ஜெட் A-1 விமான எரிபொருள் குழாய் மற்றும் முத்துராஜவெல புதிய எண்ணெய் தாங்கிகள் வளாகத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்த நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய உரை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முழுமையான உரை:
நாட்டின் வலுசக்தி துறைக்கு மிகச்சிறந்த, மேம்பட்ட மற்றும் திட்டமிடப்பட்ட செயல்திட்டம் ஒன்று அவசியமாகும். ஆனால், நாம் கடந்த காலத்தை திரும்பிப் பார்த்தால், வலுசக்தி துறை மற்றும் அரச நிறுவனங்கள் மீது மக்களிடையே நல்ல நம்பிக்கை இருக்கவில்லை. நமது பொருளாதாரத்திற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC), இலங்கை மின்சார சபை (CEB) றுவனங்களும் பெரும் சுமையாக மாறியிருந்தன.
குறிப்பாக பெற்றோலிய கூட்டுத்தாபனம், 840 பில்லியன் ரூபா (84,000 கோடி ரூபா) கடன் செலுத்த வேண்டியுள்ளது. அந்தக் கடன் தொகையானது அரச வங்கிகளின் கட்டமைப்பை எந்தளவிற்கு பாதித்தது என்றால், அரச வங்கிகள்கூட கடுமையான ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டன.
எனவே, இந்த அரச நிறுவனங்கள் விற்கப்பட வேண்டும், தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்ற கருத்து சமூகத்தில் பரவலாக உருவாகத் தொடங்கியது. இனிமேல் இவற்றை அரசாங்கத்தால் நிர்வகிக்க முடியாது, அரசாங்கம் இவற்றை கைவிட வேண்டும் என்ற கருத்து காணப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வரும்போதே பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சுத்திகரிப்புப் பிரிவு, கைவிடப்படும் திட்டங்களில் ஒன்றாக இருந்தது.
ஆனால்,நமது நாட்டின் வலுசக்தி சந்தை மிகவும் சிறியது என்றாலும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வாழ்வின் இயக்கத்திற்காக வலுசக்தி துறையில் முக்கிய பங்கு அரசாங்கத்திடம் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம். எனினும், அந்த நிலைப்பாட்டை சமூகத்திற்குப் புரிய வைப்பதற்கும், தலையீடு அவசியம் என்று மக்களுக்கு உறுதிப்படுத்தவும், அந்த நிறுவனங்களின் செயல்திறனை உயர்த்தி மக்கள் எதிர்பார்க்கும் சேவைகளை முறையே வழங்க வேன்டும். அதற்காக மிகச்சிறந்த செயல்திறனை வழங்குவது இந்த நிறுவனங்களின் பொறுப்பாகும். தற்பொழுது எமது தலைவர், பணிப்பாளர் சபை, உயர் முகாமைத்துவம் மற்றும் ஏனைய ஊழியர்கள் மிகச்சிறந்த செயல்திறனுடன் பணியாற்ற முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.
கடந்த காலத்தில் இந்த நிறுவனங்கள் பெருமளவில் அரசியல்மயமாக்கப்பட்டிருந்தன. அரசியல் மேடைகள் அமைத்ததும், ஆட்சியைப் பிடித்த பிறகு மற்றவர்களைத் தாக்குவதற்காக இந்த நிறுவனங்களிலிருந்துதான் குழுக்கள் அனுப்பப்பட்டார்கள். ஆனால், கடந்த இரண்டு வருடங்களில் நாம் ஆட்சிக்கு வந்த பிறகு, அரசியல் தேவைகளுக்காக நிறுவனத்திற்குப் புதிய ஊழியர்களை நிரப்பும் கலாச்சாரம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்காக 4 பொறியியலாளர்கள் மற்றும் Jet A-1 எரிபொருள் திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக விமான நிலையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் 10 ஊழியர்கள் போன்ற அவசியமான சில ஊழியர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர். கடந்த காலத்தைப் போன்று அமைச்சர்களின் பிரதேசங்களில் இருந்து ஊழியர்களை நிரப்புவதை நாங்கள் முழுமையாக நிறுத்திவிட்டு, அரசியல்மயமாக்கலற்ற முறையில் விஞ்ஞான ரீதியாக இந்த நிறுவனங்களை செயற்படுத்தி வருகிறோம்.
வலுசக்தி சந்தைக்குள் வலுவான அரச பங்கைப் பராமரித்துக்கொண்டு மக்களுக்குச் செயல்திறன்மிக்க சேவையை வழங்குவதே எமது நோக்கமாகும். அந்த எதிர்பார்ப்பை
நிறைவேற்றுவதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நாம் வெற்றியடைந்திருப்பதை கண்டு கொள்ளலாம்.
தனியார் துறையை வலுசக்தி சந்தைக்கு அழைத்து, CPC-யை போட்டியிடச் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். சந்தையில் போட்டியாளர்கள் இருக்கிறார்கள், அதன் பிறகு CPC-யின் செயல்திறன் மேம்படும் என்று கருதினார்கள். ஆனால் இன்று என்ன நடந்திருக்கிறது என்றால், CPC நிர்ணயித்த விலைக்கு மற்ற நிறுவனங்களால் விற்க முடியாதுள்ளது.
கடந்த காலத்தில் நமது CPC-யிடம் டீசல் சந்தையில் 58% அளவிலான பங்கு இருந்தது. ஆனால் கடந்த மாதம் CPC-யின் சந்தைப் பங்கு 74% ஆக உயர்ந்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலையுடன் தனியார் வழங்குநர்களால் போட்டியிட முடியவில்லை. அதனால் அவர்கள் எரிபொருள் விநியோகத்தை குறிப்பிடத்தக்க அளவில் குறைத்துள்ளனர்.
CPC அதைவிடக் குறைந்த விலைக்கு விற்றாலும் லாபத்தை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதாவது CPC நிறுவனம் சந்தையின் மிகச்சிறந்த போட்டியாளராக மாறியுள்ளது. இருப்பினும், எண்ணெய் சந்தை நம் கையில் மட்டுமே இருந்திருந்தால் இதைவிடச் சிறந்த செயல்திறனுடன் கூடிய திட்டத்தை உருவாக்கியிருக்க முடியும். ஆண்டு முடிவில்தான் லாப நட்டக் கணக்கீடு செய்யப்படுகிறது. எங்களால் விலையை ஏற்ற இறக்கத்திற்குட்படுத்தி சிறந்த சேவையைப் வழங்க முடியும், ஆனால் தனியார் துறைவசம் ஒரு பங்கு இருப்பதால் தற்போது எம்மால் அதைச் செய்ய முடியாதுள்ளது.
இந்த அனைத்து சவால்களுக்கும் மத்தியில் கடந்த ஆண்டு CPC நிறுவனம் 36 பில்லியன் ரூபா லாபத்தையும், CPSTL நிறுவனம் 3.5 பில்லியன் ரூபா லாபத்தையும் ஈட்டின. அதுமட்டுமின்றி இந்த ஆண்டு இதுவரை CPC நிறுவனம் 28 பில்லியன் ரூபா லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
எனவே வங்கிக் கடன்களில் இயங்கிய நிறுவனங்கள் இன்று குறிப்பிடத்தக்க அளவில் சாதகமான கணக்கை பதிவு செய்துள்ளனர். எனவே நிறுவனக் கட்டமைப்பாக எடுத்துக் கொண்டால் நாம் எதிர்பார்த்த மட்டத்திற்கு வளர்ச்சி பெற்றுள்ளோம்.
அடுத்ததாக நமது முக்கிய சவாலாக இருப்பது தேசிய வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகும். தற்போதுள்ள சேமிப்புத் கொள்ளளவின்படி எங்களிடம் 23 முதல் 25 நாட்களுக்கு போதுமான எரிபொருள் மாத்திரம் காணப்படுகின்றன. அது நாட்டின் வலுசக்தி பாதுகாப்பிற்கு நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தக்கூடும்.
எனவே குறைந்தபட்சம் 45 நாட்களுக்கான சேமிப்புத் கொள்ளளவைப் பராமரிப்பதற்காக குழாய் கட்டமைப்பை விரிவுபடுத்துதல், இறக்கும் நேரத்தைக் குறைத்தல் மற்றும் ஒரு இலட்சம் கனமீட்டர் தாங்கி கட்டமைப்புத் திட்டங்கள் என்பன ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய 104,000 கனமீட்டர் தாங்கி கட்டமைப்பை இப்போது ஆரம்பித்துள்ளோம்.
வலுசக்தியை மக்களுக்குக் குறைந்த விலையில் வழங்குவது எப்படி என்பது தான் அடுத்துள்ள முக்கிய விடயமாகும். தற்போது உள்நாட்டில் உருவாகும் சூழ்நிலைகளுக்கு நமது பொருளாதாரம் ஈடுகொடுக்கிறது. கடந்த காலங்களில் 500 முதல் 700 பில்லியன் ரூபா வரையிலான வங்கி மேலதிக பற்றுக்களின் மீதே திறைசேரி இயங்கிக்கொண்டிருந்தது. ஆனால் கடந்த ஆண்டின் இறுதியில் திறைசேரி கணக்கில் 1.2 டிரில்லியன் ரூபா மேலதிகத்தை தக்கவைத்துக் கொள்ள எம்மால் முடிந்தது. தற்போதும் 500-700 பில்லியன் ரூபா மேலதிக நிதியைப் பராமரித்து வருவதால், உள்நாட்டுப் பொருளாதார அசைவுகளுக்கும் அதிர்ச்சிகளுக்கும் ஈடுகொடுக்கும் திறன் நமக்குக் கிடைத்துள்ளது. ஆனாலும் நாம் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய பிரச்சினை என்னவென்றால், வெளிப்புறமான பொருளாதார அழுத்தங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதாகும். அதை நம்மால் கட்டுப்படுத்த
முடியாது. அதில் அதிக பாதிப்பு ஏற்படும் துறை எரிபொருள் விநியோகத் துறையாகும். பெப்ரவரி 28 ஆம் திகதி மத்திய கிழக்கில் போர் தொடங்கியபோது, வலுசக்தித் துறை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளானது. மக்கள் அச்சத்தில் வரிசைகளில் நிற்கத் தொடங்கினர், ஜூலை மாதத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று சிலர் கூறினர். ஆனால் CPC மற்றும் CEB உள்ளிட்ட அரச நிறுவனங்கள் இரவும் பகலும் கடினமாக உழைத்து, தடையற்ற மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்தன. இப்போது நாம் தடையற்ற வலுசக்தி விநியோகத்தை உறுதி செய்யும் அச்சுறுத்தலில் இருந்து மீண்டுள்ளோம்.
இப்போது நாம் எதிர்கொள்ளும் பிரச்சினை விலை நிர்ணயம் பற்றிய பிரச்சினையாகும். உலகச் சந்தையில் சுத்திகரிக்கப்பட்ட டீசல் பெரல் ஒன்றின் விலை 80 டொலரிலிருந்து 170 டொலர் வரையிலும் (91% ஆல்) மற்றும் பெற்றோல் விலை 70 டொலரிலிருந்து 136 டொலர் வரையிலும் (80% ஆல்) உயர்ந்தது. குறுகிய காலத்தில் உலகச் சந்தையில் எரிபொருள் விலையில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த முழுச் சுமையையும் மக்கள் மீது சுமத்தாமல், இந்த செலவை மக்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திறைசேரி (Treasury) ஆகியவற்றுக்கு இடையே பகிர்ந்து கொள்ள நாம் தீர்மானித்தோம். அதன்படி ஏப்ரல் முதல் 5 மாதங்களுக்கு 60 பில்லியன் ரூபாய் (6000 கோடி ரூபாய்) எரிபொருள் மானியமாக திறைசேரியிலிருந்து வழங்கப்பட்டது.
அதில் டீசல் லீட்டர் ஒன்றுக்கு 100 ரூபாயையும், பெற்றோல் லீட்டர் ஒன்றுக்கு 20 ரூபாயையும் திறைசேரி பொறுப்பேற்றது.
மீண்டும் செப்டம்பர் நடுப்பகுதியில் உலகச் சந்தையில் விலை உயர்ந்த போது, ஒக்டோபர் 1 ஆம் திகதி டீசல் விலை 80 ரூபாவால் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும், ஆனால் நாம் 10 ரூபாவால் மட்டுமே உயர்த்தி, 70 ரூபாய் சுமையை திறைசேரி மூலம் ஏற்றுக்கொண்டோம்.
அதன்படி ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய 3 மாதங்களுக்கு 41 பில்லியன் ரூபாய் (4100 கோடி) மானியமாக திறைசேரியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது. விலை சூத்திரத்திற்கு அமைய, செலவை விடக் குறைந்த விலைக்கு விற்குமாறு அரசு கூறினால், அந்தச் செலவுச் சுமையை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எனவே, CPC மற்றும் CPSTL ஆகிய நிறுவனங்கள் எக்காரணம் கொண்டும் தங்களின் உற்பத்திச் செலவை விடக் குறைந்த விலைக்கு சந்தைக்கு எரிபொருளை வழங்கக் கூடாது. அந்த இடைவெளியை அரசாங்கமே ஏற்க வேண்டும். அதுவே நமது கொள்கையாகும். ஆனால், செலவைக் குறைப்பது எப்படி என்பதே உங்களின் பொறுப்பாகும். அதில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் (CPC) தொடர்புபட்ட மேலும் பல முக்கிய பொருளாதாரக் கருவிகள் உள்ளன.
கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதன் மூலம் நாம் மேலதிக வெளிநாட்டுச் செலாவணியை வருமானமாக ஈட்டியுள்ளோம். இந்த ஆண்டில் இதுவரை விமானங்களுக்கு எரிபொருள் விநியோகித்ததன் மூலம் மாத்திரம் 384 மில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளோம். கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்போதுள்ள 11 மில்லியன் பயணிகள் கொள்ளளவை மேலும் 10 மில்லியனால் அதிகரிப்பதற்காக 800 மில்லியன் டொலர் மதிப்பிலான புதிய திட்டத்தை நவம்பர் மாதத்தில் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதற்காக பௌசர் வாகனங்களுக்கு பதிலாக நேரடியாக குழாய் முறைமை மூலம் எரிபொருள் விநியோகிக்கும் திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
தற்போதுள்ள பொதுவான மானிய முறையை மாற்றி, பொதுப் போக்குவரத்து, விவசாய இயந்திரங்கள், மீன்பிடிப் படகுகள் மற்றும் காய்கறி போக்குவரத்து லொறிகள் போன்ற
உண்மையான அவசியத் தேவையுள்ள துறைகளை மட்டும் இலக்காகக் கொண்டு வழங்குவதற்கான ஒரு புதிய டிஜிட்டல் பொறிமுறையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாம் அனைவரும் இணைந்து மேற்கொண்ட நீண்டகால தொலைநோக்குக் கொண்ட வெற்றிகரமான தீர்மானங்களால், இலங்கையில் பலமான மற்றும் மக்களுக்கு சுமையற்ற ஒரு வலுசக்தி சந்தை உருவாகி வருகிறது. இதற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட தலைவர், பணிப்பாளர் சபை, நிர்வாகம் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், வெற்றிகரமான வலுசக்தி சந்தையை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம் என அழைப்பு விடுக்கின்றேன்.
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 03, 2026
Rating:
கருத்துகள் இல்லை: