சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கும் இலங்கை பிரஜை சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு 5 ஊடக அமைப்புகள் கூட்டாக கோரிக்கை!
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கை பிரஜையான சிவராசா அனோஜனுக்கு கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்கி, அவரது உயிரைக் காப்பாற்றுமாறு நாட்டின் 5 முன்னணி ஊடக அமைப்புகள் சவூதி அரேபிய ஆட்சியார்களிடம் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.
சுதந்திர ஊடக இயக்கம் (FMM), இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் (SLWJA), தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் (TMA), ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் (SLMMF) மற்றும் தெற்காசிய ஊடகப் பெண்கள் அமைப்பு (SAWM) ஆகிய ஊடக அமைப்புகள் இணைந்து இன்று வெளியிட்டுள்ள (22.09.2026) கூட்டு அறிக்கையிலேயே இந்த அவசரக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபிய சட்ட அமைப்பையும் அதன் நீதித்துறை செயல்முறைகளையும் தாங்கள் முழுமையாக மதிப்பதாகத் தெரிவித்துள்ள ஊடக அமைப்புகள், இந்த விவகாரம் ஒரு மிக முக்கிய மனுதாபிமான பரிமாணத்தைக் கொண்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளன.
இஸ்லாமிய மார்க்கத்தில் கருணை, மன்னிப்பு மற்றும் மறுபரிசீலனை ஆகியவற்றிற்கு மிக உயர்ந்த மதிப்பும் இடமும் அளிக்கப்பட்டுள்ளதை நினைவூட்டியுள்ளதுடன், அந்த உயரிய இஸ்லாமியக் கோட்பாடுகளின் அடிப்படையில் அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, விடுதலை அளிக்குமாறு சவூதி ஆட்சியாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளன.
இத்தகைய கருணைமிக்க செயல், இலங்கை மக்களால் மிகவும் நன்றியுணர்வுடன் போற்றப்படும் என்றும், இது இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் இருநாட்டு மக்களுக்கு இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் என்றும் ஊடக அமைப்புகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
அதேவேளை, ஓர் இலங்கைப் பிரஜையின் உயிர் ஆபத்தான நிலையிலிருக்கும் இந்தத் தறுவாயில், இலங்கை அரசாங்கம் தனது உயர்மட்ட இராஜதந்திர அழுத்தங்களைப் பயன்படுத்தி, சட்ட மற்றும் மனிதாபிமான ரீதியிலான அனைத்து வழிகளையும் விரைவாக முன்னெடுக்க வேண்டும் என்றும், அனோஜன் பாதுகாப்பாகத் தனது குடும்பத்துடன் மீண்டும் இணைய வழிவகை செய்ய வேண்டும் என்றும் ஊடக அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கும் இலங்கை பிரஜை சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு 5 ஊடக அமைப்புகள் கூட்டாக கோரிக்கை!
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 22, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 22, 2026
Rating:


கருத்துகள் இல்லை: