இலங்கை மற்றும் பாலஸ்தீனம் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகின்றன
பாலஸ்தீன அரசுக்கான இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதிநிதி ஃபாரூக் முஹம்மது ஃபவ்ஸர், ரமல்லாவில் உள்ள அமைச்சின் தலைமையகத்தில் பாலஸ்தீன அரசின் தேசியப் பொருளாதார அமைச்சர் முஹம்மது அல்-அமூரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது, இரு தரப்பினரும் இலங்கைக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து சுமூகமான மற்றும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டனர். இதில் இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்துதல், முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவித்தல் மற்றும் வணிகங்களுக்கு இடையிலான தொடர்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் குறிப்பாக கவனம் செலுத்தப்பட்டது.
ஐந்து தசாப்தங்களுக்கும் மேலான இராஜதந்திர உறவுகளின் மூலம் கட்டியெழுப்பப்பட்ட இலங்கை மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையிலான நீண்டகால நட்பு, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு பிணைப்புகளை அமைச்சர் அல்-அமூர் நினைவு கூர்ந்தார்.
கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) 2027 ஜனவரி 14 முதல் 17 வரை நடைபெறவுள்ள 'இலங்கை எக்ஸ்போ 2027' (Sri Lanka Expo 2027) கண்காட்சி குறித்த விடயம் இக்கலந்துரையாடலில் முக்கிய கவனம் பெற்றது. பாலஸ்தீன வணிகங்கள் புதிய சந்தைகளை ஆராய்வதற்கும், வணிகக் கூட்டாண்மைகளை ஏற்படுத்துவதற்கும், இலங்கை வணிகர்களுடன் வர்த்தக மற்றும் முதலீட்டுத் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் இந்தக் கண்காட்சி வழங்கும் வாய்ப்புகள் குறித்து பிரதிநிதி ஃபவ்ஸர் அமைச்சருக்கு விளக்கினார்.
கொழும்பு துறைமுக நகரம் (Port City Colombo) மூலம் உருவாகும் வாய்ப்புகள் உட்பட இலங்கையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளையும் பிரதிநிதி ஃபவ்ஸர் சுட்டிக்காட்டினார்; அத்துடன் இலங்கையின் வர்த்தக மற்றும் முதலீட்டு முயற்சிகளில் பாலஸ்தீன தனியார் துறையின் அதிகளவிலான பங்கேற்பை ஊக்குவித்தார். குறிப்பாக, 'இலங்கை எக்ஸ்போ 2027' இல் பங்கேற்கவும், பரஸ்பர நன்மை பயக்கும் வணிக ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராயவும் பாலஸ்தீனம் முழுவதிலும் உள்ள வர்த்தக மற்றும் கைத்தொழில் சபைகளின் பிரதிநிதிகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பாக, இந்தக் கண்காட்சிக்காக பாலஸ்தீன பொது மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளை உள்ளடக்கிய தூதுக்குழுவொன்றை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான உத்தியோகபூர்வ அழைப்பு அமைச்சர் அல்-அமூருக்கு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை வரவேற்ற அமைச்சர் அல்-அமூர், வர்த்தக மற்றும் கைத்தொழில் சபைகளின் பிரதிநிதிகள் அடங்கிய பாலஸ்தீன வணிகத் தூதுக்குழுவொன்றை வழிநடத்தி 'இலங்கை எக்ஸ்போ 2027' இல் பங்கேற்பதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
மேலும், சந்தைக்கான அணுகலை அதிகரித்தல், இலங்கைச் சந்தையில் பாலஸ்தீனத் தயாரிப்புகளை ஊக்குவித்தல், தனியார் துறை வலைப்பின்னல்களை வலுப்படுத்துதல் மற்றும் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துவதற்கான புதிய வழிகளைக் கண்டறிதல் போன்ற வாய்ப்புகள் குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.
இலங்கையின் பிரதிநிதி அலுவலகம்
ரமல்லா
01 அக்டோபர் 2026
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 02, 2026
Rating:

கருத்துகள் இல்லை: