Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

சிறுவர் தினம்; கண்டிப்பதற்கு முன்னர் கேளுங்கள்; தீர்ப்பளிப்பதற்கு முன்னர் புரிந்துகொள்ளுங்கள்!


சிறுவர் தினத்தை முன்னிட்டு பெற்றோர்களுக்கு சிந்தனையை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில், பிள்ளைகளை வெறுமனே கண்டித்து வளர்ப்பதைவிட, அவர்களின் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் வாழ்வனுபவங்களைப் புரிந்துகொண்டு அன்புடனும் பொறுப்புடனும் வழிகாட்ட வேண்டும்.


இவ்வாறு கொழும்பு MIU பல்கலைக்கழகத்தின் உளவியல் துறைக்குப் பொறுப்பான சிரேஷ்ட விரிவுரையாளரும், உளசமூக ஆதரவு வலுவூட்டல் வளவாளரும், இலங்கை மனிதாபிமான மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினரும், உளசமூக ஆதரவு மையத்தின் இலங்கைக்கான தேசிய ஒருங்கிணைப்பாளருமான தேசபந்து கௌரவ கலாநிதி எஸ். பிரான்சிஸ் தெரிவித்தார்.


மட்டக்களப்பு, கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்தில், பிரதி அதிபர் திரு. வேலாப்போடி லோகநாதன் அவர்களின் தலைமையில், உளவளத் துணைக்குப் பொறுப்பான ஆசிரியை ரோகினி பத்மராஜா அவர்களின் ஒழுங்கமைப்பில், ஒக்டோபர் 1ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களுக்காக “மனதின் வலிமை பலப்படுத்தப்பட்ட சிறுவர்கள்” என்ற தொனிப்பொருளில் இன்று (30.09.2026) நடைபெற்ற சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



பிள்ளைகள் தங்களது பிரச்சினைகள், கவலைகள் மற்றும் வாழ்வனுபவங்களை பெற்றோரிடம் பகிர்ந்துகொள்ளும்போது, உடனடியாகக் கண்டிப்பதற்கும் குற்றம் சுமத்துவதற்கும் பதிலாக, பொறுமையாகச் செவிமடுத்து அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் கூறினார். மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிடுதல், அவர்களின் கருத்துக்களைப் புறக்கணித்தல் மற்றும் தொடர்ச்சியாகக் குறைகூறுதல் போன்றவை அவர்களின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அச்சமின்றி தமது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய அன்பானதும் பாதுகாப்பானதுமான குடும்பச் சூழலை உருவாக்குவது பெற்றோரின் முக்கியப் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.


“என் பிள்ளை தனது பிரச்சினையை என்னிடம் திறந்த மனதுடன் கூறுகிறானா? அவனுடைய அல்லது அவளுடைய உணர்வுகளை நான் உண்மையாகக் கேட்டு புரிந்துகொள்கிறேனா?” என்ற கேள்விகளை ஒவ்வொரு பெற்றோரும் தங்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


கல்வியில் சிறந்து, உயர்தரக் கல்வியைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் கற்று ஒரு தொழிலில் இணைவது மாத்திரம் ஒரு பிள்ளையின் முழுமையான வெற்றியாக அமையாது எனவும் அவர் குறிப்பிட்டார். தமது உணர்வுகளையும் மற்றவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ளுதல், பிறரை மதித்தல், சமூகத்துடன் இணைந்து செயற்படுதல், பொறுப்புணர்வுடனும் மனிதநேயத்துடனும் சமூகத்திற்கு பங்களித்தல் ஆகியவையும் பிள்ளைகளின் வளர்ச்சியில் முக்கியமானவை என அவர் தெரிவித்தார்.



சிறுவயதிலிருந்தே மனநிலை, உணர்வுகள், நல்ல சிந்தனை, மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவை போதியளவில் வளர்க்கப்படாத நிலையில், ஒருவர் பின்னர் கல்வியிலும் தொழிலிலும் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், சமூகத்துடன் இணைந்து செயற்படுவதிலும், பிறரைப் புரிந்துகொள்வதிலும், பொறுப்புணர்வுடன் சமூகத்திற்கு சேவை செய்வதிலும் சிரமங்களை எதிர்கொள்ளக்கூடிய நிலை உருவாகலாம் என அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய நிலை எதிர்கால தலைமுறைகளில் மீண்டும் ஏற்படாத வகையில், பிள்ளைப் பருவத்திலிருந்தே பெற்றோர்களும் பாடசாலைகளும் அவர்களின் மனநலம், உணர்வுகள், மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.


“நல்ல சிந்தனையே நல்ல நடத்தைக்கான அடித்தளம்” எனத் தெரிவித்த அவர், ஒழுக்கம் என்பது வெறுமனே கண்டிப்பதோ அல்லது கட்டுப்படுத்துவதோ அல்ல; நல்ல சிந்தனை, பொறுப்புணர்வு, பிறரை மதிக்கும் பண்பு, மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றை வளர்ப்பதே உண்மையான வழிகாட்டல் எனக் கூறினார்.


பிள்ளைகளின் நடத்தையில் மாற்றம் ஏற்படும் போது, அதனை உடனடியாகத் தவறான நடத்தை எனக் கருதாமல், அந்த மாற்றத்திற்குப் பின்னால் உள்ள அவர்களின் சிந்தனைகள், உணர்வுகள் மற்றும் வாழ்வனுபவங்களைப் புரிந்துகொள்ள பெற்றோர்கள் முயற்சிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். “பிள்ளையின் பிரச்சினையை முதலில் கேளுங்கள்; பின்னர் வழிகாட்டுங்கள்” என்பதே பெற்றோரின் அணுகுமுறையாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


பாடசாலை என்பது கல்வியை மட்டும் வழங்கும் இடமல்ல; எதிர்கால சமூகத்தை உருவாக்கும் முக்கியமான தளமாகும் எனவும் அவர் தெரிவித்தார். எனவே, பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியுடன் அவர்களின் மனநிலை, மனிதநேயம், சமூகப் பொறுப்பு மற்றும் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் திறன் ஆகியவற்றையும் வளர்ப்பதில் பெற்றோர், பாடசாலை மற்றும் சமூகம் இணைந்து செயற்பட வேண்டும் எனக் கூறினார்.


இந்நிகழ்வில் இலங்கை மனிதாபிமான மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினரும், கிழக்கு மாகாண உளசமூக சேவை இணைப்பாளருமான ஆர். சியாமளா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், பாடசாலை அதிபர் மற்றும் உளவளத் துணைக்குப் பொறுப்பான ஆசிரியையுடன் இணைந்து, தொடர்ச்சியாகப் பாடசாலைக்கு வருகை தருவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் மாணவர்கள் தொடர்பாக அவர்களின் பெற்றோர்களுடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டார்.


இதன்போது, மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தருவதில் ஏற்படும் சிரமங்களுக்குப் பின்னால் இருக்கக்கூடிய குடும்பச் சூழல், தனிப்பட்ட பிரச்சினைகள், உணர்வுகள் மற்றும் பிற காரணிகளைப் புரிந்துகொண்டு, அவர்களை குற்றம் சுமத்துவதற்குப் பதிலாக உரிய முறையில் அணுகி வழிகாட்ட வேண்டியதன் அவசியம் தொடர்பாக பெற்றோர்களுடன் கலந்துரையாடினர்.
சிறுவர் தினம்; கண்டிப்பதற்கு முன்னர் கேளுங்கள்; தீர்ப்பளிப்பதற்கு முன்னர் புரிந்துகொள்ளுங்கள்! Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 30, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.