Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

'எல் நினோ' தீவிர மழை எச்சரிக்கை: காத்தான்குடி நகர முதல்வர் தலைமையில் அவசர முன்னாயத்தக் கூட்டம்!


நாட்டில் எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய ‘எல் நினோ’ (El Niño) காலநிலைத் தாக்கம் காரணமாக, சுமார் 800 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிகக் கடுமையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனப் பிரபல வானிலை ஆய்வாளரும் புவியியல் பேராசிரியருமான நா. பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.


குறிப்பாக எதிர்வரும் 19/10/2026, 05/11/2026, 22/11/2026 மற்றும் 04/12/2026 ஆகிய தினங்களில் கடும் மின்னல், காற்று மற்றும் தீவிர மழைப்பொழிவு ஏற்படக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய வெள்ளம் உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்வது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பான அவசரக் கலந்தாலோசனைக் கூட்டம், நேற்று 06.10.2026 காத்தான்குடி நகர சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.


காத்தான்குடி நகர முதல்வர் SHM. அஸ்பர் JP, UM தலைமையில் இடம்பெற்ற இக்கலந்தாலோசனையில் நகர சபையின் செயலாளர், நகர சபையின் உறுப்பினர்கள், நகர சபை மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், காத்தான்குடி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். அத்துடன் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், ஜம்இய்யத்துல் உலமா சபை, பள்ளிவாயல்கள், ஜனாஸா நலன்புரி அமைப்பு, சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பின்வரும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


1. காலநிலை அனர்த்தங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வுகளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ பிரசங்கங்களில் முன்னெடுக்குமாறு ஜம்இய்யத்துல் உலமா சபையினால் அனைத்துப் பள்ளிவாயல்களுக்கும் வலியுறுத்தப்படுதல்.

2. அனர்த்த நிலைமை ஏற்படும் பட்சத்தில் நகர சபை, பிரதேச செயலகம், பள்ளிவாயல்கள் சம்மேளனம் மற்றும் உலமா சபை ஆகியவை இணைந்து ஒருங்கிணைந்த குழுவாகக் களத்தில் இறங்கிச் செயல்படுதல்.


3. அவசர நிலைமைகளின் போது பொதுமக்களைப் பாதுகாப்பாகத் தங்கவைப்பதற்காகப் பள்ளிவாயல்கள் சம்மேளனக் கட்டிடம், ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபம் மற்றும் முஹைதீன் மெத்தை பள்ளிவாயல் உள்ளிட்ட வளாகங்களை முழுத் தயார் நிலையில் வைத்திருத்தல்.

4. இடர் வலயங்களில் உள்ள மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுதல், அவசர விழிப்புணர்வுகளை உடனுக்குடன் வழங்குதல், முதலுதவி வசதிகளை உறுதிசெய்தல் மற்றும் தற்காலிக மீள்குடியேற்றப் பணிகளைத் துரிதப்படுத்துதல்.


இத்திட்டங்களுக்கான விரிவான அடுத்தகட்ட வேலைத்திட்டங்களை இறுதி செய்வதற்கான இரண்டாம் கட்டக் கலந்தாலோசனைக் கூட்டம், எதிர்வரும் திங்கள்கிழமை 12.10.2026 ஆம் திகதி பிற்பகல் 3:30 மணிக்கு ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
'எல் நினோ' தீவிர மழை எச்சரிக்கை: காத்தான்குடி நகர முதல்வர் தலைமையில் அவசர முன்னாயத்தக் கூட்டம்! Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 07, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.