அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளப் பிரச்சினைகளுக்கு நிலைபேறான தீர்வுகளை வழங்குவோம் – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கொள்கையை நிலைபேறான முறையில் முகாமைத்துவம் செய்வதற்கும், பல வருடங்களாக நிலவிவரும் சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக 2026.06.22 ஆம் திகதிய 2494/05 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அவர்கள் இதன்போது தெரிவித்தார்.
முழு அரச சேவையிலும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகளுக்கான பரிந்துரைகளை முன்வைத்தல், புதிய தொழில்நுட்ப மற்றும் உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப எதிர்காலத் தேவைகளை முன்னறிவித்தல், அத்துடன் பிரஜைகளை மையமாகக் கொண்ட, ஒழுக்கநெறிகளைக் கடைப்பிடிக்கும் மற்றும் பொறுப்புக்கூறல் கொண்ட அரச சேவையொன்றைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான உத்திகளை முன்வைத்தல் ஆகியவை இந்த ஆணைக்குழுவின் பிரதான பொறுப்புகளில் அடங்குவதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, ஆணைக்குழு ஒரு வருடத்திற்குள் தனது பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதுடன், அதற்கான முன்மொழிவுகள், கருத்துகள் மற்றும் கோரிக்கைகள் தொழிற்சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து தற்போது கிடைத்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
அந்த முன்மொழிவுகளை ஆய்வு செய்து தயாரிக்கப்படும் இந்தச் செயற்பாட்டின் முன்னேற்றம் தொடர்பான காலாண்டு அறிக்கையொன்றையும் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மேலும் வலியுறுத்தினார்.
அத்துடன், அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவிற்காக பராமரிப்புச் சேவைகள் மற்றும் சொத்துக்களைக் கொள்வனவு செய்வதற்காக 2026.09.18 ஆம் திகதி வரை எவ்வித செலவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், குறித்த திகதி வரையில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காகவும் எவ்வித பணமும் செலவிடப்படவில்லை என்றும் பிரதமர் அவர்கள் தெளிவுபடுத்தினார்.
எவ்வாறாயினும், 2026 செப்டெம்பர் மாத சம்பளத்தை வழங்கும்போது ஆணைக்குழுவின் 04 உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக ஏறத்தாழ ரூ. 508,988.00 தொகையை செலுத்த வேண்டியுள்ளதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
பிரதமர் ஊடகப் பிரிவு
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 24, 2026
Rating:

கருத்துகள் இல்லை: