250 தென்னைக் கிராமங்களை நிறுவும் தேசியத் திட்டமான “சிலோன் கிங் தென்னைக் கிராமம்” ஆரம்பம்
இலங்கையை உலகளாவிய தென்னை ஏற்றுமதி கேந்திர நிலையமாக மாற்றுவதற்கான ஒரு புதிய படிமுறை.
இலங்கையின் தென்னை உற்பத்தியை ஒரு புதிய நிலைக்குக் கொண்டு செல்வது, உற்பத்தியையும் உற்பத்தித்திறனையும் அதிகரிப்பது, மற்றும் தென்னை மற்றும் அது சார்ந்த பொருட்களுக்கான சர்வதேச சந்தையை விரிவுபடுத்துவது ஆகிய நோக்கங்களுடன், பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சினால் செயல்படுத்தப்படும் “சிலோன் கிங் தென்னை கிராமம்” என்ற தேசியத் திட்டம், நேற்று (02) குருநாகல் மாவட்டத்தில் உள்ள தென்னை பயிர்ச்செய்கை சபையின் மஹாயாய தோட்ட வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த தேசியத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, மூன்று ஆண்டுகளில் தீவு முழுவதும் 250 தென்னை கிராமங்களை நிறுவுவதாகும். இதன் கீழ், 2026-ல் 75 தென்னை கிராமங்களும், 2027-ல் 80 கிராமங்களும், 2028-ல் 95 கிராமங்களும் நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தில் 212,500 புதிய இளநீர் வகைத் தென்னை மரக்கன்றுகளை நடுதல், ஏற்கனவே உள்ள சுமார் 221,500 இளநீர் வகைத் தென்னை மரங்களுக்குப் புத்துயிர் அளித்தல், மற்றும் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு நுண் பதப்படுத்தும் நிலையங்களை உருவாக்குதல் ஆகியவையும் அடங்கும்.
இது சுமார் 21,250 இளநீர் வகை தென்னை விவசாயிகளுக்கு வலுப்படுத்துதல், விவசாயிகள், சேகரிப்பாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களை இணைக்கும் ஒரு முறையான தரவு மற்றும் வர்த்தக அமைப்பையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 ஆண்டிற்காக நாடு முழுவதும் 75 இளநீர் கிராமங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், ஒரு கிராமத்தில் 500–1,000 இளநீர் மரங்களைப் பயிரிடுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வருட திட்டத்திற்காக 40.5 கோடி ரூபாய் மொத்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், தற்போது காணப்படும் 20,300 இளநீர் மரங்களுக்காக உரம் மற்றும் மட்காக்குதல் (மூடாக்கிடுதல்) என்பவற்றுக்காக ஒரு மரத்திற்கு 700 ரூபாய் நிதி உதவி வழங்குவதற்கும், 37,500 புதிய இளநீர் கன்றுகளை விவசாயிகளுக்கு 150 ரூபாய் மானிய விலையில் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
“Ceylon King Coconut Village” தேசிய திட்டத்தின் ஆரம்ப நிகழ்வை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் இளநீர் விவசாயிகளுக்கு உதவிக் காசோலை, இளநீர் மற்றும் தென்னங்கன்றுகள், வெள்ளைப் பூச்சிக் கட்டுப்பாட்டு காகிதம்/உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
அவ்வாறு இளநீர் உற்பத்தியாளர்கள் மற்றும் இளநீர் ஏற்றுமதியாளர்களுக்காக சான்றிதழ் வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதுடன், குருணாகல், கம்பஹா ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 600 உற்பத்தியாளர்களுக்கும் அதிகமானவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, தென்னை பயிர்ச்செய்கை சபை, தென்னை அபிவிருத்தி அதிகார சபை உட்பட தென்னை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தரப்பினர் என பலரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட்டது.
அவ்வாறே பிரதேச ரீதியாக இளநீர் கிராமங்களில் உருவாக்குவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தரப்பினரின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 03, 2026
Rating:

கருத்துகள் இல்லை: