Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

2027 பட்ஜட் நவம்பர் 12 சமர்ப்பிப்பு!


2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு (வரவுசெலவுத் திட்ட உரை/வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்தல்) 2026 நவம்பர் 12ஆம் திகதி மேற்கொள்ளப்படுவதுடன், அதனைத் தொடர்ந்து நவம்பர் 13ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை விவாதத்தை நடத்துவதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.


சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அண்மையில் (25) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இதற்கமைய, ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீடுக்காக ஒக்டோபர் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.


நிதி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி 2026 நவம்பர் 12ஆம் திகதி வியாழக்கிழமை ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டை (வரவுசெலவுத் திட்ட உரை) மேற்கொள்வதற்கும், அதனைத் தொடர்ந்து நவம்பர் 13ஆம் திகதி முதல் நவம்பர் 20ஆம் திகதி வரை 07 நாட்களுக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. 


இதற்கமைய, நவம்பர் 20ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நடைபெறும்.


அதனைத் தொடர்ந்து, நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு குழுநிலை விவாதத்தை நடத்துவதற்கும், டிசம்பர் 14ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.


இந்தக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறை தினங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர, சனிக்கிழமைகள் உட்பட அனைத்து நாட்களிலும் வரவுசெலவுத் திட்ட விவாதம் நடைபெறும். அத்துடன், இந்த அனைத்து நாட்களிலும் பாராளுமன்றம் மு.ப 9.30 மணிக்கு கூடவுள்ளது.


அதற்கமைய, அனைத்து நாட்களிலும் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.


அதன் பின்னர், மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான 5 கேள்விகளுக்கும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் ஒரு கேள்விக்குமாக நேரம் ஒதுக்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய, விவாதம் மு.ப 11.00 மணி முதல் பி.ப 6.00 மணி வரை நடைபெறவுள்ளது. வாக்கெடுப்புகள் நடைபெறும் இரண்டு நாட்களைத் தவிர்ந்த ஏனைய அனைத்து நாட்களிலும் பி.ப 6.00 மணி முதல் பி.ப 6.30 மணி வரை அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் 50:50 என்ற விகிதாசார அடிப்படையில் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைகள் மீதான விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.


மேலும், இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதக் காலப்பகுதியில் அரசாங்கத் தரப்புக்கு 60 சதவீதமும் எதிர்க்கட்சிக்கு 40 சதவீதமும் என்ற அடிப்படையிலும், குழுநிலை விவாதக் காலப்பகுதியில் அரசாங்கத் தரப்புக்கு 40 சதவீதமும் எதிர்க்கட்சிக்கு 60 சதவீதமும் என்ற அடிப்படையிலும் நேரத்தை ஒதுக்குவதற்கு இங்கு இணக்கம் காணப்பட்டது.


அத்துடன், அமைச்சொன்றின் செலவினத் தலைப்பு தொடர்பில் வாக்கெடுப்பு கோரப்பட்டால், அது குறித்த தினத்தின் இறுதியில் பிற்பகல் 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2027 பட்ஜட் நவம்பர் 12 சமர்ப்பிப்பு! Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 30, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.