கலாநிதி ஹிஸ்புல்லாவின் 30 வருட கால இலங்கை அரசியலில் அவரது பங்களிப்பை முஸ்லிம் சமூகம் மறந்துவிடலாகாது
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வப்றகாதுஹு....
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. பிரச்சாரங்கள் சூடு பிடித்துவரும் இவ்வேளை உங்களை அனைவரிடமும் சில விடயங்களை பகிர்ந்து ஆலோசனைகளையும் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.
மிகவும் ஒரு இக்கட்டான சூழலில் நடைபெறும் இலங்கையின் 8வது ஜனாதிபதித் தேர்தல் முஸ்லீம்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
கடந்த 11.10.2019 வெள்ளிக்கிழமை காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்தில் இம்முறை 'ஒட்டகம்' சின்னத்தில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் சகோதரர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முதலாவது பொதுக்கூட்டத்தின் பிற்பாடு சில விடயங்களை கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்களிடமும் புத்திஜீவிகளிடமும் பொதுமக்களிடமும் வேண்டுகோளாக முன்வைக்க விரும்புகிறேன்.
கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தனது முதலாவது பொதுக்கூட்டத்தில் கூறிய விடயங்களையும் கோரிக்கைகளையும் முஸ்லிம் சமூகம் இலகுவில் தட்டிக் கழித்துவிட முடியாது. அவரது கருத்தில் சில நியாயங்கள் இல்லாமலும் இல்லை. 30 வருடங்கள் இலங்கை அரசியலில் அவரது பங்களிப்பை முஸ்லிம் சமூகம் மறந்துவிடலாகாது.
தேர்தல் வந்தால் மேடை போடுவதும் எதிர்மேடை போடுவதும் ஒருவரை ஒருவர் வசைபாடுவதும் என்ற நிலை இனிமேலாவது மாற வேண்டும்.
காத்தான்குடி மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்கக்கூடியவர்கள், அனைவரது கருத்துக்களுக்கும் முன்னுரிமை அளிக்கக்கூடியவர்கள்.
ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகம் நாட்டின் முன்னேற்றத்தில் பாரிய பங்களிப்பு செய்ய வேண்டியது மிக மிக அவசியமாகும்.
எனவே, கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்கள் மாற்றுக்கருத்துள்ள நமதூர் உலமாக்கள், புத்திஜீவிகள், எதிர்கட்சி பிரமுகர்கள், இலங்கை ஷூரா கவுன்சில் உறுப்பினர்களை அழைத்து ஒரு பொதுமேடையில் சந்தித்து தனது கருத்துக்களை முன்வைத்து மாற்று கருத்துள்ளவர்களின் கருத்துக்களையும் பொதுமக்கள் முன்னிலையில் கேட்டறிய சந்தர்ப்பம் அமைத்து தரவேண்டும்.
இதற்கான ஏற்பாடுகளை செய்துதரவும் எதிர்க்கருத்துள்ள சகோதரர்களை இம்மேடைக்கு அழைத்துவரவும் என்னால் சில முயற்சிகளை முன்னெடுக்க முடியும். (இன்ஷா அல்லாஹ்)
காத்தான்குடி "பொது மேடையை அமைத்த முன்மாதிரியான மண்" என்ற வரலாற்றை படைக்கவும் இம்முறை தேர்தல் காலங்களில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இடம்பெறாதிருக்கவும் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
டாக்டர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் இதை ஏற்று அவரை பொதுமேடைக்கு அழைத்துவந்து மக்களுக்கு தெளிவை வழங்க ஒத்துழைப்பு நல்குவார்கள் என ஆவலாக எதிர்பார்க்கிறேன்.
முஹம்மத் பாயிஸ்,
சவூதி அரேபியா
கலாநிதி ஹிஸ்புல்லாவின் 30 வருட கால இலங்கை அரசியலில் அவரது பங்களிப்பை முஸ்லிம் சமூகம் மறந்துவிடலாகாது
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 14, 2019
Rating:

கருத்துகள் இல்லை: