பாடசாலைகளுக்கு சூரிய மின்கலன் மூலம் இலவச மின்சாரம்! இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் பேச்சு
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச பாடசாலைகளுக்கு சூரிய மின்கலன் (சோலர் பேனல்) மூலம் இலவசமாக மின்சாரம் வழங்குவதன் ஊடாக பாடசாலைகளில் உள்ள மின்சாரப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க சீனாவின் சீ.என்.பீ.எம். நிறுவனத்துடன் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சில் நேற்று புதன்கிழமை இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது இத்திட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக அதிக கவனம் செலுத்தப்பட்டது.
இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில்,
‘யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் பல அரச பாடசாலைகள் பின்தங்கிய நிலையிலேயே இயங்கி வருகின்றன. சில பாடசாலைகளுக்கு மின்சார வசதி கூட இல்லை. இன்னும் சில பாடசாலைகளுக்கு மின்சாரம் இருந்தாலும் அதற்கான மாதாந்த கட்டணத்தை செலுத்துமளவுக்கு பெருமளவு வசதிகள் இல்லை.
எனவே, இந்த விடயம் சம்பந்தமாக சீனாவின் சீ.என்.பீ.எம். நிறுவனத்துடன் கலந்துரையாடியுள்ளோம். அவர்கள் சூரிய மின்கலன்களை (சோலர் பேனல்) பொருத்தி பாடசாலைகளுக்கு இலவசமாக மின்சாரத்தை வழங்குவதுடன், சூரிய சக்தியால் உற்பத்தி செய்யப்படும் மேலதிக மின்சாரத்தை விற்பனை செய்வார்கள். அதில் வரும் இலாபத்தில் பாடசாலைக்கும் மாதாந்தம் ஒரு தொகை வழங்குவார்கள்.
நாங்கள் முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 200 பாடசாலைகளில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக கலந்துரையாடியுள்ளோம். – என்றார்.
பாடசாலைகளுக்கு சூரிய மின்கலன் மூலம் இலவச மின்சாரம்! இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் பேச்சு
Reviewed by We Are Anonymous
on
செப்டம்பர் 13, 2018
Rating:

கருத்துகள் இல்லை: