துவச் சேவையும் இருந்து வருவதையிட்டு நாம் பெருமிதம் கொள்ளத்தக்க ஒரு நிலைமை நமக்கு இருக்கின்றது. அது நமக்கு இருக்கும் ஒரு வலுவான அடித்தளம் என்பதால், அதனைப் பாதுகாப்பதற்கும் மேலும் பலப்படுத்துவதற்கும் நாம் மேலும் முயற்சி எடுக்க வேண்டும்.

 

இந்த பீட வளாகத்தை 20 ஏக்கர் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு அளவில் அபிவிருத்தி செய்வதற்கான வழியமைத்து, 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை தாராளமாக நிதியுதவியாக வழங்கிய சவூதி அபிவிருத்தி நிதியத்திற்கு (Saudi Fund for Development) எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முதலீடானது வருங்கால சந்ததியினருக்குப் பயனளிக்கும், இலங்கையின் அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட ஒரு நிரந்தர பங்களிப்பாகும்.

 

நிர்வாகக் கட்டிடம் மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கான (Paraclinical) கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை அரசாங்கம் சுமார் 1,096 மில்லியன் ரூபாவை முதலீடு செய்ததன் ஊடாக இந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த முடிந்தது. இதற்கு மேலதிகமாக, அத்தியாவசிய உபகரணங்களுக்காக 70 மில்லியன் ரூபாவும், கல்வி மற்றும் கற்றல் வளங்களைப் பலப்படுத்துவதற்காக 'AHEAD' திட்டத்தின் மூலம் மேலும் 194 மில்லியன் ரூபாவும் பங்களிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

 

அரசாங்கம் என்ற வகையில் இலங்கையின் சுகாதாரச் சேவையை பலப்படுத்தவும், உயர்தர சுகாதாரச் சேவைகளை அனைவருக்கும் வழங்கவும் முயற்சிக்கும் இக்காலகட்டத்தில், இப்பீடத்திற்கும் ஒரு பாரிய பொறுப்பு இருக்கின்றது. நமது நாட்டிற்குத் தேவையான திறமையான சுகாதார நிபுணர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்குவதில் இப்பீடம் முன்னிற்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்.

 

சபரகமுவ மாகாணத்திற்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த நாட்டிற்கும் சேவையாற்றும் வகையில், மருத்துவக் கல்வி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் ஒரு சிறந்த மையமாக இப்பீடம் வளர்ச்சியடையும் என நான் நம்புகிறேன், என தெரிவித்தார்.

 

இந்நிகழ்வில் சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நாசர் அல்தஸாம் அல்கஹ்தானி, சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் பேராசிரியர் சுனில் செனவி, கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன உள்ளிட்ட இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், சவூதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதிப் பிரதம நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் பைசல் எம். அல்கஹ்தானி, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, சபரகமுவ பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தர் பேராசிரியர் எஸ். ஏ. ஆரியதுரை, சபரகமுவ பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம். என். விக்ரமரத்ன உள்ளிட்ட உயர்கல்வித் துறை அதிகாரிகள், பீடாதிபதிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

சபரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய மருத்துவபீட வளாகம் பிரதமர் தலைமையில் மாணவர் பயன்பாட்டிற்கு கையளிப்பு! Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 05, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.