எதிர்கால உலகிற்கு ஏற்ற கல்வி முறையைக் கட்டியெழுப்புவதில் பரீட்சைகள் திணைக்களம் தனித்துவமான பங்களிப்பை ஆற்றுகிறது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2026.10.01 அன்று பரீட்சைகள் திணைக்கள வளாகத்தில் நடைபெற்ற *“வஜ்ர பிரபா”* சிறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையின் பிரதான மதிப்பீட்டு நிறுவனமாக விளங்கும் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம், 1951ஆம் ஆண்டு முதல் 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர, சாதாரண தரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை உள்ளிட்ட தேசிய பரீட்சைகளையும், அரச சேவைப் போட்டிப் பரீட்சைகளையும் நடத்துதல், பெறுபேறுகளை வெளியிடுதல் மற்றும் சான்றிதழ்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான பரீட்சார்த்திகளின் திறன்களை மதிப்பீடு செய்வதன் மூலம், நாட்டின் கல்வி மற்றும் தொழில்துறைத் துறைகளில் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு இந்நிறுவனம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.
இந்நிகழ்வில், திணைக்களத்தின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு நினைவு அஞ்சல் முத்திரையும், ஆண்டு நிறைவு நினைவிதழும் வெளியிடப்பட்டன. அத்துடன், ஓய்வுபெற்ற பரீட்சை ஆணையாளர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், சிறார்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனமாகப் பரீட்சைகள் திணைக்களத்தின் மீது நாட்டு மக்கள் அனைவரும் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
சமூகத்தில் சமத்துவத்தையும் நீதியையும் உறுதிப்படுத்தும் நிறுவனமாக இத்திணைக்களம் செயற்படுவதுடன், திறமை மற்றும் அர்ப்பணிப்பின் அடிப்படையில் எவரும் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதிலும் இத்திணைக்களம் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டின் ஒட்டுமொத்த கல்விச் செயற்பாட்டைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதில் பரீட்சைகள் திணைக்களம் ஆற்றிவரும் தனித்துவமான பங்களிப்பையும் பிரதமர் பாராட்டினார்.
குறிப்பாக, அண்மைக் காலத்தில் ஏற்பட்ட கடுமையான அனர்த்த நிலைமைகளுக்கு மத்தியிலும், தமது வழமையான கடமைகளுக்கு அப்பாற்பட்டு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு, உயர்தரப் பரீட்சையை எவ்வித தடையுமின்றி நடத்துவதற்கு அதிகாரிகள் வழங்கிய பங்களிப்பையும் பிரதமர் பாராட்டினார்.
தீர்மானகரமான சந்தர்ப்பங்களில் அனைவரும் ஒரே நோக்கத்திற்காக ஒன்றிணைந்து செயற்படுவது திணைக்களத்திடம் காணப்படும் சிறந்த பண்பாட்டின் வெளிப்பாடு என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், இவ்வாண்டில் மேற்கொள்ளப்படவுள்ள ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்புகளுடன் தொடர்புடைய பரீட்சை நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பரீட்சைகள் திணைக்களம் வழங்கிய ஒத்துழைப்பும் பங்களிப்பும் பிரதமரால் பெரிதும் பாராட்டப்பட்டது.
75 ஆண்டுகளாகக் கட்டியெழுப்பப்பட்ட தொடர்ச்சியான நம்பிக்கையை எதிர்காலத்திலும் பாதுகாப்பதற்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலை முறையாகப் பயன்படுத்துவது அவசியம் என பிரதமர் வலியுறுத்தினார். டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி நகரும் போது, திணைக்களத்திடம் காணப்படும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் உணர்திறன் மிக்க தகவல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பையும் அவர் நினைவூட்டினார்.
அத்துடன், பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்குத் தேவையான பயிற்சி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளீன் ஹேவகே, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே உள்ளிட்ட மேலதிக பரீட்சைகள் ஆணையாளர் நாயகர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 02, 2026
Rating:

கருத்துகள் இல்லை: