“கல்வித் துறைக்கு உயரிய தகுதியும் திறன்களும் கொண்ட மனித வளத்தைச் சேர்த்துக்கொள்வதற்கான முறையான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது” - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதுடன், கல்வி முறைமைக்கு மிகவுயர்ந்த தகுதியும் திறன்களும் கொண்ட மனித வளத்தைச் சேர்த்துக்கொள்வதற்காகவும் முறையான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாகக் கல்வியமைச்சரும் உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2026.10.24ஆம் திகதி கடவலவெவ மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய இருமாடிக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இக்கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் சுமார் 55 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளதுடன், இது எட்டு ஆரம்ப வகுப்பறைகளைக் கொண்டுள்ளது. பிரதமரின் பங்கேற்புடன் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்களுடன் சுமூகமாக உரையாடிய அவர், வகுப்பறைகளையும் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய பிரதமர்,
“இவ்வாண்டு முதல் நாம் நடைமுறைப்படுத்தி வரும் கல்விச் சீர்திருத்தங்களின் முதன்மை நோக்கம், அறிவும் திறன்களும் விழுமியங்களும் நிறைந்த பிரஜைகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுப்பதேயாகும்.
இதுவரை எமது கல்வி முறையில், மாணவர்களுக்கு அறிவை வழங்கிப் பரீட்சைகளுக்குத் தயார்படுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்தப்பட்டது. ஆனால், பெறுகின்ற அறிவை நடைமுறையில் பயன்படுத்திச் சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், புதிய ஆக்கங்களைப் படைக்கவும் ஆற்றலுள்ள மாணவர் சமூகமொன்றை உருவாக்குவதே எமக்குத் தேவையாகவுள்ளது.
அதற்காகப் புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துதல், ஆசிரியர் பயிற்சியளித்தல், பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்களை நாம் நடைமுறைப்படுத்தி வருகின்றோம். அதேபோன்று, 2027ஆம் ஆண்டிலும் கல்வி மாற்றத்திற்காகப் பெருமளவு முதலீட்டைச் செய்ய நாம் எதிர்பார்த்துள்ளோம்.
பல வருடங்களாகத் தாமதமடைந்திருந்த ஆசிரியர் மற்றும் அதிபர் நியமனங்களை மீண்டும் ஆரம்பித்து, திறன்களுக்கும் ஆற்றல்களுக்கும் முன்னுரிமையளித்துக் கல்வி முறைமையை மேலும் வலுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
பெற்றோரின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு, தமது பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை வழங்கித் தம்மைவிட அவர்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்வதாகும். எனவே, பிள்ளைகளின் கல்விக்காகப் பெற்றோர் சுமக்கும் சுமையைக் குறைத்து, அந்தப் பொறுப்பில் ஒரு பகுதியை அரசாங்கம் என்ற ரீதியில் நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எமது பிள்ளைகளிடம் பெரும் திறமைகளும் ஆற்றல்களும் உள்ளன. அத்திறமைகளை வளர்த்துக்கொண்டு நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்வதற்குத் தேவையான வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குவதே எமது நோக்கமாகும். அதற்காகவே நாங்கள் இந்தக் கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துகின்றோம், எனத் தெரிவித்தார்,
இந்நிகழ்வில் வீடமைப்பு, நிர்மாணத் துறை மற்றும் நீர் வழங்கல் பிரதியமைச்சர் ரீ.பி. சரத், பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பத்மசிறி பண்டார, பொலன்னறுவை மாநகர சபையின் முதல்வர் லலித் திஸ்ஸ குமார, பொலன்னறுவைப் பிரதேச சபையின் தவிசாளர் வசந்த குமார ஆகியோருடன் மாகாண மற்றும் வலயக் கல்வி அதிகாரிகளும் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு
“கல்வித் துறைக்கு உயரிய தகுதியும் திறன்களும் கொண்ட மனித வளத்தைச் சேர்த்துக்கொள்வதற்கான முறையான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது” - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 25, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 25, 2026
Rating:

கருத்துகள் இல்லை: